இன்றைய நவீன உலகில் முதலீடு குறித்த விழிப்புணர்வு இளைஞர்களின் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுவும் சோசியல் மீடியா தளங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் பற்றிய பல வீடியோக்கள் வலம் வருகிறது. அப்படி இருக்கையில் இன்னமும் சிலர் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வதையே விரும்புகின்றனர். அதனாலோ என்னவோ நம்மூர் மக்களுக்கு பிக்சட் டெபாசிட் என்றால் தனி நம்பிக்கை. ஓய்வு பெற்றவர்களில் இருந்து தங்கள் குழந்தைக்காக சேமிக்க வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்கள் வரை அனைவரின் விருப்பத்தேர்வாக பிக்சட் டெபாசிட் திட்டங்கள் உள்ளது. அதேநேரம் மாதத்திற்கு ஒருமுறை தங்களுடைய முதலுக்கு மோசம் வராமல் வட்டி வருமானம் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் ஒரு வரப் பிரசாதம் என்றே சொல்லலாம்.
சரி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் வட்டி வருமானத்தை வழங்க கூடியவை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மாதம் மாதம் எப்படி வட்டி பெறுவது என்று தானே யோசிக்கிறீர்கள்? இதற்கு ஒரு வழி உண்டு. அதாவது FD திட்டங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு அசலோடு சேர்த்து முதிர்வு தேதியின் போது வட்டித் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
முதிர்வின்போது வட்டி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றால் எப்படி மாத வருமானம் பெறுவது? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இதற்கு நீங்கள் "நான் குமுலேட்டிவ் ஃபிக்சட் டெபாசிட் (Non Cumulative FD)" முறையைத் தேர்ந்தெடுக்கலாம்

இந்தப் பதிவில் Non Cumulative FD மெத்தெட் மூலமாக மாதம் ரூ.10,000 வருமானம் பெற ஒருவர் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? என்பதைப் பார்ப்போம். ஒருவர் ரூ.10,000 வருமானம் ஈட்ட விரும்பினால் வருடத்திற்கு ரூ.1,20,000 வட்டி வருமானமாகப் பெற வேண்டும். அப்போதுதான் மாதம் 10,000 ரூபாயை வாங்கிக் கொள்ளலாம். ஓய்வு பெற்றவர்களுக்கு Non Cumulative FD திட்டங்கள் சீரான வருமானத்தை வழங்கும்.
மாதம் 10,000 ரூபாய் வருமானம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?: ஒரு தனிநபர் மாதம் ரூ. 10,000 வட்டி வருமானம் பெற வேண்டும் என்று நினைத்தால் அதற்கு ரூ.1,20,000 வட்டி வழங்கும் வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இன்றெல்லாம் வங்கி மட்டுமின்றி சிறு நிதி நிறுவனங்களும் பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குகின்றன. எனவே வட்டியை ஒப்பிட்டு பார்த்து ஒரு வங்கியைத் தேர்ந்தெடுக்கலாம்.
HDFC பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் போன்ற இந்தியாவின் முன்னணி பேங்குகளில் பிக்சட் டெபாசிட்களுக்கு 6 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. அதிலும் மூத்த குடிமக்களுக்கு பொது வாடிக்கையாளர்களை விட சற்று அதிக வட்டியை வங்கிகள் வழங்குகின்றன.
6 சதவீத வட்டி: நீங்கள் ஏதோ ஒரு வங்கியைத் தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தற்போது நீங்கள் தேர்ந்தெடுத்த வங்கியில் 1 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது என்றால், அதற்கு நீங்கள் தோராயமாக ரூ.20 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும்.அப்படி செய்யும் பட்சத்தில் மாத மாதம் ரூ.10,000 வட்டி பெற்றுக் கொள்ளலாம்.
7 சதவீத வட்டி: அதுவே ஒரு வங்கியில் 1 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அப்படியானால் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய தொகை ரூ.17.14 லட்சம். இதற்கும் நீங்கள் மாத வருமானமாக ரூ.10,000 பெற்றுக் கொள்ளலாம்.
7.25 சதவீத வட்டி: ஒரு ஆண்டுக்கு 7.25 சதவீத வட்டி வழங்கும் வங்கியில் நீங்கள் ஃபிக்சட் டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது நீங்கள் ரூ.16.55 லட்சத்தை முதலீடு செய்தால் ரூ.10,000 வருமானம் சாத்தியமே.
7.5 சதவீத வட்டி: நீங்கள் ஒரு சிறு நிதி நிறுவனத்தை தேர்ந்தெடுத்து பிக்சட் டெபாசிட் செய்கிறீர்கள். அங்கு ஒரு ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது என்று வைத்துக் கொள்ளும். இப்போது நீங்கள் ரூ.16 லட்சத்தை மட்டும் முதலீடு செய்தால் போதுமானது. இதற்கும் மாதம் ரூ.10,000 வட்டி வருமானம் கிடைக்கும்.
8 சதவீத வட்டி: இன்றெல்லாம் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்ச வட்டியை வங்கிகள் வழங்குகின்றன. ஒரு முதியவர் ஓராண்டு FD திட்டத்தில் 8 சதவீத வட்டிக்கு முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால் மாத வருமானமாக ரூ.10,000 பெற்றுக் கொள்ளலாம்
வரி விதிப்பு: வங்கியில் இருந்து பெறப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
டிடிஎஸ்: ஒரு நிதியாண்டில் வட்டி வருமானம் ரூ.50,000-த்தை தாண்டினால் அதற்கு வங்கி 10 சதவீதம் டிடிஎஸ் விதிக்கும். இது பொது வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும். அதுவே மூத்த குடிமக்களாக இருந்தால் அவர்களுக்கு ரூ.1 லட்ச ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் வழங்கப்படும் பட்சத்தில் 10 சதவீத டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். ஒருவேளை உங்களுடைய வருமானம், வருமான வரி வரம்பிற்குள் இருந்தால் 15ஜி அல்லது 15H என்ற படிவத்தை நிரப்பி வங்கியில் சமர்ப்பிப்பதன் மூலம் டிடிஎஸ் பிடித்தம் செய்வதைத் தவிர்க்கலாம். அதோடு நீங்கள் 5 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்ந்தெடுத்து டெபாசிட் செய்கிறீர்களானால் உங்களுடைய வட்டி வருமானத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.


Click it and Unblock the Notifications