திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வின் போது நீண்டகாலமாக ஆசைப்பட்ட ஒரு விஷயம் நடந்தால் எப்படி இருக்கும்? அப்பப்பா! அதை சொல்வதற்கு வார்த்தைகளே இருக்காது அல்லவா? அப்படித்தான் ஒரு சாதனையைச் செய்திருக்கிறார் 28 வயதே ஆன பெண் ஒருவர்.
தனது திருமண ஏற்பாடுகள் தொடங்கிய ஒரு வாரத்திற்கு முன்பு ரூ.1 கோடி ரூபாயை சேமித்து தனது நிதி இலக்கை எட்டியுள்ளார். நிதி சுதந்திரம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியம். இதை பலர் இளம் வயதிலேயே தொடங்கி விடுவார்கள். இன்னும் சிலர் பணியில் இருக்கும் போது எதிர்காலத்தை சிந்தித்து ஓய்வூதியத்தை பற்றி திட்டமிட தொடங்குவார்கள். இன்னும் சிலரோ எதிலுமே ஈடுபடாமல், முதலீட்டு பற்றிய சிந்தனை இல்லாமல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தான் நிதி சுதந்திரத்தை பற்றியே சிந்திக்க தொடங்குவார்கள். இங்கு தான் பிரச்சனையே இருக்கிறது.
இப்படி பலர் நம் நாட்டில் இருக்கையில், திருமணத்திற்கு முன்பே ரூ.1 கோடி ரூபாயை சேமித்த இந்த பெண்ணின் கதை சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அவருடைய கதை பல இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்ததோடு, தாங்களும் இதே போன்ற நிதி நிலையை எட்ட வேண்டும் என்ற எண்ணத்திற்கும் அவர்களை ஆட்படுத்தியுள்ளது.
இதில் அந்தப் பெண் கூறிய விஷயம் தான் ஹைலைட். அது என்னவென்றால், "நான் ஒன்றும் பெரிய பொருளாதார நிபுணரோ அல்லது முதலீட்டு யுக்திகளை கையாளும் நபரோ இல்லை. என்னுடைய முதலீட்டு முறைகள் அனைத்துமே மிகவும் எளிமையானது தான்" என்று கூறி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சீரான சேமிப்பு: அந்தப் பெண், தான் எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை செய்து முடித்தார் என்பது பற்றியும் சில தகவல்களைக் கூறியுள்ளார். அவர் தனது 21-வது வயதில் சம்பாதிக்க தொடங்கியுள்ளார். அப்பொழுதிலிருந்து சிறுசிறு முதலீடுகளிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். டெக் சேல்ஸ்-இல் பணியாற்றும் அவர் பெரிய முதலீட்டு வழிகாட்டுதல்கள் எதுவுமே இல்லாமல் சீரான முதலீட்டின் மூலமாக தொடர்ந்து சேமிக்கத் தொடங்கியுள்ளார்.
அவருடைய சேமிப்பு சுமார் ஏழு வருடங்கள் தொடர்ந்துள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம், EPF, பங்குகள் என பலவற்றில் தன்னுடைய முதலீட்டை பிரித்துப் பிரித்து லாபம் பார்க்க தொடங்கியுள்ளார், இப்போது அந்த முதலீடு அனைத்தும் தான் ரூ.1 கோடியைத் தாண்ட அவருக்கு உதவியுள்ளது.
தாங்களும் இதே போல் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? அவர் எந்த குறுக்கு வழியையும் தேர்ந்தெடுக்க வில்லை. சேமிக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணிய உடனே சிலர் ஒரு மாதத்தில் தங்களுடைய பணம் இரட்டிப்பாக வேண்டும் அல்லது மூன்று மடங்காக மாற வேண்டும் என்று நினைக்கின்றனர்.
இது சரியான சிந்தனை அல்ல! முதலீட்டை பொருத்தவரையில் இரண்டு விஷயத்தை கவனமாக தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சீரான முதலீடு மற்றொன்று நீண்ட கால முதலீடு. அதேபோல எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்ய தொடங்குகிறோமோ? அந்த அளவுக்கு நிதி சுதந்திரத்தை சீக்கிரமே எட்டிவிடலாம். அதற்கு நீங்கள் நிதி நிபுணராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சரியான யுக்திகளைக் கையாண்டாலே போதுமானது.
ஒரு கோடியை எட்ட அந்தப் பெண் கையாண்ட வழிகள் என்ன தெரியுமா?: தான் சம்பாதிக்க தொடங்கிய ஆரம்ப ஆண்டுகளில் அவர் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் மட்டுமே முதலீடு செய்ய தொடங்கியுள்ளார். அதுமட்டுமின்றி தன்னுடைய சம்பளத்தில் பெரும் பகுதியை தங்கத்தில் முதலீடு செய்துள்ளார். இதனால் மற்ற வாய்ப்புகள் எல்லாம் குறைந்து போனதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். தற்போது இன்னும் அதிகமான தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கலாம் என்பது தான் அவருடைய கருத்தாக இருக்கிறது. சம்பளம் உயரும்போதெல்லாம் அதை பிற திட்டங்களில் முதலீடு செய்வதற்காக ஒதுக்கியுள்ளார்.

சந்தை ஏற்ற இறக்கங்களை எல்லாம் பார்த்து மனம் தளராமல் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ததும் அவருடைய பணம் மடங்காக உயர காரணமாக மாறியது. இனிவரும் காலத்தில் குளோபல் மார்க்கெட் மற்றும் நிலம் சார்ந்த முதலீடுகளில் கவனம் செலுத்தி அடுத்த ரூ.2 கோடி இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் Passive Income என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற கூடுதல் வருமானம் உருவாக்குவது தான் அவருடைய திட்டமாக உள்ளது.
இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை! நிதி இலக்கை எட்ட வேண்டும் என்று நினைத்தால் சந்தை ஏற்ற இறக்கங்களை எல்லாம் கவனித்து, உங்களுடைய எதிர்கால பணத் தேவைகளை கருத்தில் கொண்டு, நிதி நிபுணரை அணுகி ஆலோசனை பெற்று, அதன் பிறகு முதலீடு செய்யுங்கள்!


Click it and Unblock the Notifications