ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சேமிப்பு முறையை மக்கள் பயன்படுத்தினர். உதாரணமாக நம் தாத்தா, பாட்டிகள் தங்கத்தையே அதிகம் வாங்கினர். அதன் பிறகு நம் அப்பாக்கள் வங்கிகளில் பிக்சட் டெபாசிட் மற்றும் இதர சேமிப்பு திட்டங்களை பெரிதும் நம்பியிருந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினரோ ரிஸ்க் எடுத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை தேடி ஓடுகின்றனர். இப்படி வெவ்வேறு காலகட்டத்திலும் வெவ்வேறு முதலீடுகள் முன்னணியில் இருந்துள்ளது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் உண்மையிலேயே எது சிறப்பான லாபத்தை வழங்கியுள்ளது தெரியுமா? இந்தப் பதிவில் அது குறித்த தான் பார்க்க போகிறோம்.
2026-ஆம் ஆண்டின் மே 12-ஆம் தேதி நிலவரப்படி 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.1,54,250 என்ற விலையில் வர்த்தகமானது. அதற்கு முந்தைய நாள் இருந்த விலையை விட நேற்றைய தினம் ரூ.200 அதிகரித்தது. 10 கிராம் 22 கேரட் தங்கமும் ரூ.1,41,396 என்ற விலையை எட்டியது. இதிலிருந்து 11 ஆண்டுகளுக்கு முன்னர் சென்று தங்க விலையைப் பார்ப்போமா?
2015-ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கம் சுமார் ரூ. 26,000 முதல் ரூ. 28,000 என்ற விலையில் தான் இருந்தது. அனால் 2026-ஆம் ஆண்டிற்குள் தங்க விலை 1,54,000-த்தைத் தாண்டியுள்ளது. தங்கவிலை ஏற்றத்திற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. பொருளாதார நிச்சயமற்ற தன்மை, நாணய மதிப்பிழப்பு மற்றும் ஒவ்வொரு உலக நாடுகளிலும் இருக்கும் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கி சேமித்தது போன்ற காரணங்களே விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணிகளாக மாறியுள்ளது.

தங்கம் உண்மையிலேயே ஒரு "பிசிகல் அஸெட்" என்று சொல்லலாம். அதாவது சில நிறுவனங்களே நஷ்டத்தில் செயல்பட தொடங்கி விட்டால் திவாலாகும் நிலை ஏற்படும். ஆனால் தங்கத்தின் மதிப்பு ஒருபோதும், இது போன்ற நிலையை எட்டாது. மேலும் தேவைப்படும் போது அவற்றை அடகு வைத்து பணமாக மாற்றலாம். அப்படி இல்லை என்றாலும் விற்று பயன்படுத்திக் கொள்ளலாம். 2015-ஆம் ஆண்டில் ஒருவர் ரூ.1 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருந்தால் இன்று அதன் மதிப்பு தோராயமாக ரூ.3.3 லட்சத்தை கடந்திருக்கும்.
ஃபிக்சட் டெபாசிட்: நீண்ட காலமாக மக்கள் மனதில் முதலில் தோன்றும் வங்கி சேமிப்பு திட்டம் என்றால் அது ஃபிக்சட் டெபாசிட் திட்டம் தான். பிற திட்டங்கள் இருந்தாலும் மொத்தமாக பணம் கையில் கிடைக்கும் போது உடனே FD-யில் போட வேண்டும் என்றே நம்மில் பலருக்கும் தோன்றும். அப்படி இருக்கையில் 2015 முதல் 2026 ஆம் ஆண்டு வரையில் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் வெறும் 5 சதவீதம் முதல் 7.5 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது.
நீங்கள் 2015-ஆம் ஆண்டில் ரூ.1 லட்சத்தை FD-யில் போட்டிருந்தால், அதற்கு சுமார் ரூ.2 லட்சம் தற்போது கிடைத்திருக்கும். இதில் என்ன ஒரு நன்மை என்றால் நீங்கள் போடும் பணம் பத்திரமாக வங்கியில் இருந்திருக்கும். ஆனால் தங்கத்தோடு ஒப்பிடும்போது FD வருமானம் சற்று குறைவு தான். மேலும் FD வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். அதுவும் நீங்கள் 30 சதவீத வரி வரம்பிற்குள் வரும் நபர் என்றால், உங்களுடைய ரூ.2 லட்சம் வருமானத்தின் மதிப்பு இன்னமும் குறையும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்: கடந்த 11 ஆண்டுகளில் இந்திய பங்குச் சந்தையிலும் மாபெரும் வளர்ச்சி தென்படுகிறது. 2015 ஆம் ஆண்டில் ஒருவர் நிஃப்ட்டி 50 இன்டெக்ஸ் ஃபண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு ரூ. 3.8 லட்சம் முதல் ரூ. 4.2 லட்சம் வரையில் அதிகரித்திருக்கும்.
ஒருவர் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டில் 2015-ஆம் ஆண்டில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், தற்போது அதன் மதிப்பு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சமாக மாறியிருக்கும். மூன்று முதலீடுகளையும் ஒப்பீட்டளவில் பார்க்கும்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் முதலிடம் வகிக்கின்றன. அதன் பிறகு தங்கம் அதிக லாபத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications