இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்றாலே எத்தனையோ திட்டங்கள் இருந்தாலும், அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு என்று எப்போதும் தனி இடம் உண்டு.
அது போல அஞ்சலகம், சில இன்சூரன்ஸ் திட்டங்களையும் வழங்கி வருகின்றது. என்ன தான் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தாலும், இந்திய அஞ்சலக துறையின் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கும் ஒரு தனி வரவேற்புண்டு என்று தான் கூறவேண்டும்.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது கிராம சுமங்கல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு (Gram Sumangal Rural Postal Life Insurance Schem) திட்டத்தினை தான்.

வயது வரம்பு
சுமங்கல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம் என்பது ஒரு எண்டோவ்மெண்ட் பாலிசியாகும். இது கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாகும். இதில் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன. ஒன்று 15 ஆண்டுகால பாலிசி. மற்றொன்று 20 ஆண்டுகால பாலிசி. இந்த பாலிசியின் நுழைவு வயது 19 வயதாகும். அதிகபட்ச வயது 45 வயதாகும்.

இந்த திட்டத்தின் நன்மைகள்
இதில் 15 ஆண்டுக் காலப் பாலிசிக்கு, 6 ஆண்டுகள் (20%), 9 ஆண்டுகள் (20%), 12 ஆண்டுகள் (20%) மற்றும் 15 ஆண்டுகள் (40% மற்றும் பெறப்பட்ட போனஸ்) ஆகியவற்றிற்குப் பிறகு நன்மைகள் வழங்கப்படுகின்றன.
இதே 20 ஆண்டுக் காலப் பாலிசிக்கு, 8 ஆண்டுகள் (20%), 12 ஆண்டுகள் (20%), 16 ஆண்டுகள் (20%) மற்றும் 20 ஆண்டுகள் (40% மற்றும் பெறப்பட்ட போனஸ்) ஆகியவற்றின் பின்னர் நன்மைகள் வழங்கப்படுகின்றன.

எவ்வளவு உறுதி தொகை?
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு நாளைக்கு 95 ரூபாய் முதலீடு செய்தால், திட்டத்தின் முடிவில் உங்களுக்கு 14 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். அவ்வப்போது பணம் தேவைப்படுபவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளது. மணி பேக் பாலிஸியான இந்த கிராம் சுமங்கல் யோஜனா திட்டத்தில் அதிகபட்சமாக 10 லட்சம் உறுதி தொகையாக உள்ளது. இதே குறைந்தபட்சம் 10,000 ரூபாய் உறுதி தொகையாக உள்ளது.

பிரீமியம் எவ்வளவு?
இதற்கான பிரீமியம் தொகை நாள் ஒன்றுக்கு 95 ரூபாய் மட்டுமே, 25 வயதான ஒருவர் 7 லட்சம் ரூபாய்க்கான பாலிசியை 20 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொண்டால், அவர் மாதத்திற்கு 2853 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும், அதாவது ஒரு நாளைக்கு சுமார் 95 ரூபாய் மட்டுமே. இதுவே காலாண்டு பிரீமியம் 8449 ரூபாயாகவும், அரையாண்டு பிரீமியம் 16715 ரூபாயாகவும், ஆண்டு பிரீமியம் 32735 ரூபாயகவும் செலுத்த வேண்டியிருக்கும்.

நாமினிக்கு போனஸ் உண்டு
பாலிசியை எடுத்துக் கொண்ட பிறகு பாலிசி காலத்தில் நபர் இறக்கவில்லை என்றால், மணி பேக் பலனையும் அவர் பெறுகிறார். பாலிசி எடுத்த நபர் இறந்து விட்டால், அவரது நாமினிக்கு போனஸும் வழங்கப்படும். இது தவிர இன்னும் சில அஞ்சலக திட்டங்களும் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.