ஒரு காலத்தில் யாரோ ஒருவரிடம் மட்டுமே கிரெடிட் கார்டைப் பார்க்க முடிந்தது. ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலானோர் கிரெடிட் கார்டு பெற்று பயன்படுத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டைப் பொறுத்தவரையில் அவற்றை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. பிற வங்கி கடன்களைக் காட்டிலும் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி சற்று அதிகம். இருந்தாலும் இதை சரிவர பயன்படுத்தினால் ரிவார்ட் பாய்ண்டுகள் மற்றும் இதர பலன்களைப் பெறலாம். கிரெடிட் கார்டுகளுக்கு வட்டி இல்லா காலமும் இருக்கிறது. அதற்குள் பயன்படுத்திவிட்டு வட்டியே இல்லாமல் திருப்பிச் செலுத்தலாம்.
இப்படி பல நன்மைகள் இதில் இருந்தாலும் ஒரு சில விஷயங்களை சரியாக கையாண்டால் மட்டுமே அதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும். கிரெடிட் கார்டுகளின் நன்மையை தெரிந்து கொண்ட சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளை வைத்திருக்கின்றனர். அவற்றின் வரம்பை தெரிந்து கொண்டு செலவு செய்வது முக்கியம்.

கிரெடிட் யூட்டிலிசேஷன் ரேஷியோ என்றால் என்ன?: கிரெடிட் யூட்டிலிசேஷன் ரேஷியோ என்பது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கிரெடிட் கார்டு வரம்பில் நீங்கள் எவ்வளவு சதவீதத்தை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை சொல்லும் விகிதமாகும். நீங்கள் ஒரு வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கி இருக்கிறீர்கள்.. அதன் வரம்பு ரூ.1 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து நீங்கள் 40,000 ரூபாயை பயன்படுத்தி விட்டீர்கள். அப்படியானால் உங்கள் கிரெடிட் யூட்டிலிசேஷன் ரேஷியோ 40% ஆகும். இந்த ரேஷியோவை குறைவாக வைத்திருப்பவர்களை நல்ல நிதி நடத்தை உடையவராக வங்கிகள் கருத்தில் கொள்ளும்.
கிரெடிட் யூட்டிலிசேஷன் ரேஷியோவை அதிக அளவில் பயன்படுத்தி இருந்தால் வங்கிகள் உங்களுக்கு மீண்டும் கடன் தரலாமா? அல்லது வேண்டாமா? என்பதை யோசித்து தான் முடிவு எடுக்கும்.
ஒருவரிடம் 2,3 கிரெடிட் கார்டுகள் இருந்தால் என்ன செய்வது?: பொதுவாக இந்த கிரெடிட் யூட்டிலிசேஷன் ரேஷியோ 30 சதவீதத்திற்குள் இருந்தால் நல்லது. இந்த வரம்பு எல்லாக் கிரெடிட் கார்டுக்கும் பொருந்துமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
30 சதவீத கிரெடிட் யூட்டிலிசேஷன் ரேஷியோ ஒவ்வொரு கார்டுக்கும் உண்டா?: 30 சதவீத வரம்பு என்பது உங்களிடம் உள்ள அனைத்து கிரெடிட் கார்டுகளின் வரம்புக்கும் பொருந்தும். கிரெடிட் கார்டுகளின் மொத்த பயன்பாட்டையும் பொறுத்து கணக்கிடப்படுகிறது.
ஆனால் நீங்கள் கிரெடிட் கார்டு விண்ணப்பிக்கும் போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உங்கள் தகுதியை மதிப்பிடுவதற்கு தனிப்பட்ட கார்டின் வரம்பில் எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள் என்பதையும் கருத்தில் கொள்ளும். எனவே உங்கள் கிரெடிட் கார்டு வரம்பை 30 சதவீதத்திற்கும் கீழ் வைத்திருப்பது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கவும் பயன்படும்.
உதாரணமாக ஒரு நபரிடம் 3 கிரெடிட் கார்டுகள் இருக்கிறது அதன் மொத்த வரம்பு ரூ.4 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இதில் நிலுவைத் தொகை 80,000 ரூபாய். அப்படியானால் அந்த மாதத்தில் அவருடைய கிரெடிட் யூட்டிலிசேஷன் ரேஷியோ 20%. இது 30%-க்கும் குறைவாக இருப்பதால் அந்த நபரை நல்ல நிதி நடத்தை உடையவராக வங்கிகள் கருத்தில் கொள்ளும்.
ஆனால் ரூ.80,000 நிலுவையில் ரூ.60,000 ஒரே ஒரு கார்டில் நிலுவையில் உள்ளது. அந்தக் கார்டின் ஒட்டுமொத்த வரம்பு வெறும் ரூ.75,000-ஆக இருந்தால் அந்த குறிப்பிட்ட கார்டின் கிரெடிட் யூட்டிலிசேஷன் ரேஷியோ 80 சதவீதமாக இருக்கும். அப்படியானால் ஒரே ஒரு கார்டு மட்டும் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது என்று அர்த்தம். இப்படி இருந்தால் உங்களை நல்ல நிதி நடத்தை உடையவராக வங்கிகள் கருதாது. எனவே 2,3 கார்டுகள் இருந்தாலும் அவற்றை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
கிரெடிட் ரேஷியோவை சீராக பராமரிப்பது எப்படி?:
பிரித்து பிரித்து செலவு செய்யுங்கள்: ஒரே ஒரு கார்டை மட்டும் அதிகமாக பயன்படுத்துவதற்கு பதிலாக உங்களிடம் உள்ள எல்லாக் கார்டையும் எந்தெந்த விஷயத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்பதை கவனித்து செலவு செய்யுங்கள்.
ஒரு கார்டை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டாம்: ஒரே ஒரு கார்டில் நிறைய பெனிபிட் கிடைக்கிறது என்பதற்காக அதையே அதிகம் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை உங்கள் கிரெடிட் ரேஷியோ 80 சதவீதத்திற்கும் மேல் இருந்தால் அது உங்கள் சிபில் ஸ்கோரை குறைக்கலாம்.


Click it and Unblock the Notifications

