நாட்டில் உள்ள தனியார் துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஹெச்டிஎஃப்சி, அதன் எம்சிஎல்ஆர் விகிதத்தினை குறைத்துள்ளது.
இது அதன் வாடிக்கையாளர்களுக்கு மாத மாதம் செலுத்தும் இஎம்ஐ விகிதத்தினை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்டிஎஃப்சி வங்கி அதன் கடன்களுக்கான அடிப்படை கடன் விகிதத்தினை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதனை பற்றிய முழு விவரங்களைத் தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு
கடந்த வியாழக்கிழமையன்று நடந்த ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில், வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி ஏதும் குறைக்கப்படவில்லை. இதனால் முந்தைய விகிதமான 4% வழக்கம்போல் தொடரும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையிலும் ஹெச்டிஎஃப்சி வங்கி தனது கடன்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தினை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்
தற்போது கொரோனா நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் அதன் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என்றும் ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது. உண்மையில் நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி சூழலில், மக்கள் பலர் வேலையிழந்து தவித்து வரும் நிலையில், அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்படும் நிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக ஹெச்டிஎஃப்சி வங்கியின் இந்த வட்டி குறைப்பானது நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி குறைப்பால் என்ன பயன்?
ஹெச்டிஎஃப்சி வங்கியின் இந்த வட்டி குறைப்பால் வீட்டுக்கடன் உள்ளிட்ட எம்சிஎல்ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்ட பல கடன்களுக்கு வட்டி குறையும். இதன் காரணமாக அதன் வாடிக்கையாளர்கள் மாத மாதம் செலுத்தும் இஎம்ஐ விகிதமும் குறையும். இது தற்போதுள்ள நெருக்கடியான நிலையில், மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்த வட்டி குறைப்பானது இன்று முதல் (ஆகஸ்ட் 07, 2020) நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய வட்டி விகிதம்
ஹெச்டிஎஃப்சி வங்கியின் இந்த வட்டி குறைப்புக்கு பின்னர் புதிய வட்டி விகிதம்
ஒவர் நைட் எம்சிஎல்ஆர் - 7%
1 மாத எம்சிஎல்ஆர் விகிதம் - 7.05
3 மாத எம்சிஎல்ஆர் விகிதம் - 7.10
6 மாத எம்சிஎல்ஆர் விகிதம் - 7.20
1 வருடத்திற்கு - 7.35%
2 வருடத்திற்கு - 7.45%
3 வருடத்திற்கு - 7.55%
கனரா வங்கியும் வட்டி குறைப்பு
பொதுத்துறை வங்கியான கனரா வங்கி அதன் கடன்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தினை 30 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பும் ஆக்ஸ்ட் 7 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் இவ்வங்கி தெரிவித்துள்ளது. கனரா வங்கியின் இந்த வட்டி விகித குறைப்பால், அதன் வாடிக்கையாளார்கள் மாத மாதம் செலுத்தும் இஎம்ஐ குறையும்.
ஐசிஐசிஐ வங்கியும் வட்டி குறைப்பு
இதே போல் நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, அதன் கடன்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தினை 10 அடிப்படை புள்ளிகளை கடந்த வாரத்தில் குறைத்துள்ளது. இதன் மூலம் அதன் வாடிக்கையாளர்கள் பயன் பெற முடியும். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் வங்கிகளின் இந்த அதிரடி நடவடிக்கையானது நிச்சயம் வரவேற்கதக்க ஒரு விஷயமாகும்.


Click it and Unblock the Notifications