விலைவாசி உயர்வு தான் ஒருபுறம் மக்களை வாட்டி வதைக்கிறது என்று பார்த்தால் மருத்துவச் செலவுகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.. இது போன்ற இக்கட்டான சூழ்நிலை வந்தால் பிறரிடம் கடன் பெறாமல் இருக்க கண்டிப்பாக ஒவ்வொருவரும் இன்சூரன்ஸ் பெற்றிருக்க வேண்டும். சிலர் இன்சூரன்ஸ் பெறுவதற்கு குறைந்த ப்ரீமியம் கொண்ட பாலிசியை தேர்வு செய்கின்றனர். ஆனால் அப்படி செய்யக் கூடாது. ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு முன்னால் சில விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் வாங்க வேண்டும்.
பாலிசி வாங்கும்போது எதைக் கவனிக்க வேண்டும்?: பாலிசி பெறும்போது உங்களுடைய வயது என்ன?, எத்தனை பேர் உங்கள் குடும்பத்தில் இருக்கின்றனர்?, அவர்களுடைய ஆரோக்கியம் எப்படி இருக்கிறது? என்பதை எல்லாம் பொறுத்து தான் பாலிசி வாங்க வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையையும், மருத்துவச் செலவையும் கணக்கில் கொண்டே ஒரு நல்ல ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் ஏற்கனவே யாருக்காவது தீவிர நோய் இருந்தால் அதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பதையும் நீங்கள் பாலிசி பெறும் நிறுவனத்திடம் கேட்பது அவசியம்.
காப்பீட்டுத் தொகை: தனி நபராக பாலிசி பெறும்போது பிரீமியம் தொகை சற்று குறைவாக இருக்கும். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயன்படுத்தும் பேமிலி ஃப்ளோட்டர் பாலிசி பெற்றால் அதற்கு சற்று கூடுதல் பிரீமியம் இருக்கும். எனவே நீங்கள் எந்த பாலிசியை தேர்வு செய்கிறீர்கள்? என்பது உங்களுடைய குடும்ப நலனையும், உங்களுடைய நலனையும் பொறுத்தது.
பாலிசி பெறுவதற்கு முன்னால் கவனிக்க வேண்டிய 7 முக்கியமான விஷயங்கள்:
காப்பீட்டுத் தொகை: முதலாவதாக நீங்கள் வாங்கும் பாலிசிக்கு கிடைக்கும் தொகை தற்போதுள்ள மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இருக்குமா? என்பதை கவனிக்க வேண்டும்.
ஏற்கனவே இருக்கும் நோய்கள்: ஏற்கனவே ஏதேனும் நோய்கள் இருக்கிறதா? அப்படியானால் காப்பீட்டுத் தொகை கிடைக்க எவ்வளவு காலம் எடுக்கும்? என்பதற்கான நிபந்தனைகள் அனைத்தையும் நிறுவனத்தின் சார்பில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
ரூம் வாடகை: பாலிசி பெறுபவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் ரூம் வாடகையும் பாலிசியில் சேர்க்கப்படுமா? அதற்கு வரம்பு இருக்கிறதா? மற்ற சிகிச்சைக்கான கட்டணங்களில் தொகை குறைய வாய்ப்புள்ளதா என்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மருத்துவச் செலவுகள்: நீங்கள் வாங்கி இருக்கும் காப்பீடு எவற்றுக்கெல்லாம் பொருந்தும் என்பதை சரி பார்க்க வேண்டும். 24 மணி நேரத்திற்குள் முடியக்கூடிய சிகிச்சையா? அல்லது 24 மணி நேரத்தை கடந்தும் சிகிச்சை பெற்றால் அந்த காப்பீடு பொருந்துமா? என்ற விவரங்களையும் கவனிக்க வேண்டும்.
கோ-பேமெண்ட்: ஒரு சில பாலிசி நிறுவனங்கள் இந்த கோ-பேமெண்ட் முறையை வைத்திருக்கும். அதாவது மருத்துவ செலவில் குறிப்பிட்ட சதவீதத்தை நீங்கள் செலுத்த வேண்டும். மீதி பணத்தை நிறுவனம் செலுத்தும். எனவே உங்கள் சொந்த பணத்தில் கோ பேமெண்ட் செலுத்த வேண்டிய நிபந்தனை இருக்கிறதா? என்பதை கவனியுங்கள்.
எந்த நோய்களுக்கு பாலிசி பொருந்தும்?: என்னென்ன நோய் சிகிச்சைக்கு நீங்கள் வாங்கிய காப்பீடு பொருந்தும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் எல்லா நோய்களும் காப்பீட்டின் கீழ் கொண்டுவரப்படும் என்று சொல்ல முடியாது.
குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சைக்கு வரம்பு இருக்கிறதா?: ஒரு சில சிகிச்சை பெறும் போது பாலிசியில் அதற்கு வரம்பு கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி ஏதாவது இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக கண் அறுவை சிகிச்சைக்கு இதுபோன்ற வரம்பை நிறுவனங்கள் அமைத்திருக்கும். எனவே எந்தெந்த சிகிச்சைக்கு என்ன வரம்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குறைந்த பிரீமியம்.. அதிக காப்பீடு என்ற எண்ணத்திலேயே பாலிசி வாங்காமல் உங்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்கிறதா? எதிர்காலத் தேவைக்கு ஏற்றவாறு இருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்டே தேர்வு செய்ய வேண்டும். இதோடு மிக மிக முக்கியமாக உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற விஷயங்கள் அந்த பாலிசியில் இருக்கிறதா என்பதை நல்ல நிதி நிபுணரை அணுகி ஆலோசனை பெற்று பின்னரே வாங்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
