சம்பாதிக்க கூடிய பணத்தை வங்கி கணக்கில் அப்படியே வைத்திருக்காமல் சரியான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பெரும்பாலானவர்கள் மத்தியில் வந்துவிட்டது. இருந்தாலும் பலருக்கும் ஏற்படக்கூடிய குழப்பம் பணத்தை எதில் முதலீடு செய்வது என்பதுதான்.
பங்குச்சந்தையா, மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களா என பலரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் நான் முதலீடு செய்யவில்லை இப்பொழுது ஆரம்பித்தால் சரியாக இருக்குமா என்ற குழப்பம் கூட பலருக்கும் இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நீங்கள் புதிதாக முதலீடு பயணத்தை தொடங்கப் போகிறீர்கள் என்றால் அதற்கு முன்பு சில விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

முதலீட்டு பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக குறிப்பிட்ட சில விஷயங்களை நீங்கள் முடித்து வைக்க வேண்டும். அடுத்த ஆறு மாதத்திற்கு உங்கள் வீட்டு செலவினத்திற்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்பதை முதலில் கணக்கிட வேண்டும் . இந்த தொகையை அவசரகால நிதியாக முதலில் சேமித்து வைக்க தொடங்குங்கள். திடீரென நீங்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறீர்கள் அல்லது வேலைக்கு செல்ல முடியாத ஒரு சிக்கல் ஏற்படுகிறது அல்லது ஒரு அவசர செலவு ஏற்படுகிறது எனும்போது இந்த அவசர கால நிதி உங்களுக்கு உதவியாக வந்து நிற்கும்.
இரண்டாவதாக உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய அனைவருக்குமே மருத்துவ காப்பீடு பெற்று இருக்கிறீர்களா என்பதை கவனிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளே 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீட்டை வழங்குகின்றன. அதை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் அரசின் குறிப்பிட்ட வருமானத்தை விட நான் அதிக வருமானம் ஈட்டுகிறேன் என்பவர்கள் தனியாரிடம் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு பெற்றுக் கொள்ளுங்கள் .ஏனெனில் திடீரென ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகள் உங்களுடைய சேமிப்பு முழுவதையும் கரைத்து விடும் உங்களை பெரிய கடனாளியாகவும் மாற்றிவிடும் வாய்ப்புள்ளது. எனவே மருத்துவ காப்பீடு எடுத்து அதற்கான பிரீமியத்தை செலுத்துங்கள்.
மூன்றாவதாக வீட்டில் நீங்கள் தான் வருமானம் ஈட்டக்கூடிய ஒரே நபர் என்றால் டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. திடீரென ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உங்கள் குடும்பத்தினருக்கு டெர்ம் இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கக்கூடிய பணம் பாதுகாப்பானதாக இருக்கும். மேற்கூறிய இந்த மூன்று விஷயங்களை முடித்துவிட்டு உங்களுடைய வருமானத்தில் எவ்வளவு தொகையை மாதம் தோறும் முதலீடாக ஒதுக்க முடியும் என கவனியுங்கள்.
தேவையற்ற செலவுகளை எல்லாம் பிரித்து விட்டு உங்களுடைய சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையை முதலில் முதலீடு செய்ய தொடங்குங்கள் . பணத்தை போட்ட உடனே அதிக பணம் வேண்டும் என்ற பேராசை படக்கூடாது . உங்களுடைய முதலீட்டு பயணம் என்பது படிப்படியாக தான் இருக்க வேண்டும். தற்போது மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் எஸ்ஐபி முறையில் முதலீட்டை தொடங்குங்கள் . அதை தொடர்ச்சியாகவும் ஒழுக்கமான முறையிலும் நீங்கள் செய்து வரும்போது உங்களுக்கே முதலீடு என்றால் என்ன என்ற புரிதல் ஏற்படும். அதன் பின்னர் பங்குகள் உள்ளிட்டவற்றுக்கு செல்லலாம், எடுத்த உடனே அகல கால் வைத்தால் உங்களுக்கு பெரிய நஷ்டம் தான் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications