இன்றைய ஏஐ காலத்தில் ஒருசிலருக்கு சம்பளம் அதிகரிக்கவே இல்லை. ஆனால் சிலர் சிரமப்பட்டு தங்களுடைய வேலையையும் சரி.. சம்பளத்தையும் சரி தக்க வைத்துக் கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கும் பணவீக்கச்சூழல் சாதகமாக இல்லை. எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க போராடி வருகின்றனர். சீனியர்களுக்குத்தான் இந்த நிலைமை என்று பார்த்தால் இளம் ஊழியர்களும் அதிகரித்த வாடகை, வாழ்க்கைச் செலவுகளால் சிரமப்படுகின்றனர். இதனால் எதிர்காலச் சேமிப்புக்கு எந்தத் தொகையும் மிஞ்சுவதில்லை.
இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது. பிரச்சனை என்பது எவ்வளவு பணம் அக்கவுண்டுக்கு வருகிறது என்பதில் கிடையாது. வருகின்ற சம்பளத்தை ஒருவர் எப்படி நிர்வகிக்கிறார் என்பதில் தான் உள்ளது.
பஜாஜ் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியான உத்தம் அகர்வால் இளம் ஊழியர்கள் லக்ஸரி வீடு, வசதி மற்றும் இன்டர்நேஷனல் ட்ரிப் போன்றவற்றிற்காக அதிகம் செலவிடுகின்றனர். இதனால் வருமானத்திற்கு ஏற்றவாறு செலவுகளும் அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார்.

சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க சேமிப்பபை அதிகரிக்க வேண்டும். இளம் தொழில் முனைவோர் மற்றும் ஊழியர்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான பணப்பழக்க வழக்கங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
சம்பளம் அதிகரிக்கும்போது செலவுகளை அதிகரிப்பது: சம்பளம் கூடிவிட்டதே என்பதற்காக அடிக்கடி வெளியில் சாப்பிடுவது, மாதம் ஒரு முறை ட்ரிப் செல்வது போன்றவற்றை செய்யும் போது சேமிப்பு குறையத் தொடங்கும். இந்தச் செலவுகளை எல்லாம் தனித்தனியாக பார்த்தால் குறைவாக தோன்றும். ஆனால் சம்பளத்தின் பெரும் பகுதி இதற்கே சென்றால் எதிர்காலத்திற்கு எந்த ஒரு தொகையையும் மிச்சமாக்க முடியாது.
அதிலும் மெட்ரோ நகரங்களில் வாடகை செலவே மாத வருமானத்தில் பெரும் பகுதியை எடுத்துக் கொள்கிறது. அப்படி இருக்கையில் அங்கு பணிபுரிபவர்கள் ஆன்லைன் ஃபுட் ஆர்டர், ஹோட்டல், ஷாப்பிங் போன்ற பிற விஷயங்களுக்கு செலவு செய்யும்போது கிடைக்கும் கூடுதல் சம்பளமும் முழுமையாக கரைந்து விடுகிறது. சிலர் செலவுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு பிறகு சேமிப்பை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். இறுதியில் சேமிக்க முடியாமல் போய்விடுகிறது.
கையில் கிடைக்கும் தொகையை மட்டும் செமிப்பது: ஒரு சிலர் சம்பளம் பெற்று தங்களுக்கு உள்ள எல்லா செலவுகளையும் முடித்துவிட்டு இறுதியில் மிச்சம் இருக்கும் தொகையை சேமிக்கின்றனர். இது பலரும் செய்யும் பொதுவான தவறு. இந்த முறையை பின்பற்றுவதால் சேமிப்பு சில மாதங்களில் குறைவாக இருக்கலாம். ஒரு சில மாதங்களில் கூடுதலாகவும் இருக்கலாம். இதற்கு பதிலாக பணம் கைக்கு வந்தவுடன் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு முதலில் ஒதுக்கிவிட்டு மீதமுள்ள தொகையை செலவு செய்யலாம்.
ஒவ்வொரு பணியாளரும் தங்கள் சம்பளத்தில் 20 முதல் 30 சதவீதத்தை சேமிக்க வேண்டும். உதாரணமாக ஒருவர் மாதத்திற்கு ரூ.1 லட்சம் சம்பளம் பெறுகிறார் என்றால்.. அதில் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை கண்டிப்பாக சேமிக்க வேண்டும். ஆரம்பத்தில் குறைந்த தொகையில் தொடங்கி வருமானம் அதிகரிக்க அதிகரிக்க சேமிப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
தொடர்ந்து செய்யும் செலவுகளை கண்காணித்தல்: வாடகை, ஈஎம்ஐ, ஆன்லைன் ஆர்டர்கள் கிரெடிட் கார்டு போன்றவை உங்களுடைய மாதாந்திர சேமிப்பை மெல்ல மெல்ல குறைக்கும். எனவே சம்பளம் அதிகரிக்கும்போது இது போன்ற செலவுகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
சம்பளம் அதிகரிக்கும் போது உங்களுக்கும் தாராளமாக செலவழிக்கலாம் என்ற எண்ணம் வரும். ஆனால் மாதாந்திர செலவை கண்காணிப்பது பணம் எதற்காக? எங்கு செலவிடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள உதவும். அதற்காக எல்லா செலவுகளையும் தவிர்த்து விட வேண்டும் என்றில்லை. அதற்கு பதிலாக தொடர் செலவுகள் எதற்காக வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அவசர கால நிதிக்கு முக்கியத்துவம் தாருங்கள்: ஏற்கனவே பணவீக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது. அப்படி இருக்கையில் இனி வரும் எதிர்பாராத செலவுகளை கருத்தில் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். எதிர்பாராமல் வரும் மருத்துவ செலவுகள், குடும்ப பொறுப்புகள் பணி நீக்கங்கள் போன்றவற்றை எதிர்கொள்ள எமர்ஜென்சி ஃபண்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். குறைந்தபட்சம் அடுத்த 6 மாத செலவுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு சேமிப்பு இருப்பது நல்லது என்கின்றனர் நிதி நிபுணர்கள். இந்த சேமிப்பு இருப்பதால் நீங்கள் ஏற்கனவே செய்யும் முதலீட்டு பணத்தை எடுக்காமல், அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் எதிர்கால சிக்கல்களை தவிர்க்கலாம். ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது டேர்ம் இன்சூரன்ஸ் போன்றவற்றை வாங்கி வைப்பதும் எதிர்பாராத மருத்துவ செலவுகளில் இருந்து தப்பிக்க உதவும்.
சேமிப்பை சுமையாக பார்ப்பது: சேமிப்பை ஒருபோதும் சுமையாக பார்க்க கூடாது. எதிர்காலத்தில் நீங்கள் செலவிடும் பணம் உங்களுக்கே மீண்டும் வரப் போகிறது என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். தேவைக்காகவும் ஆசைக்காகவும் செலவிடப்படும் பணமும் மீண்டும் கைக்கு வராது. ஆனால் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்காக நீங்கள் செலவிடும் பணம் வட்டியுடன் உங்களுக்கே மீண்டும் வரும்.எனவே மாதம் மாதம் சிறு தொகையில் தொடங்கி சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க உங்களுடைய சேமிப்பையும் அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications