சென்னை: இந்தியாவில் பெரும்பாலான மக்களின் கனவாக சொந்த வீடு இருக்கிறது. படிப்பு முடித்துவிட்டு வேலைக்கு வரக்கூடிய இளைஞர்கள் எப்படியாவது சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள். பெற்றோரும் , சுற்றி இருப்பவர்களும் கூட முதலில் சொந்தமாக ஒரு வீடு வாங்கி விடு என்று தான் கூறுகின்றனர்.
பலருக்கும் தங்களுடைய இருபதுகளிலேயே சொந்தமாக வீடு வாங்குவதா? அல்லது வாடகை வீட்டிலேயே தங்கி விடலாமா என்ற ஒரு கேள்வி எழுகிறது. வாடகை பணத்தை ஈஎம்ஐ-ஆக செலுத்தினால் 20 ஆண்டுகளில் வீடு சொந்தமாகி விடும் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை வேறு என்கிறார் ஒரு பட்டய கணக்காளர்.

தங்களுடைய 20களில் இருப்பவர்கள் சொந்தமாக வீடு வாங்கலாமா அல்லது வாடகை வீட்டிலேயே இருக்கலாமா என்ற சந்தேகத்திற்கு விளக்கம் தந்திருக்கிறார். நிதின் கவுசிக் என்ற பட்டய கணக்காளர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில் 2013 ஆம் ஆண்டு ஒரு நபர் 50 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி சொந்தமாக வீடு வாங்குகிறார். மாதம் தோறும் அதற்கு 40 ஆயிரம் ரூபாயை அவர் ஈஎம்ஐ செலுத்தி வருகிறார். 20 ஆண்டுகளுக்கு 10% வட்டி என அவர் கடனை செலுத்துகிறார். அப்படி என்றால் அவர் செலுத்திய மொத்த பணம் 96 லட்சம் ரூபாய் அதில் 46 லட்சம் ரூபாய் வட்டி.
10 ஆண்டுகள் கழித்து 2022 ஆம் ஆண்டு வேறொரு நபர் 1.2 கோடிக்கு வீட்டு கடன் வாங்கி சொந்தமாக வீடு வாங்குகிறார். மாதத்திற்கு 1 லட்சம் ரூபாயை ஈஎம்ஐ செலுத்துகிறார். 20 ஆண்டுகளுக்கு அவர் செலுத்தக்கூடிய மொத்த பணம் 2.4 கோடி ரூபாய் .அவர் செலுத்திய வட்டி மட்டுமே 1.29 கோடி. அதாவது வாங்கிய கடனை விட வட்டி அதிகமாக செலுத்துகிறார்.
சொந்த வீடு வாங்காமல் இவர்கள் வாடகை வீட்டில் இருந்து வாடகை போக மீதமுள்ள பணத்தை முதலீடு செய்தால் என்ன ஆகி இருக்கும் என்பதை அவர் ஒப்பிட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டில் அந்த நபர் சொந்தமாக வீடு வாங்காமல் வாடகைக்கு இருக்கிறார். மாதம் 10 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்தி விட்டு மீதமுள்ள 30 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்கிறார். 12 சதவீத லாபம் தரும் திட்டத்தில் முதலீடு செய்கிறார் என்றால் அவருடைய பணம் 10 ஆண்டுகளிலேயே 63 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும் என கூறுகிறார்.
2022 ஆம் ஆண்டில் அதே நபர் ஒரு லட்சம் ரூபாய் ஈஎம்ஐ செலுத்தாமல் 30,000 வீடு வாடகைக்கு சென்று விட்டு 70000 ரூபாயை முதலீடு செய்கிறார் எனில் 12 சதவீத ஆண்டு லாபம் தரக்கூடிய ஒரு திட்டத்தில் முதலீடு செய்கிறார் என்றால் 1.56 கோடி ரூபாய். இவர் இளம் வயதிலேயே ஈஎம் ஐ வலையில் சிக்கி விடாதீர்கள் என கூறுகிறார்.
இளம் வயதிலேயே மாதந்தோறும் ஈஎம்ஐ என்ற பெயரில் கணிசமான தொகையை லாக் செய்து விடாமல் அதனை முதலீடு செய்து பிற்காலத்தில் உங்கள் கையில் இருக்கும் தொகையை கொண்டு கடனே இல்லாமல் சொத்து வாங்கலாம் என கூறுகிறார். நாம் வாங்கும் வீட்டின் மதிப்பு ஆண்டுக்கு 7-8 % தான் வளரும், ஆனால் நாம் செய்யும் முதலீடு அதை விட அதிக லாபம் தந்திருக்கும் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications