கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் வழக்கம் மக்களிடம் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
ஆனால் அதே நேரத்தில் தங்களுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் எது என்பதை தேர்வு செய்வதில் பலருக்கு குழப்பம் உள்ளது.
நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று முதலீடு செய்தாலும் நாம் முதலீடு செய்த ஃபண்ட் நமக்கு ஏற்றதா? என்ற சந்தேகம் அவ்வப்போது வருவதுண்டு. இது குறித்து தற்போது பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பின்னர் ஒரு முதலீட்டாளர் நிலையான வருவாய் திட்டம் அல்லது பேலன்ஸ் திட்டம் ஆகியவற்றில் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.
முதலீட்டின் நோக்கம்
உங்கள் முதலீட்டின் நோக்கம் என்ன? உங்கள் பணம் எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்யப்படுகிறது? உங்களுக்கு எந்த ஃபண்ட் சரியாக இருக்கும்? நீங்கள் எடுக்கும் ரிஸ்க் அளவு என்ன? ஆகியவை குறித்து உங்கள் நிதி ஆலோசகரிடம் முதலில் கலந்தாலோசிக்க வேண்டும். அதன் பின்னரே எந்த ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
நீண்டகால முதலீடு
முதலீட்டாளர்கள் நீண்டகால முதலீட்டை தேர்வு செய்வதாக இருந்தால் அவர் ஓரளவு ரிஸ்க் எடுப்பது சரியாக இருக்கும். எனவே இந்த வகை முதலீட்டாளர்கள் ஈக்விட்டி அல்லது பேலன்ஸ்டு ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம்.
குறுகிய கால முதலீடு
ஆனால் அதே நேரத்தில் ஒரு சில மாதங்களில் பணத்தை திரும்ப எடுக்கும் வகையில் முதலீடு செய்யும் குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு லிக்விட் ஃபண்ட் மட்டுமே ஏற்றதாக இருக்கும். அவர்கள் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்தால் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.
நிலையான வருமானம்
மேலும் ஒரு முதலீட்டாளர் நிலையான முறையில் வருமானம் தரக்கூடிய வகையில் முதலீடு செய்ய விரும்பினால் மாதாந்திர வருவாய் திட்டம் அல்லது இன்கம் ஃபண்ட் அவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். எனவே எந்த ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்து நிதி ஆலோசகரிடம் கலந்து ஆலோசித்த பின்னரே முதலீட்டு திட்டத்தை வகுக்க வேண்டும்.
திட்ட தகவல் அறிக்கை
மேலும் முதலீட்டாளர்கள் திட்ட தகவல் அறிக்கை மற்றும் முக்கிய தகவல் ஆவணம் ஆகிய இரண்டையும் படித்த பிறகே முதலீடு செய்ய வேண்டும் என்பது அவசியமான ஒன்று. இந்த ஆவணத்தின் மூலம் முதலீட்டின் விரிவான தகவலை முதலீட்டாளர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த தகவல்கள் அனைத்தும் மியூச்சுவல் ஃபண்ட் இணையதளங்களிலும் கிடைக்கின்றன என்பதால் அவற்றை பொறுமையாக படித்து அதனால் ஏற்படும் சாதக பாதகங்களை அறிந்து அதன் பின்னரே முதலீடு செய்யவேண்டும்.


Click it and Unblock the Notifications