சென்னை: இளம் வயதிலேயே எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிக்க தொடங்கி விட வேண்டும் அதனை சரியான கருவிகளில் முதலீடு செய்து விட வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் புதிதாக வேலைக்கு சென்று இருப்பவர்கள் தங்களுடைய மாத ஊதியத்திலிருந்து முதலீட்டினை எப்படி தொடங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
FinEdge நிறுவனத்தின் இணை நிறுவனர் மயங்க் பட்நகர் , Abans Investment Manager Pvt நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிக் தாக்கர் ஆகிய இருவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எப்படி முதலீடு செய்தால் தங்களின் முதல் 1 கோடி ரூபாயை எட்ட முடியும் என யோசனை வழங்கியுள்ளனர். எக்னாமிக் டைம்ஸுக்கு அவர்கள் அளித்துள்ள பேட்டியில் முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

2000ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் தற்போது 25 வயதை எட்ட உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சென்றிருப்பார்கள். இவர்கள் இப்போது முதலே முதலீடு செய்ய தொடங்கிவிட்டால் காம்பவுண்டிங் முறையில் சிறந்த லாபத்தை காண முடியும் என்கின்றனர். மாதந்தோறும் 8000 ரூபாயை சேமித்தாலே போதும் அடுத்த 20 ஆண்டுகளில் இவர்கள் கைகளில் 1 கோடி ரூபாய் கிடைத்த விடும் என யோசனை தெரிவிக்கின்றனர்.
நிதி ரீதியாக நம்முடைய வாழ்க்கையை சமநிலையாக கொண்டிருக்க வேண்டும் எனவும் அதற்கு ஏற்ற வகையில் சேமிப்பு முதலீடு என்பதை தொடங்குவதற்கு முன்பாக இளைஞர்கள் டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகிய இரண்டையும் தவறாமல் எடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்குகின்றனர்.
உங்களிடம் டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கிறது ,அதுபோக அவசரகால நிதி என ஒரு குறிப்பிட்ட நிதியை சேர்த்து வைத்துள்ளீர்கள் என்ற பட்சத்தில் மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையை முதலீடு செய்ய தொடங்கலாம் என கூறுகின்றனர்.
25 வயதாகக் கூடிய ஒரு நபர் ஒரு கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டுவதற்கு மாதம்தோறும் 20,000 ரூபாயை ஆண்டுக்கு 13 சதவீத லாபம் தரக்கூடிய மியூச்சுவல் பண்டுகளை தேர்வு செய்து முதலீடு செய்தால் 40 வயதிலேயே ஒரு கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டி விட முடியும் என கூறுகின்றனர்.
உங்களுடைய வருமானம் அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டு தொகையையும் அதிகரிக்க வேண்டும் என்ற அறிவுரையும் வழங்குகின்றனர். சிறு வயதிலேயே முதலீட்டை தொடங்கினால் காம்பவுண்டிங் முறையில் குறைந்த முதலீட்டில் பெரிய லாபத்தை காண முடியும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications