இன்றைய பணவீக்க அதிகரிப்பிற்கு மத்தியில் எல்லோருமே ஏதேனும் ஒரு திட்டத்திலாவது முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் இனி வரும் காலத்தை சமாளிக்க முடியும். அதிலும் குறிப்பாக கூட்டு வட்டி தரக்கூடிய திட்டத்தை தேர்ந்தெடுத்தால் இன்னும் நல்லது. இவை காலப்போக்கில் உங்களுடைய சிறிய முதலீட்டையும் பெரிய தொகையாக மாற்றி தரும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட்டு வட்டியை உலகின் எட்டாவது அதிசயம் என்று குறிப்பிடுகிறார்.
எதிர்காலத்தில் கடன் இன்றி வாழ ஒவ்வொருவரும் கூட்டு வட்டி தரும் ஒரு முதலீட்டு திட்டத்தில் சேமித்து வைப்பது நல்ல பலனை தரும்.
தினமும் 100 முதலீட்டுக்கு எவ்வளவு லாபம்?: எதிர்கால நலனுக்கு பணம் சேர்க்க வேண்டுமானால் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. மிகக் குறைந்த தொகையிலேயே தொடங்கலாம். உதாரணமாக நீங்கள் ஒவ்வொரு நாளும் காய்கறிக்கும், இதர வீட்டு செலவிற்கும் செலவு செய்யும் 100 ரூபாயை முதலீடு செய்தாலே போதும். இதுவே மாதத்திற்கு ரூ.3000-ஆக இருக்கும். இந்த தொகையை தொடர்ந்து முதலீடு செய்து வந்தாலே கூட்டு வட்டியின் மூலம் மிகப் பெரிய தொகையை சேமிக்கலாம்.

தினமும் ரூ.100 சேமித்தால் 25 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?: ஒருவர் தினசரி அடிப்படையில் ரூ.100 என்ற வீதத்தில் சேமித்தால் மாதம் ரூ.3000 கிடைக்கும். இந்த தொகையை மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி அல்லது பங்குச்சந்தை சார்ந்த பிற திட்டங்களில் 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.
ஒவ்வொரு திட்டத்திற்கும் வட்டி விகிதம் மாறுபடும். எனவே தோராயமான வருமானத்தை பார்ப்போம். 25 ஆண்டுகளுக்கு மொத்தமாக முதலீடு செய்தால் ஒருவர் ரூ.9 லட்சத்தை முதலீடு செய்திருப்பார். அவருக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீத லாபம் கிடைத்தால் வட்டி வருமானமாக ரூ.39.8 லட்சம் கிடைக்கும். 12 சதவீத லாபம் கிடைத்தால் ரூ.56.9 லட்சம் வருமானம் கிடைக்கும். 15 சதவீத லாபம் கிடைத்தால் ரூ.98.5 லட்சம் வருமானம் கிடைக்கும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் அடிப்படையில் உங்களுக்கு லாப விகிதம் மாறுபடும். இது ஒரு தோராயமான கணக்கீடு மட்டுமே. பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை பொறுத்து உங்களுக்கு கிடைக்கும் லாபமும் மாறுபடலாம். இப்படி முதலீடு செய்யும் பட்சத்தில் ஒருவர் 25 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.9 லட்சம் முதலீடு செய்திருந்தாலும் கூட்டு வட்டியின் மூலம் பல மடங்கு லாபம் கிடைக்கும்.
முதலீட்டின் தாரக மந்திரமே எவ்வளவு சீக்கிரம் தொடங்கப்படுகிறது என்பது தான். மேலும் ஒரு சில ஸ்மால் கேப், மிட் கேப் மற்றும் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் சமீப காலமாக நல்ல லாபத்தை கொடுத்து வருகின்றன. இருந்தாலும் பங்கு சந்தை முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதில் அரசாங்கத் திட்டங்களை போலவே நிலையான வருமானம் கிடைத்து விடும் என்று யாராலும் உத்தரவாதம் கொடுக்க முடியாது.
உங்களுடைய நிதி இலக்குகள் என்ன?, ரிஸ்க் எடுக்கும் திறன் இருக்கிறதா?, எவ்வளவு ஆண்டுகள் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள்? என்பதையெல்லாம் ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள். இந்த பதிவு வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. எந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமானாலும் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் தொடங்குங்கள்!
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications
