சென்னை: திடீரென ஏற்படக்கூடிய செலவுகளுக்கு நமக்கு தகுந்த நேரத்தில் உதவியாக இருப்பவை பெர்சனல் லோன்கள் எனப்படும் தனிநபர் கடன்கள் ஆகும். பொதுவாக எந்த ஒரு பிணையமும் வைக்காமல் வங்கிகள் நமக்கு வழங்கக்கூடிய கடன்கள் தான் பெர்சனல் லோன்கள். எந்த ஒரு பிணையமும் இல்லை என்பதால் மற்ற கடன்களுடன் ஒப்பிடும் போது பெர்சனல் லோன்களுக்கு அதிக வட்டி விகிதம் இருக்கும் .
12 முதல் 18% வரை நீங்கள் வாங்கக்கூடிய கடனுக்கு வட்டி செலுத்த வேண்டியது இருக்கும். ஒருவருக்கு எவ்வளவு பெர்சனல் லோன் வழங்க வேண்டும் என்பது எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவேளை நீங்கள் தனிநபர் கடன் வாங்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தால் உங்களுடைய வருமானத்திற்கு எவ்வளவு கடன் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். பொதுவாக கடன் வேண்டி விண்ணப்பம் செய்பவருக்கு அவரது மாதாந்திர வருமானத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கடன் அளவு கணக்கிடப்படுகிறது.
அதாவது உங்களது மாதாந்திர வருமானம் குறைவாக இருந்தால் குறைவான தொகை உங்களுக்கு பர்சனல் லோன் ஆக கிடைக்கும். அதிகமாக இருந்தால் அதிகமான தொகை கிடைக்கும்.
உதாரணமாக சில வங்கிகள் ஒருவருடைய மாத வருமானத்தில் 20 மடங்கு வரையிலான தொகையை தனிநபர் கடன்களாக வழங்குகின்றன. சில நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட மடங்கு பணத்தை மட்டுமே தனிநபர் கடனாக வழங்குவதற்கு முன் வருகின்றன. ஒரு நபரின் மாத வருமானம் ஒரு லட்சம் ரூபாய் என வைத்துக் கொண்டால் சில வங்கிகள் அதை 20 ஆல் பெருக்கி 20 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடன்களை வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த எண்களை வங்கிகள் தான் முடிவு செய்யும். சில வங்கிகள் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் தனிநபர் கடன்களை வழங்காது ஆனால் சில வங்கிகள் 40 லட்சம் ரூபாய் வரை கூட வழங்குகின்றன.
உங்களுடைய வருமானத்தை அடிப்படையாகக் கொண்டுதான் வங்கிகள் இந்த முடிவினை தீர்மானிக்கின்றன. உதாரணமாக ஆக்சிஸ் வங்கி 40 லட்சம் ரூபாய் வரையிலும், ஐசிஐசிஐ வங்கி 50 லட்சம் ரூபாய் வரையிலும் தனிநபர் கடன்களை வழங்குகின்றன.
வங்கிகள் ஒருவருடைய வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு தனி நபர் கடன்களை தீர்மானிக்க காரணம் கடன் வாங்குபவர்கள் திரும்ப அந்த தொகையை இந்த வருமானத்தில் செலுத்த முடியுமா என்பதை கணக்கீடு செய்து தான் வங்கிகள் ஒருவருக்கான கடன் அளவையே தீர்மானிக்கின்றன.இதனால் கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது.
ஒருவருக்கு எவ்வளவு தனிநபர் கடன் வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் காரணிகளில் முதலில் இருப்பது அவர்களுடைய மாதாந்திர வருமானம். அதேபோல கிரெடிட் ஸ்கோர், ஒருவருக்கு தனிநபர் கடன் வழங்கலாமா வேண்டாமா என்ற முடிவினை கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் தான் வங்கிகள் தீர்மானிக்கின்றன. கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால் உங்களுக்கு அதிக தொகை கடனாக கிடைக்கும். சில வங்கிகள் வட்டியை கூட குறைக்கும் வாய்ப்பை வழங்குகின்றன.
ஏற்கனவே நீங்கள் ஏதேனும் கடன்களை வைத்திருக்கிறீர்களா என்பதை ஆய்வு செய்த பிறகுதான் வங்கிகள் கடன்களை வழங்கும். நீங்கள் மாதம் 1 லட்சம் சம்பாதிக்கிறீர்கள், ஏற்கனவே 5 லட்சம் ரூபாய்க்கு கடன் வைத்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 12 முதல் 15 லட்சம் ரூபாய் வரை மட்டுமே கடன் கிடைக்கும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications