முன்னர் எல்லாம் ஒரு வங்கியில் நீங்கள் வங்கி கணக்கும் தொடங்க வேண்டும் எனில், வங்கிக்கு செல்ல வேண்டும். உங்களது அடையாள அட்டை, முகவரி சான்று, போட்டோ என பலவும் வேண்டும்.
அதோடு ஏற்கனவே வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் வந்து கையெழுத்திட வேண்டும். இப்படி பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், பல மணி நேரங்கள் வங்கியில் காத்திருந்து நீங்கள் கணக்குகளை தொடங்கி இருக்கலாம்.
ஆனால் இன்று தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் போட்டியினால், வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவை என பலவற்றை கருத்தில் கொண்டு, வங்கிகள் பல வசதிகளை அறிமுகப்படுத்துகின்றன.
எஸ்பிஐ அதிரடி
இந்த நிலையில் தனியார் வங்கிகள் பல வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வர வேண்டாம். அவர்களை தேடி வங்கிகள் வரும் எனும் அளவுக்கு சேவையினை அளித்து வருகின்றன. ஆனால் இவர்களை விட ஒரு படி மேலே போய் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆன்லைனிலேயே சேமிப்பு கணக்குகளை வாடிக்கையாளர்களே திறந்து கொள்ளும் வகையில் அதிரடியான சலுகையை வழங்கியுள்ளது. இது ஏற்கனவே இருந்த நிலையில், தற்போது இந்த சேவையினை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
ஆன்லைனில் திறந்து கொள்ள முடியும்
அது எஸ்பிஐயின் இன்ஸ்டா சேமிப்பு கணக்கு (SBI Insta Saving Bank Account) தான். இதனை வாடிக்கையாளர்கள் ஆன்லைனை பயன்படுத்தி தொடங்கிக் கொள்ள முடியும். இந்த எஸ்பிஐயின் இன்ஸ்டா சேமிப்பு கணக்கில் அனைத்து வசதிகளும் உண்டு. இது வாடிக்கையாளர்கள் கிளைக்கு செல்லாமலே, தாங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தொடங்கிக் கொள்ள முடியும்.
பேப்பர் ஆவணம் தேவையில்லை
அதோடு இதற்காக எந்த வித பேப்பர் ஆவணங்களும் இதற்கு தேவையில்லை என்பது தான் இதில் உள்ள நல்ல விஷயமே. இது கொரோனாவினால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் யாரும் வங்கிக் கிளைக்கு வர தேவையில்லை என்றும் எஸ்பிஐயின் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ரூபே கார்டு உண்டு
சரி எப்படி இந்த இன்ஸ்டா சேமிப்பு கணக்கினை திறப்பது? இந்த எஸ்பிஐ இன்ஸ்டா சேமிப்பு கணக்கு என்பது, எந்த வித பேப்பர் ஆவணமும் தேவையில்லை. உங்களது ஆதார் மற்றும் பான் எண் இருந்தால் போதுமானது.
மேலும் இவ்வாறு இன்ஸ்டா சேமிப்பு கணக்கினை தொடங்கினால், அவர்களுக்கும் ரூபே ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படும்.
யோனோ ஆப் மூலம் தொடங்கலாம்
இந்த இன்ஸ்டா சேமிப்பு கணக்கினை துவங்க நீங்கள் யோனோ ஆப்பினை (YONO app) டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் உங்களது ஆதார் மற்றும் பான் நம்பரை பதிவிட வேண்டும். அதோடு தேவையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அதன் பிறகு நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி நம்பரை பெறுவீர்கள். அதனை யோனோ பதிவு பக்கத்தில் பதிவு செய்து, மேலும் அதனுடன் தொடர்புடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
மற்ற சேமிப்பு கணக்குகளுக்கு இருக்கும் வசதியினை போலவே எஸ்எம்எஸ் வசதி, எஸ்பிஐ விரைவு மிஸ்டு கால் சேவையினையும் இதன் மூலம் பெற முடியும்.
உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துவிடும்
இவ்வாறு மேற்காண்ட விவரங்களை பூர்த்தி செய்து முடித்து விட்டீர்கள் எனில், உங்களது வங்கி கணக்கு உடனடியாக செயல்பாட்டுக்கு வந்து விடும். ஆக நீங்கள் உடனடியாக பரிவர்த்தனையை செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வங்கி கணக்கு திறந்த ஒரு வருடத்திற்குள் நீங்கள் உங்கள் அருகில் உள்ள வங்கிக்கு சென்று உங்களது கேஒய்சியினை மேம்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications