சில காலமாகவே பெரு நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பாதிக்கப்படும் நபர்கள் பெரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகின்றனர். அதிலும் ஹோம் லோன் மற்றும் கார் லோன் போன்றவற்றைப் பெற்றிருந்தால் நிலமை இன்னும் மோசமாகி விடுகிறது. இதுபோன்ற சூழ்நிலை உங்களுக்கு வந்தால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது? என்பதைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெறும்போது அதை சரியாக திருப்பிச் செலுத்த வேண்டும். ஒருநாள் EMI-ஐ தவறவிட்டாலும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். இதனால் பிற்காலத்தில் நீங்கள் கடன் பெறும்போது பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது. அதோடு மட்டுமல்ல சில வங்கிகள் சட்ட நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.

எனவே வேலை பறிபோனாலும் ஒரு சில விஷயங்களை செய்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ளலாம். அதற்கு வேலை இழப்புக்குப் பின் கடன் பெற்றவர் தங்களிடம் இருக்கும் சேமிப்பு என்ன? என்பதை முதலில் பார்க்க வேண்டும். அதன்பிறகு காப்பீடு வசதிகள் இருக்கிறதா?, கடன் வழங்குனரை சந்தித்து கடன் விதிமுறைகளில் ஏதாவது மாற்றம் செய்ய முடியுமா? என்ற விஷயங்களை எல்லாம் கவனிக்கலாம்.
ஹோம் லோன் பெறுவதற்கு பிணயமாக உங்களுடைய சொத்து பத்திரத்தை வழங்க வேண்டும். கடனை நீங்கள் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் வங்கிகள் அதற்கு அவகாசம் வழங்கும். அதன் பின்னர் சட்ட நடவடிக்கையை தொடங்கும். அதற்குள் நீங்கள் ஈஎம்ஐ தொகையை செலுத்தி விட்டால் பிரச்சினையில்லை. அதிலிருந்து தவறும் பட்சத்தில் உங்கள் சொத்தை ஏலம் விட்டு தங்களுடைய லோனை பறிமுதல் செய்து கொண்டு மீதி பணத்தை உங்களிடமே ஒப்படைக்கும்.
அதுவே கார் லோனாக இருந்தால் நீங்கள் பெற்ற கார் பறிமுதல் செய்யப்படும். கார் கடன் பெற்று ஒருவர் செலுத்தத் தவறினால் என்ன நடக்கும்? என்பதை பார்ப்போம். நிதி நிறுவனங்கள் தற்போது கார் கடன்களுக்கு ஆண்டுக்கு 7.35 சதவீதம் முதல் 14.05% வரை வட்டி வசூலிக்கின்றன. இந்த வட்டி வீதமானது நீங்கள் பெரும் கடன் தொகை, தேர்ந்தெடுக்கும் கால அளவு மற்றும் கடன் வழங்குனரை பொறுத்து மாறுபடும். உதாரணமாக 5 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் கடன் பெறுகிறீர்கள் என்றால் மாதத் தவணை ஏறக்குறைய 9983 ரூபாய் முதல் 11,647 ரூபாய் வரை இருக்கும்.
வேலை இழப்பிற்கு பிறகு எப்படி ஈஎம்ஐ செலுத்துவது?: கஷ்டப்பட்டு கடன் வாங்கி ஒரு காரை வாங்கி விடுகிறீர்கள். அந்த சமயத்தில் வேலை இழந்தால் பதற்றம் அடையாமல் செயல்பட வேண்டும்.
சேமிப்பை ஆராயலாம்: முதல் கட்டமாக உங்களிடம் வேறு ஏதாவது சேமிப்பு இருக்கிறதா என்று பார்க்கலாம். அதை வைத்து ஓரிரு மாதங்களுக்கு ஈஎம்ஐ தொகையை சமாளிக்கலாம்.
நீங்கள் கடன் பெற்ற நிதி நிறுவனத்தை அணுகலாம்: நீங்கள் கடன் வாங்கி இருக்கும் நிதி நிறுவனத்தை அணுகி கடன் விதிமுறைகளில் ஏதாவது மாற்றம் செய்ய முடியுமா? என்று கேட்கலாம். அதற்கு உண்மையான விவரங்களை கூற வேண்டும். உங்களுடைய சூழ்நிலை என்ன?, பணி நீக்கம் கடிதம் மற்றும் வங்கி அறிக்கைகள் என தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இப்படி வழங்கும் பட்சத்தில் வங்கிகள் உங்களுடைய நிலையை ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.
எமர்ஜென்சி ஃபண்ட்: தனிநபர்கள் வேலை இழப்பைச் சந்திக்கும்போது எமர்ஜென்சி ஃபண்டை வைத்து ஈஎம்ஐ செலுத்தலாம். ஆனால் இதை வழக்கமாக வைத்திருக்கக் கூடாது. மீண்டும் வேலை கிடைத்தவுடன் நீங்கள் எடுக்கும் தொகைக்கு ஏற்ப உங்களுடைய அவசரகால நிதியை நிர்வகிக்க தொடங்க வேண்டும். அப்போதுதான் பிற்காலத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகளை கடனின்றி சமாளிக்க முடியும்.


Click it and Unblock the Notifications

