சென்னை: குறைந்த சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சரி அதிகபட்ச சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சரி மாதக் கடைசி என்றாலே பர்ஸ் காலியாக இருக்கிறது , அக்கவுண்டில் பணம் இல்லை என புலம்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சரியான நிதி திட்டமிடல் இல்லாததே இதற்கு காரணம்.
பொதுவாக நாம் பணத்தை பிரித்து முறையாக திட்டமிட்டு செலவு செய்தாலே போதும் இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு விடலாம். சரியான முறையில் திட்டமிட்டு பட்ஜெட் போட்டு செலவுகளை மேற்கொண்டால் குறைந்த ஊதியத்தில் கூட நிறைவான வாழ்க்கை வாழ முடியும். அந்த வகையில் ஒருவருடைய நிதி திட்டமிடலில் பட்ஜெட் மற்றும் அதனை ஒழுக்கமாக பின்பற்றுவது முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில் சர்வதேச அளவில் அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு பட்ஜெட் ஃபார்முலா இருக்கிறது. இதனை பின்பற்றுபவர்கள் கண்டிப்பாக மாதக் கடைசியில் பணம் இல்லை என புலம்ப மாட்டார்கள் . அதுதான் 50 - 30- 20 ஃபார்முலா. இந்த ஃபார்முலாவின் படி ஒரு நபர் தன்னுடைய ஊதியத்தை மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். 50 சதவீதம் செலவினம் , 30 சதவீதம் மற்ற தேவைகளுக்கு, 20 சதவீதம் சேமிப்பு என பிரித்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக சென்னையில் 26 வயதான மணி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு மாதந்தோறும் 50,000 ரூபாய் சம்பளம் வருகிறது என வைத்துக் கொள்வோம். இதில் அவர் எவ்வளவு செலவு செய்ய வேண்டும், எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை இந்த 50- 30- 20 ஃபார்முலாவை கொண்டு நாம் கணக்கிடலாம். தனக்கு வரும் ஊதியம் 50,000த்தில் அவர் 10,000 ரூபாயை ஊரில் இருக்கும் பெற்றோருக்கு அனுப்புகிறார். மீதம் அவரிடம் 40,000 ரூபாய் இருக்கிறது.
இந்த 40,000த்தை அவர் 50 சதவீதம் அதாவது 20,000 ரூபாயை தன்னுடைய தங்குமிடத்திற்கான வாடகை ,உணவு, மின்சார கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமுள்ள பணத்தை 30 சதவீதம் அதாவது 12,000 ரூபாயை மற்ற செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஒரு பிடித்த ஆடை வாங்குவது அல்லது நண்பர்களோடு உணவருந்த செல்வது போன்ற செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடுத்தது மீதமுள்ள 20 சதவீதம் அதாவது 8,000 ரூபாயை சேமிப்பு அல்லது முதலீடுகளுக்கு என ஒதுக்கிட வேண்டும், அல்லது அவசர கால நிதியாக ஒரு நிதி தொகுப்பை உருவாக்குவதற்கு சேமித்து வரவேண்டும். இவ்வாறு செய்தால் சில மாதங்களில் அவசர காலத்திற்கான நிதி கிடைத்துவிடும். பின்னர் அந்த தொகையை சேமிப்பு அல்லது முதலீடுகளுக்கு என ஒதுக்கிவிடலாம்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications