8வது சம்பள கமிஷன்: 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், தற்போதுள்ள 7வது சம்பளக் குழுவிற்குப் பதிலாக வரவிருக்கும் புதிய சம்பளக் குழு தொடர்பான செய்திகள் மற்றும் முன்னேற்றங்களை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 8வது சம்பள குழுவின் அமைப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், அரசு இன்னும் அந்தக் குழுவின் உறுப்பினர்களை நியமிக்கவில்லை. இந்த குழு அடுத்த ஆண்டு ஊதியம் மற்றும் ஓய்வூதிய திருத்தங்களை பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் விவாதிக்கும் முக்கியமான விஷயம் என்னவென்றால், அகவிலைப்படி (DA) அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியதுதான். சமீபத்திய 2% டிஏ உயர்விற்குப் பிறகு, அகவிலைப்படி தற்போது 55% ஆக உள்ளது. முந்தைய ஊதியக் குழுக்களின் கீழ், ஃபிட்மென்ட் காரணி பயன்படுத்தப்படுவதற்கு முன்பு அடிப்படை ஊதியம் அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்டது. அதே அணுகுமுறை 8வது சம்பள குழுவில் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அடிப்படை ஊதியத்தை அகவிலைப்படியுடன் இணைத்த பிறகு ஃபிட்மென்ட் காரணி குறைவாக இருக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

7வது சம்பள குழுவின் கீழ், லெவல் 1 இல் ஒரு அரசு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 18,000 ஆக உள்ளது, மேலும் 55% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் ஒருங்கிணைத்தால், அது ரூ. 27,900 ஆக மாறும். கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில்,ஃபிட்மென்ட் காரணி ரூ.18,000க்கு பதிலாக ரூ.27,900க்கு பயன்படுத்தப்படலாம். பல அறிக்கைகள் அடிப்படையில், புதிய சம்பள குழு 1.92 மற்றும் 2.86 இடையில் ஒரு ஃபிட்மென்ட் காரணியை பரிந்துரைக்கலாம். எனவே, 1.92 என்ற ஃபிட்மென்ட் காரணி பயன்படுத்தப்பட்டால், சம்பளம் ரூ.53,568 ஆக இருக்கும்.
மேலும், முன்பு இருந்தது போல, ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக இருந்தால் சம்பளம் ரூ.71,703 ஆக அதிகரிக்கும். 2.86 ஆக இருந்தால், சம்பளம் ரூ.79,794 ஆக உயரலாம். அதாவது, தற்போது ரூ. 18,000 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்கள், எதிர்காலத்தில் ரூ. 53,000 முதல் ரூ. 79,000 வரை ஊதியம் பெறலாம்.
8வது சம்பளக் குழு: ஜனவரி முதல் என்ன நடந்தது? 2025 துவக்கத்திலிருந்து இப்போது வரை, 8வது சம்பள குழுவை சார்ந்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் காணப்படுகின்றன. ஜனவரி 16 ஆம் தேதி, 8வது சம்பளக் குழுவை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது, மேலும் குழு உறுப்பினர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய ஊதியக் குழு ஏன் அவசியம்? ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இப்படியிருக்கையில், ஊதியத்தில் கடைசியாக நடைபெற்ற முக்கியமான மாற்றம் ஜனவரி 2016-இல் நடந்தது. இப்போது, கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆகின்றன. ஓய்வூதியதாரர்களும் தற்போதைய வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப தங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தை மேம்படுத்த விரும்புகிறார்கள். சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை எதிர்பார்க்கின்றனர்.
மேலும் இதுதொடர்பாக அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், 8வது சம்பள குழு 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தங்களின் பரிந்துரைகளை வழங்கலாம் என்று கருதப்படுகிறது. 8வது சம்பள குழு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications