சென்னை: மத்திய அரசு வழங்கும் முதலீட்டு திட்டங்களில் பிரபலமானவை பிபிஎஃப் எனப்படும் பொதுவருங்கால வைப்பு நிதி மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் இந்த நிதியாண்டு முடிவதற்குள் பின்வருவனவற்றை மேற்கொள்ளவில்லை எனில் அவர்களின் கணக்கு முடங்கிவிடும்.
2023-24 ஆம் நிதியாண்டு வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்குள் முதலீடு தொடர்பான பணிகளை அனைவரும் முடித்தாக வேண்டியுள்ளது.

அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்கள் கணக்கு முடங்காமல் இருக்க மார்ச் 31ஆம் தேதிக்குள் இவற்றை எல்லாம் செய்துவிட வேண்டும்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் 500 ரூபாயாவது டெபாசிட் செய்திருக்க வேண்டும். ஒரு வேளை அப்படி டெபாசிட் செய்ய தவறினால் அவர்களது கணக்கு டிஸ்கன்டினியூ ஆனதாக அறிவிக்கப்படும்.
இப்படி முடங்கிய கணக்கை மீட்க ஒவ்வொரு தவறவிடப்பட்ட ஆண்டுக்கும் முதலீட்டாளர் 500 ரூபாய் மற்றும் 50 ரூபாய் அபராதத்துடன் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். எனவே உங்களது பிபிஎஃப் கணக்கில் இந்த நிதியாண்டுக்கான பங்களிப்பை செய்யாமல் இருந்தால், மார்ச் 31 ஆம் தேதிக்குள் அதை செய்து விடுங்கள். இல்லையெனில் உங்களது கணக்கு நிறுத்தி வைக்கப்படும் மற்றும் நீங்கள் அபராதத்துடன் டெபாசிட் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.
அதேபோல சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் நீங்கள் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால் ஒவ்வொரு நிதியாண்டிலும் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 250 ரூபாயாவது முதலீடு செய்திருக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் முதலீடு செய்யாமல் இருந்தால் உடனடியாக அதை செய்து விடுங்கள் இல்லையெனில் உங்கள் கணக்கு டீஃபால்ட் கணக்காக மாற்றப்படும். நீங்கள் முதலீடு செய்ய தவறிய ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் 250 ரூபாய் மற்றும் 50 ரூபாய் என்ற அளவில் அபராதத்துடன் பணம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே அபராதத்தை தவிர்க்க வரும் 31ஆம் தேதிக்குள் இந்த இரண்டு திட்டங்களிலும் முதலீடு செய்துவிடுங்கள்.
பிபிஎஃப், செல்வமகள் திட்டம் ஆகிய இரண்டிலும் செய்யக்கூடிய பங்களிப்புகளுக்கு நீங்கள் வருமான வரி விலக்கும் கோரலாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications