முன்பை விட இளைஞர்கள் மத்தியில் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவிட்டது. அதிலும் 20 வயதை தொடும்போதே சில இளைஞர்கள் எதிர்காலம் குறித்து சிந்திக்கத் தொடங்கி விடுகின்றனர். அப்போது தான் பலருக்கு தொழில் வாழ்க்கை தொடங்கும். இந்த காலக்கட்டத்தை சரியாகப் பயன்படுத்தினால்.. பிற்காலத்தில் யாரிடமும் கையேந்தாமல் வாழ முடியும். இளம் வயதிலேயே சரியான சேமிப்பு பழக்கங்களை உருவாக்கிக் கொள்வது தேவையற்ற கடன் சுமையிலிருந்து காப்பதோடு சீக்கிரம் உங்களை செல்வந்தராகவும் மாற்றும்.
நீங்களும் உங்கள் 20-வது வயதில் இருக்கிறீர்கள் என்றால்.. நிம்மதியான எதிர்காலத்தை உருவாக்க உதவும் 7 வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
அவசர கால சேமிப்பு: திடீரென மருத்துவச் செலவுகள் ஏற்பட்டால் யாராக இருந்தாலும் பிறரிடம் கடன் வாங்குவார்கள். இதை தவிர்ப்பதற்கு உங்கள் 3 முதல் 6 மாத சேமிப்பை அவசர கால நிதியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எதிர்பாராமல் வேலை இழப்பு ஏற்பட்டாலோ அல்லது மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலோ இந்த தொகை உங்களுக்கு உதவும். அந்த சமயத்தில் கிரெடிட் கார்டு பெற்று அதிக வட்டி செலுத்தாமல் இது போன்ற சின்ன சின்ன பழக்க வழக்கங்களை செய்து வந்தாலே இக்கட்டான நேரங்களில் தப்பித்து விடலாம்.

சேமிக்க ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை பயன்படுத்துங்கள்: உங்களுக்கு சம்பளம் ஏறும் தேதியின்போது சேமிப்பதற்கு ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை அமைத்துக் கொள்ளுங்கள். தானாகவே உங்கள் சம்பளத்திலிருந்து ஒரு பகுதி சேமிக்கப்பட்டு விடும். இதனால் எதிர்கால இலக்குகளுக்கு தனியாக சேமிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதோடு வீண் விரயமாவதும் பெருமளவில் குறையும்.
செலவு பழக்கவழக்கங்களை கண்காணியுங்கள்: இன்றெல்லாம் பட்ஜெட் போடுவதற்கு நிறைய ஆப் வந்துவிட்டது. இதையெல்லாம் செய்ய முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதி வைக்கலாம். தேவையில்லாத சப்ஸ்கிரிப்ஷன்கள், அடிக்கடி வெளியில் சாப்பிடுவது, அவசரப்பட்டு தேவையில்லாத பொருட்களை வாங்குவது என உங்களுடைய வீண் விரயங்களை கண்டறிந்து அந்த செலவுகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்துங்கள்: கிரெடிட் கார்டுக்கு பிறக் கடன்களைக் காட்டிலும் வட்டி அதிகம். சில கார்டு வழங்குனர்கள் வருடத்திற்கு 45 சதவீதம் வரை இதற்கு வட்டி வசூலிக்கின்றனர். எனவே கிரெடிட் கார்டை தேவைப்பட்டால் மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். ஒவ்வொரு மாதமும் முழு தொகையையும் செலுத்த முயற்சி செய்யுங்கள். மினிமம் டியூவை மட்டும் செலுத்துவது மீதமுள்ள கடனுக்கு வட்டியை அதிகரிக்கும். இப்படியே போனால் உங்கள் சிபில் ஸ்கோர் குறையக்கூடும். இதன் மூலம் எதிர்காலத்தில் கடன் பெறுவதில் பிரச்சனை ஏற்படலாம்.
இன்டெக்ஸ் பண்டுகளில் முதலீடு செய்யுங்கள்: குறைந்த முதலீடு கொண்ட இன்டெக்ஸ் பண்டுகளில் முடிந்த வரை முதலீடு செய்ய தொடங்குங்கள். இதனால் கூட்டு வட்டியின் மூலம் உங்களுடைய வருமானம் பன்மடங்காக அதிகரிக்கும். நீங்கள் மாதந்தோறும் செய்யக்கூடிய சிறு முதலீடும் உங்களுடைய ஓய்வு காலத்தில் மிகப்பெரிய பலனை பெற்று தரும்.
வருமானத்தை பெருக்குங்கள்: 9 டூ 5 ஜாப் சென்றுக் கொண்டிருந்தாலும்.. சிலர் 5 மணிக்கு மேல் கூடுதல் தரக்கூடிய பிற வேலைகளையும் செய்கின்றனர். அப்படி உங்கள் திறன்களை வளர்த்து பிற வேலைகளிலும் கவனம் செலுத்துங்கள். உங்கள் வேலையில் நிச்சயமற்ற தன்மை இருந்தாலும் பிற வேலைகள் உங்களை காப்பாற்றும்.
ஆரம்பத்திலேயே சம்பளம் பற்றி பேசிக் கொள்ளுங்கள்: ஒரு புதிய நிறுவனத்தில் பணிக்குச் சேரும்போது உங்களுடைய தகுதிக்கு ஏற்ப சம்பளத்தை பேசிக்கொள்ளுங்கள். ஆரம்பத்திலேயே நல்ல சம்பளத்தை பெறுவது எதிர்காலத்திற்கும் நல்லது. அதோடு போனஸ் மற்றும் சேமிப்பு ஆகிய அனைத்திற்கும் இது நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications