பிஎஃப் (PF) பணத்தை நேரடியாக யுபிஐ (UPI) மூலம் எடுப்பதற்கான வசதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) சோதனை செய்து வருகிறது. முதல் கட்ட சோதனை வெற்றி அடைந்த நிலையில் விரைவில் அது 7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஈபிஎஃப்ஓ 3.0 திட்டத்தின் கீழ் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
நாம் இப்போது எப்படி நம் வங்கி கணக்குகளை டிஜிட்டல் பேங்கிங் முறையில் மேலாண்மை செய்கிறோமோ அதே போஅல் நம் பிஎஃப் கணக்கையும் மேலாண்மை செய்ய முடியும். அதற்கான மாற்றங்கள் அமைப்பு ரீதியாகவே கொண்டு வரப்படுகின்றன. இதன் மூலம், தகுதியான பிஎஃப் தொகையை நேரடியாக அதனுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு உடனே மாற்றிக்கொள்ள முடியும், அதனை யுபிஐ மூலம் எடுத்து பயன்படுத்தவும் முடியும்.

தற்போது பிஎஃப் பணம் வேண்டும் என்றால் விண்ணப்பம் செய்துவிட்டு பல வாரங்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இந்த புதிய வசதியில் ஒரு கிளிக் செய்தாலே பணம் வந்துவிடும். ஆனால் இந்த டிஜிட்டல் வசதிகள் அனைத்தும் உங்களுக்குச் சரியாக வேலை செய்ய வேண்டுமானால், உங்களுடைய பிஎஃப் கணக்கில் சில மாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டி இருக்கும். இல்லை என்றால் இந்த யுபிஐ வசதி உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.
1.யுபிஐ அடிப்படையிலான பிஎஃப் பண பரிமாற்றம் தொடங்குவதற்கு முன், உங்களுடைய UAN ஆக்டிவேட் செய்யப்பட வேண்டும். ஏற்கனவே ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தால் அது, பயன்பாட்டில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். யுஏஎன் ஆக்டிவாக இல்லை என்றால் இந்த சேவையை பயன்படுத்த முடியாது. எனவே உடனே இந்த வேலையை முடித்து வைப்பது நல்லது.
2.அடுத்ததாக உங்களுடைய யுஏஎன் எண் கட்டாயம் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பிஎஃப் கணக்கில் உள்ள உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவை ஆதாரில் உள்ளவாறே துல்லியமாக இருக்க வேண்டும். இதில் சிறு மாற்றம் இருந்தாலும் பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்க முடியாது. யுபிஐ சரிபார்ப்பு தோல்வியடையும்.
3. யுபிஐ மூலம் பிஎஃப் பணம் நேரடியாக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுவதால், இபிஎஃப்ஓ போர்ட்டலில் உள்ள உங்கள் வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி (IFSC) குறியீடு மற்றும் கணக்கு வைத்திருப்பவரின் பெயர் ஆகியவை சரியாக இருக்க வேண்டும். அதாவது வங்கி கணக்கில் உள்ள பெயர், பிஎஃப் கணக்கில் உள்ள பெயர், ஆதாரில் உள்ள பெயர் ஆகிய அனைத்தும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். பிஎஃப் அமைப்புடன் நீங்கள் ஆக்டிவாக பயன்படுத்தும் வங்கி கணக்குகளை மட்டுமே இணைத்து வையுங்கள். ஒருவேளை அதிகம் பயன்படுத்தாத, கேஒய்சி அப்டேட் செய்யப்படாத வங்கி கணக்குகளை இணைத்திருந்தால் பிஎஃப் பணம் அதற்கு மாறுவதில் சிக்கல் ஏற்படும். கிளைம்கள் நிராகரிக்கப்படலாம்.
4. ஆதார் மற்றும் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண் பயன்பாட்டில் இருக்க வேண்டும். ஏனெனில், யுபிஐ பரிமாற்றங்களின் போது ஓடிபி (OTP) வரும். முடிந்தவரை மூன்றுக்கும் ஒரே எண் பயன்படுத்துவது பிஎஃப் பணத்தை யுபிஐக்கு மாற்றி பயன்படுத்துவதை எளிமையாக்கும்.
5. பழைய பிஎஃப் கணக்குகள் இருந்தால், அவற்றை தற்போதைய யுஏஎன் எண்ணுடன் இணைத்து விடுங்கள். இவை தவிர, உங்கள் இ-நாமினேஷன் (e-Nomination) விவரங்கள் அப்டேட்டாக உள்ளதா எனச் சரிபார்க்கவும்.
பிஎஃப் கணக்கில் அனைத்து தகவல்களையும் அப்டேட்டாக வைத்திருப்பது, மொபைல் எண்ணை ஆக்டிவாக வைத்திருப்பது, கேஒய்சி பணிகளை முடித்து வைப்பது ஆகியவற்றை எல்லாம் முன் கூட்டியே நீங்கள் செய்து வைத்திருந்தால் பிஎஃப் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுத்து பயன்படுத்துவது எளிமையாக மாறும். எனவே இந்த வசதி அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் முன்பே இந்த அப்டேட்களை முடித்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications

