அடல் பென்ஷன் திட்டத்தின் படி, ஒருவர் தினமும் 7 ரூபாய் முதலீடு செய்தால் அவரது 60 வயதில் மாதந்தோறும் 5000 ரூபாய் பென்ஷன் வாங்கலாம்.
நம் நாட்டில் எல்லோருக்கும் பணி பாதுகாப்பு நிறைந்த அரசாங்க உத்தியோகம் போன்ற வேலைகள் கிடைப்பது சாத்தியமில்லை. ஆனாலும் கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா துறையில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்களும் அரசு ஊழியர்கள் போல் மாதந்தோறும் பென்ஷன் பெற அடல் பென்ஷன் திட்டம் என்ற அருமையான ஒரு ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

2015-16ம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டம், மத்திய அரசால் கூலி தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்களுக்கான உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதிய திட்டமாகும். 18 வயது முதல் 40 வயது வரையிலான நபர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
அடல் பென்ஷன் திட்டத்தில் ஒருவர் தினமும் 7 ரூபாய் முதலீடு செய்தால் 60 வயதில் மாதந்தோறும் ரூ.5000 பென்ஷன் வாங்கலாம். தினமும் 7 ரூபாய் என்பது நிச்சயம் பெரிய தொகை கிடையாது.
காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் நாம், வேலை முடிந்து வீட்டுக்கு மாலை வருவதற்கு முன் ஒரு டீக்கடையில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது தேநீர் அருந்தியிருப்போம். அதற்கு நாம் பத்து ரூபாய் செலவிட்டு இருப்போம். எனவே ஒரு தேநீருக்கான காசை மிச்சப்படுத்தினாலே மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் பென்ஷன் வாங்க முடியும்.
அடல் பென்ஷன் திட்டத்தின்படி, 18 வயது முதல் நீங்கள் மாதம் தோறும் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.210 முதலீடு செய்து வந்தாலே, 60 வயது முதல் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியமாக பெறலாம். அதாவது தினமும் 7 ரூபாய் ஒதுக்கி மாதம் ரூ.210 செலுத்தினால் நீங்கள் 60 வயதில் பென்ஷனாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் பெறலாம்.

உங்களுக்கு தற்போது 25 வயதாகிறது இனிதான் அடல் பென்ஷன் திட்டத்தில் சேரப்போகிறேன் என்றால், நீங்கள் மாதாந்திர முதலீடு தொகையை கொஞ்சம் அதிகமாக செலுத்த வேண்டியது இருக்கும் அவ்வளவுதான்.
உங்களின் மாதாந்திர முதலீடு ரூ.376ஆக உயரும். உங்களின் வயது 30 என்றால் மாதாந்திர முதலீடு ரூ.577 ஆகவும், உங்கள் வயது 35 என்றால் உங்களின் மாதாந்திர முதலீடு ரூ.902ஆகவும் இருக்கும். அடல் பென்ஷன் திட்டத்தை ஒருவர் பொதுத்துறை, தனியார் வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களிலும் தொடங்கலாம்.


Click it and Unblock the Notifications