இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான சீசன் தொடங்கிவிட்டது. அடுத்த இரு மாதங்களுக்கு மாத சம்பளதாரர்கள் பெரும்பாலும் வருமான வரி கணக்கு தாக்கல் குறித்து தான் பேசி கொண்டிருப்பார்கள். பெரும்பாலான இந்திய மக்கள் வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வது என்பது வெறும் வரி கட்டுவதற்காக மட்டுமே என நினைக்கிறார்கள். ஆனால் வரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லாதவராக இருந்தாலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும்.
எனக்கு அந்த அளவுக்கு வருமானமே இல்லை நான் ஏன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என தவிர்ப்பவர்கள் பின்னாளில் பல தவிப்புகளுக்கு ஆளாகிறார்கள். எனவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு கிடைக்கும் முக்கியமான 4 நன்மைகள் என்ன, கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் என்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கடன் வாங்குவது: நீங்கள் வங்கியில் வீட்டு கடன், தனிநபர் கடன், வாகன கடன் போன்றவற்றை வாங்க விண்ணப்பிக்கும் போது, அவர்கள் உங்களிடம் கடந்த சில வருடங்களில் நீங்கள் தாக்கல் செய்த ITR படிவத்தைக் கேட்பார்கள். உங்களுக்கு நிலையான வருமானம் இருக்கிறதா, வாங்கும் கடனை உங்களால் திருப்பிச் செலுத்த முடியுமா என்பதை வங்கிகள் உறுதி செய்ய வருமான வரி கணக்கு தாக்கல் அறிக்கை அதிகாரப்பூர்வ ஆதாரமாகப் பயன்படுகிறது. ITR இல்லை என்றால் கடன் கிடைப்பதும் எதிர்பார்த்த கடன் தொகை கிடைப்பதும் சிக்கலாகும்.
டிசிஎஸ் வரி: சில நேரங்களில் உங்கள் சம்பளத்தில் அல்லது நீங்கள் செய்த முதலீடுகளில் இருந்து TDS (Tax Deducted at Source) என்ற பெயரில் உங்களது உண்மையான வரித் தொகையை விட அதிகமான பணம் பிடித்தம் செய்வார்கள். ஃப்ரீலேன்சிங் முறையில் வேலை செய்பவர்களுக்கு இது நடக்கும். எனவே அரசாங்கத்திடம் இருந்து உங்களுக்கு வரவேண்டிய Tax Refund நீங்கள் பெற வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் கண்டிப்பாக ITR தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு நேரடியாக வந்து சேரும்.
விசா விண்ணப்பம்: நீங்கள் சுற்றுலா செல்லவோ, வேலைக்காகவோ அல்லது படிக்கவோ வெளிநாடுகளுக்கு விசா விண்ணப்பிக்கும் போது, பல நாடுகள் உங்களது நிதி நிலைமையையும், நீங்கள் அந்த நாட்டில் தங்குவதற்கான தகுதி கொண்டவரா என்பதையும் சரிபார்க்கும். அதற்கு உங்களது வருமானம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு (Financial Stability) ITR ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ITR தாக்கல் செய்து வந்தால் விசா நேர்காணலின் போது அது உங்களுக்குப் பெரிய பிளஸ் பாயிண்டாக இருக்கும்.
எதிர்கால நஷ்டங்களை தவிர்க்கலாம்: நீங்கள் பங்குச்சந்தையிலோ (Share Market) அல்லது வேறு ஏதேனும் சொத்துக்களை விற்கும்போதோ உங்களுக்கு நஷ்டம் (Loss) ஏற்பட்டால், அந்த நஷ்ட கணக்கை அடுத்த 8 வருடங்கள் வரை நீங்கள் கணக்கில் Carry forward செய்யலாம். அதாவது அடுத்தடுத்த வருடங்களில் உங்களுக்கு அதேபோல சொத்துக்களை விற்கும்போது லாபம் கிடைத்தால், இந்த பழைய நஷ்டத்தை அந்த லாபத்தோடு கழித்துக் காட்டி, நீங்கள் கட்ட வேண்டிய வரியைக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த சலுகை நீங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் ITR தாக்கல் செய்தால் மட்டுமே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications

