இந்தியாவில் இது வருமான வரி தாக்கல் (ITR) செய்யும் சீசன். வேலைக்கு செல்லக்கூடிய பலரும் இப்போது வருமான வரி கணக்கு தாக்கல் , வரி சேமிப்பு ஆகியவற்றில் தான் பிஸியாக இருப்பார்கள். நம்மில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்பவர்கள் மட்டுமே வருமானம் வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் , வருமான வரிச் சட்டத்தின் கீழ், உங்கள் வருமானம் அடிப்படை வரி விலக்கு வரம்பிற்குள் இருந்தாலும், சில குறிப்பிட்ட நிதி நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட்டிருந்தால், நீங்களும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்.
வெளிநாட்டு சொத்துக்கள்: நீங்கள் ஒரு இந்திய குடிமகன், ஆனால் வெளிநாட்டில் ஏதேனும் ஒரு சொத்தை நீங்கள் வைத்திருந்தால், வெளிநாட்டு சொத்து ஒன்றின் பயனாளியாக (beneficiary) இருந்தால், வெளிநாட்டு வங்கி கணக்கில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்டிருந்தால் கட்டாயம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

அதிக வெளிநாட்டு பயணச் செலவு: ஒரு நிதியாண்டில் வெளிநாட்டுப் பயணத்திற்காக உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ மொத்தம் ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவு செய்திருந்தால், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
அதிக TDS/TCS (வரி பிடித்தம்): உங்கள் பெயரில் கழிக்கப்பட்ட அல்லது வசூலிக்கப்பட்ட வரி (TDS மற்றும் TCS) பின்வரும் அளவைத் தாண்டினால் ITR தாக்கல் செய்வது கட்டாயம்:
சாதாரண நபர்களுக்கு: ரூ.25,000
மூத்த குடிமக்களுக்கு : ரூ.50,000
சேமிப்புக் கணக்கில் அதிக வைப்பு தொகை: ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளில் மொத்தம் ரூ.50 லட்சத்திற்கு மேல் பணம் டெபாசிட் செய்திருந்தால் ITR தாக்கல் செய்ய வேண்டும்.
நடப்புக் கணக்கில் அதிக வைப்பு : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடப்புக் கணக்குகளில் (Current Account) மொத்தம் ரூ.1 கோடிக்கு மேல் பணம் டெபாசிட் செய்திருந்தால், உங்கள் வருமானம் குறைவாக இருந்தாலும் ITR கட்டாயமாகும்.
வணிக வருவாய் : நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால், உங்கள் வணிகத்தின் மொத்த விற்பனை, வருவாய் அல்லது ரசீதுகள் (Gross Receipts) நிதியாண்டில் ரூ.60 லட்சத்திற்கு மேல் இருந்தால் ITR தாக்கல் செய்ய வேண்டும்.
தொழில்முறை வருமானம் : மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப ஆலோசகர்கள், ஃப்ரீலான்ஸர்கள் போன்ற தொழில்முறையினராக இருந்தால், உங்கள் மொத்த தொழில்முறை வருவாய் நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால் ITR தாக்கல் செய்வது கட்டாயம்.
அதிக மின்சாரக் கட்டணம் : ஒரு நிதியாண்டில் உங்கள் மின்சாரக் கட்டணச் செலவு ரூ.1 லட்சத்திற்கு மேல் இருந்தால், ITR தாக்கல் செய்ய வேண்டும் என்பது வருமான வரி சட்டத்தின் ஒரு விதியாகும்.
அடிப்படை வரி விலக்கு வரம்பைத் தாண்டுதல் : உங்கள் மொத்த வருமானம் (எந்தவொரு முதலீட்டு விலக்குகளையும் - 80C, 80D போன்றவற்றை - கழிப்பதற்கு முன்பு) அரசாங்கம் நிர்ணயித்துள்ள அடிப்படை வரி விலக்கு வரம்பிற்கு மேல் இருந்தால் ITR தாக்கல் செய்ய வேண்டும்.
மேலே குறிப்பிட்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் இருந்தால், சட்டப்படி வருமான வரி தாக்கல் செய்வது அவசியமாகும். இல்லையெனில் வருமான வரித் துறையின் நோட்டீஸை பெற நேரிடலாம். எனவே இதை கவனத்தில் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications


