லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா-எல்ஐசி பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏற்றபடி பாலிசிகளை அறிமுகப்படுத்தி வருவதால் மக்களால் கொண்டாடப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க ஒன்று எல்ஐசி ஆதார் ஷீலா பாலிசி. நடுத்தர வருவாய் உள்ளவர்களுக்காகவே இந்தப் பாலிசி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் எல்ஐசி ஆதார் ஷீலா பாலிசியானது முற்றிலும் பெண்களுக்கானது. பெண்களுக்கு நிதி பாதுகாப்பு அளிக்க எல்ஐசி மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்பாகவே இந்த ஆதார் ஷீலா பாலிசியைக் கருதலாம்.

பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காகவே இந்த எல்ஐசி ஆதார் ஷீலா பிளான் செயல்படுத்தப்படுகிறது. இது நான்-லிங்க்டு பர்சனல் லைப் இன்சூரன்ஸ் பாலிசியாகும்.
இந்தப் பாலிசி முதிர்ச்சியாகும் போது குறிப்பிட்ட தொகையைப் பெறுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிசிக் காலத்தில் பாலிசிதாரர் துரதிர்ஷ்டவசமாக இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்தாருக்கு நிதி உதவி கிடைக்கும்.
8 - 55 வயதான ஆதார் கார்டு வைத்துள்ள பெண்கள் இந்த ஆதார் ஷீலா பாலிசியைப் பெறலாம். இதில் 8 வயது சிறுமிகூட ஒரு பாலிசிதாரர் ஆக முடியும். இந்தப் பாலிசி 10 முதல் 20 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாலிசி முதிர்ச்சி தொகை ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இருக்கும். பாலிசி தொடங்கிய பின் 3 ஆண்டுகள் கழித்து இதில் கடனுதவியைப் பெறலாம்.
21 வயதான ஒரு பெண் ஜீவன் ஆதார் ஷீலா பிளானை 20 ஆண்டுகளுக்கு எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு வருடாந்திர பிரீமியம் தொகை ரூ.18,976 ஆகும். சராசரியாக ஒரு மாதத்துக்கு ரூ.1600 அல்லது தினசரி ரூ.53 ஆகும்.
இதன்மூலம் அந்தப் பெண்ணுக்கு ரூ.3.8 லட்சம் ரூபாய் 20 ஆண்டுகளுக்குப் பின் சேர்ந்திருக்கும். பாலிசி முதிர்ச்சி அடையும்போது அந்தப் பெண் ரூ.6.62 லட்சம் என்ற ஒரு நல்ல தொகையைப் பெறுவார். இதில் அடிப்படை பாலிசி தொகை ரூ.5 லட்சத்துடன் லாயல்டி அடிஷன் ரூ.1,62,000 அடங்கும்.
இந்த ஜீவன் ஆதார் ஷீலா பாலிசிக்கான பிரீமியமும் முதிர்ச்சித் தொகையும் ஆளாளுக்கு கணக்கில் வித்தியாசப்படும். 8 வயது சிறுமிக்கு வேறு கணக்கீடு பொருந்தும். துல்லியமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் அருகிலுள்ள எல்ஐசி அலுவலகத்துக்குச் சென்று கேட்டறியலாம். முக்கியமாக இந்த பாலிசியில் முதிர்ச்சி தொகைக்கான வருடாந்திர தவணைக்கு அனுமதிக்கப்படுகிறது.
பாலிசிதாரர் பாலிசிக்காலத்தின் போது இறக்க நேரிட்டால் அவரது நாமினிக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும். இது வருடாந்திர பிரீமியம் தொகையில் 7 மடங்கு வரை அல்லது முதிர்ச்சி தொகையில் 110 சதவீதம் ஆகும்.
இந்தப் பாலிசியில் முதிர்ச்சி தொகையுடன் லாயல்டி அடிஷனும் சேர்த்து வழங்கப்படும். இங்கு தரப்பட்ட விவரங்கள் மேலோட்டமானவையே. தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்வதற்கு எல்ஐசி ஏஜெண்டுகளை அணுகுங்கள்.


Click it and Unblock the Notifications