சமீபத்தில் பிராண்ட் ஃபைனான்ஸ் என்கிற கம்பெனி, இந்தியாவிலேயே அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட கம்பெனிகள் பட்டியலை வெளியிட்டது.
அதில் இந்தியாவிலேயே, அதிக மதிப்புடைய இரண்டாவது பிராண்ட் LIC எனச் சொல்லி இருந்தார்கள். அந்த அளவுக்கு இந்தியர்களுக்கு மத்தியில் LIC-க்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது. இத்தனைக்கு இது ஒரு அரசு அமைப்பு.
சமீபத்தில், அப்படிப்பட்ட கம்பெனியையே, LIC Claim கொடுப்பதில் சிக்கல் இருப்பதாகச் சொல்லி வழக்கு தொடுத்து, நீதீமன்றத்தில் தனக்கு சாதகமாக ஒரு தீர்ப்பை வாங்கி இருக்கிறார்.
என்ன பிரச்சனை 1
வந்தாரை வாழ வைக்கும் சென்னையில், ராயப்பேட்டை பகுதியில் வசிப்பவர் பி சுப்ரமணியன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு LIC-ல் ஒரு இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைகிறார். சுப்ரமணியன் LIC திட்டத்தில் இணைந்ததற்கு சான்றாக பாலிசி டாக்குமெண்ட் தந்து இருக்கிறார்கள். அதில் மெச்சூரிட்டி தொகை 62.5 லட்சம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
என்ன பிரச்சனை 2
சுப்ரமணியன் எடுத்த பாலிசியின் காலம் 8 ஆண்டுகள். எனவே மாதம் தோறும் 31,153 ரூபாயை LIC-ல் இணைந்த இன்சூரன்ஸ் திட்டத்துக்கு பிரீமியமாகச் செலுத்தி வந்து இருக்கிறார். 8 ஆண்டு காலத்தில் மொத்தம் 31.77 லட்சம் ரூபாய் பிரீமியமாகச் செலுத்தி இருக்கிறார். பாலிசியின் காலம் நிறைவடைந்த பின், கடந்த ஜூலை 2018-ல் LIC நிறுவனத்திடம் பாலிசி டாக்குமெண்டைக் காட்டி 62.5 லட்சம் ரூபாய் க்ளெய்ம் கேட்டு இருக்கிறார்.
LIC புது ட்விஸ்ட்
"சார் உங்களுக்கு LIC கொடுக்க வேண்டிய க்ளெய்ம் தொகை 62.5 லட்சம் எல்லாம் கிடையாது. அது எழுத்துப் பிழை (Clerical Error). உங்க மொத்த க்ளெய்ம் தொகை வெறும் 14.92 லட்சம் ரூபாய் தான், போய் வாங்கிக்குங்க" எனச் சொல்லி இருக்கிறது LIC தரப்பு. சுப்ரமணியனுக்கு தலையே சுற்றிவிட்டது. ஒரு குட்டி கணக்கு போட்டுப் பாருங்கள்.
லாபம் என்ன
சுப்ரமணியன் கடந்த 8 ஆண்டுகளில் 31.77 லட்சம் ரூபாய் செலுத்தி இருக்கிறார். அதற்கு மெச்சூரிட்டி தொகை வெறும் 14.92 லட்சம் என்றால் அவருக்கு என்ன லாபம் வரும்..? சுமார் 15 லட்சம் நஷ்டம் தானே வரும்..? இப்படிப்பட்ட இன்சூரன்ஸ் திட்டங்களை யாராவது வாங்குவார்களா என்ன..?
நீதிமன்றம்
LIC-ன் பதிலில் திருப்தி அடையாத சுப்ரமணியன், 62.5 லட்சம் ரூபாயை க்ளெய்மாகக் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். சுப்ரமணியன் சார்பாக சுந்தர் மோகன் வாதாடுகிறார். "சுப்ரமணியன், தனக்கு கொடுத்த பாலிசி டாக்குமெண்டில் இருக்கும் 62.5 லட்சம் ரூபாய் க்ளெய்ம் தொகையை பெறத் தான் எந்த கேள்வியும் கேட்காமல், மாதா மாதம் பிரீமியம் செலுத்தி இருக்கிறார். எனவே 62.5 லட்சம் ரூபாயை LIC க்ளெய்ம் தொகையாக கொடுக்க வேண்டும்" என வாதிட்டு இருக்கிறார்.
LIC தரப்பு
ஆனால் LIC தரப்பிலோ "62.5 லட்சம் ரூபாய் என்பது Death Benefit Sum Assured (சுப்ரமணியம் பாலிசி காலத்தில் இறந்துவிட்டால் அவருக்கு கொடுக்க வேண்டிய பணம்) தான். பாலிசி காலம் முடிவடைந்தால் (Maturity Sum Assured) 14.92 லட்சம் தான் கொடுக்க வேண்டும். அதே போல சுப்ரமணியனுக்கு கொடுத்த பாலிசி டாக்குமெண்டிலும் Maturity Sum Assured என்கிற கட்டம் காலியாகத் தான் இருக்கிறது" எனவும் சுட்டிக் காட்டி வாதாடி இருக்கிறது.
LIC வழக்கு தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி டி ஆதிகேசவலு "இருதரப்புமே கவனமாக விவரங்களைச் சரி பார்க்கவில்லை. அதே போல பாலிசி டாக்குமெண்டில் பல இடங்களும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. LIC 8 வருடங்களுக்குப் பிறகு தான் மெச்சூரிட்டி க்ளெய்ம் தொகையில் மாற்றங்களைச் சொல்லி இருக்கிறார்கள். அந்த 8 வருடங்களில், சுப்ரமணியன், எந்த கேள்வியும் கேட்காமல், தன் முழு பிரீமியத்தையும் செலுத்தி முடித்துவிட்டார்.
தீர்ப்பு
LIC நிறுவனம், சுப்ரமணியன் கொடுத்த பணத்தால், எந்த உள் நோக்கமும் இல்லாமல் நன்மை அடைந்து இருக்கிறது. எனவே சுப்ரமணியன் கொடுத்த பிரீமியம் தொகையான 31.77 லட்சம் ரூபாயை LIC திருப்பிக் கொடுக்க வேண்டும். அதோடு பிரீமியம் தொகை வாங்கிய மாதத்தில் இருந்து, ஆண்டுக்கு 7.5 % வட்டியும் கொடுக்குமாறு தீர்ப்பு வழங்கி இருக்கிறது சென்னை உயர் நீதி மன்றம்.


Click it and Unblock the Notifications