சென்னை: நம் அனைவருமே நம்முடைய எதிர்காலத்திற்காகவும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றை மேற்கொள்கிறோம். ஆனால் நாம் செய்யக்கூடிய ஒரு சிறு தவறு, நமக்கு பிறகு நமது வாரிசுகளுக்கு இந்த முதலீடுகளை சென்று சேர்க்காமல் செய்துவிடுகிறது. அந்த தவறு என்ன? அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நம் நாட்டில் கோடிக்கணக்கான பணம் வங்கி டெபாசிட்டுகள், பங்குகள் மற்றும் இன்சூரன்ஸ்கள் என்ற முறையில் யாராலும் கோரப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் நம்முடைய முதலீடுகள் குறித்தும் நம்முடைய சேமிப்புகள் குறித்தும் குடும்பத்தினரிடம் தெளிவாக தெரிவிக்காமல் இருப்பது தான். பொதுவாக ஒரு குடும்பத் தலைவராக இருப்பவர் அல்லது கணவன் - மனைவியாக இருப்பவர்கள் தங்களது முதலீடுகள் மற்றும் சேமிப்புகள் குறித்து ஒருவருக்கொருவர் முழுமையாக தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் வயதில் குழந்தைகள் இருந்தால் அவர்களிடமும் இவற்றைப் பற்றி விரிவாக தெரிவிப்பது நல்லது என்கின்றனர் நிதி ஆலோசகர்கள்.

நீங்கள் செய்துள்ள முதலீடுகள் என்னென்ன, வங்கி டெபாசிட், இன்சூரன்ஸ் உள்ளிட்ட முக்கிய நிதி சார்ந்த தகவல்களை ஒரு டைரியிலோ அல்லது டிஜிட்டல் ஆவணமாகவோ விவரமாக பதிவு செய்து வைக்க வேண்டும். இதுதான் எதிர்காலத்தில் உங்கள் குடும்பத்திற்கு வர வேண்டிய தொகை சரியான முறையில் வந்து சேர்வதை உறுதி செய்யும். உங்களது போர்ட்போலியோவில் எந்த ஒரு மாற்றங்களை செய்தாலும் அதனை இந்த ஆவணங்களில் மறக்காமல் அப்டேட் செய்துவிட வேண்டும். எதிர்பாராத ஒரு நிகழ்வு ஏற்படுகின்ற பட்சத்தில் நீங்கள் சேமித்து வைத்த பணமும் முதலீடும் சரியான நேரத்தில் சரியான நபர்களிடம் சென்று சேர வேண்டும்.
ஒவ்வொருவரும் தங்களது முதலீடுகள் மற்றும் சேமிப்புகள் குறித்து குடும்பத்தில் இருப்பவர்களிடம் தெளிவாக கூறுவது. அதேபோல நீங்கள் செய்துள்ள முதலீடுகளில் நாமினி யார் என்பதை தெளிவாக குறிப்பிட்டு அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்து இருப்பது நல்லது.
உங்களுக்கு ஏதேனும் நிகழும் பட்சத்தில் நீங்கள் யாரை நாமினியாக தேர்வு செய்தீர்களோ அவர்களுக்கு எளிதாக உங்களது முதலீடு மற்றும் அதன் பலன்கள் சென்று சேரும் அல்லது அவர்கள் வந்து அந்த குறிப்பிட்ட நிறுவனங்களை நாடும்போது எந்த ஒரு சட்ட ரீதியான சிக்கல்களும் இல்லாமல் அவர்களுக்கு சேர வேண்டிய பலன்கள் சென்று சேரும்.
உங்களது பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்ட அனைத்துமே எளிமையாக உங்களது வாரிசுகளுக்கு மாற்றிக் கொள்ள முடியும். பலர் இவ்வாறு தெரிவிக்காமல் இருப்பதால் கஷ்டப்பட்டு சேமிக்கப்படும் பணம் உரியவர்களிடம் செல்லாமல் வங்கிகளிடமும், நிறுவனங்களிடமும் தேங்கி அவர்களே அனுபவித்து வருகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications