மியூச்சுவல் ஃபண்ட்களில் நீண்ட காலம் SIP முறையில் முதலீடு செய்தவர்களுக்கு பெரிய செல்வம் தேடி வரும் என சொல்லப்ப்டுவது உண்டு. அதனை உறுதிப்படுத்தும் ஒரு செய்தி தான் இது. சமீபத்திய ஆய்வுப்படி, கடந்த 20 ஆண்டுகளில், முன்னணி எஸ்பிஐ ஃபண்டுகள் 16-17% வருமானத்தை அளித்துள்ளன. மாதம் ரூ 10,000 எஸ்ஐபி செய்தவர்களுக்கு இது ரூ 1.5 கோடிக்கும் மேல் லாபம் தந்துள்ளது. நுகர்வு, தொழில்நுட்பம், சுகாதாரம், மிட்கேப் உள்ளிட்ட துறைகளில் உள்ள இந்த ஃபண்டுகள், ஒழுக்கமான முதலீடு அவசியம் என்பதை உணர்த்துகின்றன.
மியூச்சுவல் ஃபண்டில் நீண்டகால முதலீட்டிற்கு எஸ்பிஐ ஒரு நம்பகமான பெயர். இந்தியாவின் பழமையான பல ஈக்விட்டி ஃபண்டுகள் எஸ்பிஐயைச் சேர்ந்தவை. பல சந்தை ஏற்ற இறக்கங்களை கடந்து, நீண்டகால தொடர் முதலீட்டால் கூட்டு வட்டியின் துணையுடன் கோடிக்கணக்கான லாபம் ஈட்டித் தந்துள்ளன.

சமீபத்திய 20 ஆண்டுகால எஸ்ஐபி செயல்திறன் அடிப்படையில், எஸ்பிஐயின் சிறந்த 5 ஃபண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் வருமானம் 16.06% முதல் 17.57% வரை பதிவானது. 20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ10,000 எஸ்ஐபி செய்தவருக்கு, இன்று அவரது முதலீடு ரூ 1.51 கோடி முதல் ரூ 1.83 கோடி வரை உயர்ந்திருக்கும்.
முதலிடம் பிடித்த எஸ்பிஐ கன்சம்ப்ஷன் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் 20 ஆண்டுகளில் 17.57% வருமானம் தந்துள்ளது. எஃப்.எம்.சி.ஜி, ஆட்டோ, பெயின்ட்ஸ், டெலிகாம் போன்ற நுகர்வுத் துறைகளில் முதலீடு செய்து, நாட்டின் வருமான வளர்ச்சி மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறையால் உயர்வு பெற்றது.
இரண்டாம் இடத்தில் எஸ்பிஐ டெக்னாலஜி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் உள்ளது. இது தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறையின் எழுச்சியை இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல் போன்ற மிகப்பெரிய பங்குகள் மூலம் பயன்படுத்தியது.
எஸ்பிஐ ஃபோகஸ்டு ஃபண்ட், குறைந்த எண்ணிக்கையில் நம்பகமான நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. Alphabet (கூகிள்), ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ போன்ற பங்குகள் அதன் போர்ட்ஃபோலியோவை பலப்படுத்துகின்றன.
எஸ்பிஐ ஹெல்த்கேர் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் 16.08% வருமானம் ஈட்டியது. மருந்துகள், சுகாதாரத் துறையின் நீண்டகால வளர்ச்சி மற்றும் பெருந்தொற்றுக்குப் பிந்தைய வலுவான தேவைக்கு இது காரணம். எஸ்பிஐ மிட்கேப் ஃபண்ட், நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்கிறது; மிட்கேப் துறை ஏற்ற இறக்கம் மிக்கதாயினும், நீண்டகாலத்தில் சிறந்த வருமானத்தை அளித்துள்ளது.
இந்த உயர் வருமானங்கள், சிப் மற்றும் கூட்டு வட்டியின் அற்புத சக்தியை உணர்த்துகின்றன. சந்தை ஏற்ற இறக்கங்களுக்கும் இடையே தொடர்ந்து ஒழுங்காக முதலீடு செய்வது மிக முக்கியம். எஸ்பிஐயின் இந்த நிதிகள், நீண்டகால ஒழுக்கமான முதலீடு, சிறிய மாதச் சேமிப்புகளையும் கோடிக்கணக்கிற்கு மாற்றும் என்பதை நிரூபிக்கின்றன.
ஆனால், கடந்தகால வருமானங்கள் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அல்ல. வெறும் வருமானத்தைப் பார்த்து மட்டும் முதலீடு செய்யாமல், ஆபத்து தாங்கும் திறன், முதலீட்டு காலம் மற்றும் நிதி இலக்குகளைக் கருத்தில் கொண்டு ஒரு நிதியைத் தேர்வு செய்ய வேண்டும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications