குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில், தபால் அலுவலகம் மூலம் அரசாங்கம் பல சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இதில், பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு திட்டங்களும் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ், அதிக வருமானத்தை வழங்கும் குறுகிய கால முதலீட்டுத் திட்டமாகும்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் சேமிப்புத் திட்டமாகும். இது பெண்களுக்காக வழங்கப்படும் திட்டமாகும். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்திற்கு 7.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இது குறுகிய காலத்தில் தங்கள் சேமிப்பை அதிகரிக்க விரும்பும் பெண்களுக்கு ஏற்ற விருப்பமாக இருக்கும்.

முதலீட்டு காலம்: மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் முதிர்வுக் காலம் இரண்டு ஆண்டுகள். இதில் அதிக பட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். 2023-ஆம் ஆண்டில் நரேந்திர மோடி அவர்களால் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பின் பலராலும் விரைவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அஞ்சல் அலுவலக திட்டங்களில் இந்தத் திட்டமும் ஒன்று.
நன்மைகள்: வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வட்டி விகிதங்கள் மற்றும் கூடுதல் வரிச் சலுகைகளை மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் வழங்குகிறது. மற்றொரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், இது 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கும் கணக்குகளைத் திறக்க அனுமதிக்கிறது, இது அடுத்த தலைமுறைக்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் 2 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்வதன் மூலம் 7.5% வட்டி விகிதத்தில் முதல் ஆண்டில் 15,000 ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கும். இரண்டாவது ஆண்டில் வட்டி வருமானமாக 16,125 கிடைக்கும். அதாவது இரண்டு ஆண்டுகளில் 2 லட்ச ரூபாய் முதலீட்டுக்கு மொத்த வருமானமாக ரூ.31,125 வட்டி கிடைக்கும். இதன் மூலம் உங்களின் மொத்த முதிர்வுத் தொகை ரூ.2,31,125 ஆக இருக்கும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்: துரதிர்ஷ்டவசமாக கணக்கு வைத்திருப்பவருக்கு மரணம் ஏற்பட்டால், நாமினி அல்லது குடும்ப உறுப்பினர்கள் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெறலாம். உயிருக்கு ஆபத்தான நோய்களின் போது, மருத்துவ சிகிச்சைக்காகவும் டெபாசிட் செய்தத் தொகையை திரும்பப் பெறலாம், மேலும் கணக்கு துவங்கிய 6 மாதங்களுக்குப் பிறகு, வட்டி விகிதத்தில் 2% குறைக்கப்பட்டால் கணக்கை மூடிக் கொள்ளலாம்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் என்பது, தங்களுடைய சேமிப்பை பாதுகாப்பாகவும் விரைவாகவும் அதிகரிக்க விரும்பும் பெண்களுக்கு ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும்.


Click it and Unblock the Notifications