மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதல் உலக பங்குச் சந்தைகளை பெரிதும் பாதித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 115-ஐ தாண்டியுள்ளது. இதனால் உலகளாவிய பங்கு சந்தைகளில் கடுமையான விற்பனை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் 3 சதவீதம் சரிந்துள்ளன. தென் கொரியாவின் கோஸ்பி 8.2 சதவீதம், ஜப்பானின் நிக்கேய் 7 சதவீதம், சீனாவின் முக்கிய குறியீடு 1.7 சதவீதம் வீழ்ந்துள்ளன. இந்த சரிவு கடந்த வார இழப்பை மேலும் மோசமாக்கியுள்ளது.

இந்த நெருக்கடியில் முதலீட்டாளர்களிடையே, சந்தையில் பழம் தின்று கொட்டை போட்ட பிரபலமான முதலீட்டாளர்களின் பழைய அறிவுரைகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
உலகின் மிகப் பெரிய முதலீட்டாளர்களான பீட்டர் லிஞ்ச் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரின் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் டிரெண்டாகி அதிகப்படியான மக்களால் பகிரப்பட்டு வருகிறது.
பீட்டர் லிஞ்ச்
அமெரிக்க முதலீட்டாளர் , மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர், எழுத்தாளர், Fidelity Investments-ன் மூத்த அதிகாரி என பல முகங்களை கொண்ட பீட்டர் லிஞ்ச், பங்குச் சந்தை சரிவுகள் இயல்பானவை என்று கூறுகிறார். கடந்த நூறாண்டு கால வரலாற்றில் சுமார் 50 முறை 10 சதவீதத்துக்கும் மேல் சரிவு ஏற்பட்டுள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. 25 சதவீதத்துக்கு மேல் சரிவு (பியர் மார்க்கெட்) 15 முறை நடந்துள்ளது. இது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது.
லிஞ்ச் முதலீட்டாளர்களுக்கு தெளிவான அறிவுறை என்னவென்றால் "சந்தை சரியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு தயாராக இல்லையென்றால் பங்குகளை வைத்திருக்கக் கூடாது" என்று அவர் கூறுகிறார். சந்தை சரியும் போது வலுவான நிறுவனங்களை குறைந்த விலையில் வாங்குவது நல்ல வாய்ப்பு என்று அவர் வலியுறுத்துகிறார்.
உதாரணமாக, வால்மார்ட் நிறுவன பங்கு 1970-ல் பட்டியலான பிறகு 10 ஆண்டுகளுக்குப் பிறகு வாங்கியவர்களும் 30 மடங்கு லாபம் பார்த்துள்ளனர். இது நீண்டகால முதலீட்டின் சக்தியை காட்டுகிறது.
வாரன் பஃபெட்
பில்லியனரும், நவின காலத்து முதலீட்டு வல்லுனரான வாரன் பஃபெட், போர் காலங்களில் கூட பங்குகளை வாங்குவது தான் சரியானது என்று கூறுகிறார். இரண்டாம் உலகப் போரின் போது கூட பங்குச் சந்தை உயர்ந்தது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
போர் காலங்களில் பணத்தின் மதிப்பு குறையும். பணவீக்கம் ஏற்படும். எனவே பணத்தை வைத்திருப்பது ஆபத்தானது. வணிகங்கள், நிலங்கள், ரியல் எஸ்டேட் போன்ற உண்மையான சொத்துகள் மதிப்பை தக்க வைத்துக் கொள்கின்றன என்று பஃபெட் விளக்குகிறார்.
ஈரான் போர்
வாரன் பபெட் மற்றும் பீட்டர் லிஞ்ச் அட்வைஸ் இப்போது மீண்டும் வைரலாகி வருகின்றன. ஈரான் மோதல் தொடர்ந்து வருவதால் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக பங்குச் சந்தைகள் சரிந்துள்ளன.
இந்த சூழலில் முதலீட்டாளர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று இந்த பழைய அறிவுரைகள் நினைவூட்டுகின்றன. சந்தை ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை. நீண்டகாலத்தில் வலுவான நிறுவனங்களில் முதலீடு செய்வது தான் வெற்றிக்கு வழிவகுக்கும்.


Click it and Unblock the Notifications