காலையில் அலாரம் அடிக்கும் போது எரிச்சலோடு எழுந்து, வீட்டு வேலைகளை முடித்து அவசர அவசரமாக அலுவலகம் ஓடும் இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு ஒரு குட்பை சொல்ல உங்களுக்கு விருப்பமா? நீங்கள் தூங்கி கொண்டிருக்கும் போது உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்து விழ வேண்டும் என்பதுதான் உங்கள் கனவாக இருக்கிறதா? அது தான் பாசிவ் இன்கம் (Passive Income).
பங்குச் சந்தை ஒரு நாள் உச்சத்தை தொடுவதும், மறுநாள் அதல பாதாளத்திற்கு சரிவதுமாக ஊசலாடி கொண்டிருக்கும் இன்றைய சூழலில், நிரந்தரமான மாத வருமானத்தை உருவாக்குவது எப்படி? வெறும் கனவாக மட்டுமே இருக்கும் மாதம் 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்தை, ஒரு முறையான முதலீட்டு தொகுப்பு மூலம் எப்படி சாத்தியமாக்கலாம்? இதற்கு கோடிக்கணக்கில் பணம் வேண்டுமா அல்லது புத்திசாலித்தனமான திட்டமிடல் வேண்டுமா? உங்கள் பணத்தை உங்களுக்காக வேலை செய்ய வைக்கும் அந்த ரகசியங்களையும், அதற்கு தேவையான நிதி இலக்குகளையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பங்குச் சந்தையானது பெரிய அளவில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் இந்த சூழலில், முதலீட்டாளர்களின் பல லட்சம் கோடி முதலீடுகளானது காற்றோடு கரைந்து போயுள்ளது ஒரு புறம் என்றால், மறுபுறம் இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி இருக்குமோ என்ற பதற்றமும் முதலீட்டாளர்களை தொற்றிக் கொண்டுள்ளது. இந்த சமயத்தில் முதலீட்டாளர்கள் பாதுகாப்புடன் இருக்க என்ன செய்யலாம். நிரந்தமான வருமானத்திற்கு என்ன வழி என யோசித்து வருகின்றனர். அதிலும் சிலர் இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கை சூழலை விடுத்து, நிம்மதியாக நினைத்த வேலைகளை செய்து கொண்டு வருமானம் பார்ப்பது, குறிப்பாக மாதம் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பாசிவ் வருமானத்தை எப்படி பெறலாம் என்ற கேள்வியும் பலரிடையே இருக்கிறது.
முதலீட்டு கார்ப்பஸ்?
வெறும் கையால் முழம் போட முடியாது என்பது போல, வெறுமனே எந்த மூலதனமும் இல்லாமல் மாதம் 1 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் எப்படி சாத்தியமாகும். முதலில் அதற்கு தேவையான கார்ப்பஸ்-ஐ உருவாக்க வேண்டும். அதை எஸ்ஐபி மூலம் இளமை காலத்தில் இருந்தே தொடங்கினால், குறிபிட்ட காலத்தில் இலக்கை அடைய முடியும். அதன் மூலம் சரியான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்து மாத வருமானத்தை பெறலாம். பலரும் ஓய்வுகாலத்தில் சம்பளம் போன்று பெற நினைக்கிறார்கள், சரியான திட்டமிடல் இருந்தால் 40 - 50 வயதிலும் கூட, நீங்கள் ஓய்வு பெறலாம்.
உங்கள் கார்ப்பஸ் தொகையை கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக வர வேண்டும் என்ற ஒற்றை இலக்கை மட்டும் பார்க்காமல், உங்கள் முதலீட்டின் பாதுகாப்பு மற்றும் அவசரத் தேவைக்கு பணம் எடுக்கும் வசதி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போதைய சந்தை சூழலில், அரசு பத்திரங்கள் (Government Securities) மற்றும் மிக உயர்ந்த தரவரிசை கொண்ட AAA-Rated கார்ப்பரேட் பத்திரங்கள், ஆண்டுக்கு 6.5% முதல் 7.5% வரை லாபத்தை வழங்குகின்றன. ஒரு வேளை நீங்கள் எதிர்பார்க்கும் லாப விகிதம் குறையும் போது, அதே அளவு வருமானத்தை பெற நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய தொகையின் அளவு அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு மாதம் 50,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பாசிவ் வருமானம் பெற மிகப்பெரிய கார்ப்பஸ் தேவைப்படும். மாதம் 50,000 ரூபாய் என்றால் கூட, ஆண்டுக்கு 6 லட்சம் கிடைப்பதாக வைத்து கொள்வோம். அதற்கே உங்களிடம் 75 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை கார்ப்பஸ் தேவைப்படும். இது பார்ப்பதற்கு எளிதாக தோன்றலாம். ஆனால் முறையான திட்டமிடல் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
அதோடு உங்கள் முதலீட்டை ஒரே இடத்தில் செய்யாமல், அரசு பத்திரங்கள் (G-Secs ), AAA-ரேட்டிங் கொண்ட கார்ப்பரேட் பத்திரங்கள், டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றில் செய்யலாம். மேற்கண்ட முதலீடுகல் மட்டுமல்ல, பிக்சட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட், பங்குகள் என பிரித்து போடலாம். அதனுடன் தங்கம் போன்றவற்றையும் சேர்க்கலாம். இது வட்டி விகித மாற்றங்களில் இருந்து உங்களைக் காப்பதோடு, பணத் தேவையையும் பூர்த்தி செய்யும். இது தொடர்ச்சியான வருமானத்தை உறுதி செய்யும். ரிஸ்கை குறைக்கவும் உதவும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications