இன்றைய சூழலில் பலரின் பொதுவான பிரச்சினை என்ன தெரியுமா? கையில் கிடைக்கும் சம்பளம் அப்படியே செலவாகிறது என்பதுதான். எப்படி பணம் சம்பாதிப்பது முக்கியமோ அதே அளவுக்கு அதை சரியான இடங்களில் முதலீடு செய்வதும் முக்கியம். இந்தப் பதிவில் 9 டூ 5 ஜாப் செல்பவர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு பெறும் பணத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். உங்கள் நிதி நலனை மேம்படுத்த இந்த 7 முக்கியமான ஃபார்முலாக்களை பயன்படுத்தலாம்.
ரூல் ஆஃப் 72: இது மிகவும் எளிமையான ஒரு பார்முலா. முதலீடு செய்ய வேண்டும் அந்த பணம் உடனே டபுள் ஆக வேண்டும் என்பது இங்கு பல முதலீட்டாளர்களின் கனவாக இருக்கிறது. இதைத் தெரிந்து கொள்ள "72 ஃபார்முலா" உதவியாக இருக்கும். அதாவது உங்களுடைய பணம் எப்போது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்பதை இந்த ஒரு எளிய ஃபார்முலாவை வைத்து சொல்லிவிடலாம்.
உதாரணமாக நீங்கள் ஏதோ ஒரு திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் அதற்கு 12 சதவீத வருடாந்திர வட்டி வருமானம் வழங்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். பார்முலாவின் படி 72-ஐ 12-ஆல் (72/12) வகுத்தால் என்ன கிடைக்கும்? 6 என்பது விடையாக வரும். உங்களுடைய பணம் இரட்டிப்பாக மாற தோராயமாக 6 ஆண்டுகள் எடுக்கும். நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு 10 சதவீத வட்டி கிடைத்தால் 72-ஐ 10-ஆல் வகுக்க வேண்டும். இப்படி கணக்கிடும் பட்சத்தில் நீங்கள் செய்யும் முதலீடு எப்போது டபுள் ஆகும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ரூல் ஆஃப் 114: உங்களுடைய முதலீடு எப்போது மூன்று மடங்காக உயரும் என்பதைத் தெரிந்து கொள்ள இந்த ஒரு ஃபார்முலாவை பயன்படுத்தலாம். முதலில் உங்களுக்கு கிடைக்கும் வட்டி எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு 114-ஐ உங்களுக்கு வழங்கப்படும் வட்டியால் வகுக்க வேண்டும். உதாரணமாக 12 சதவீத வட்டி வருமானத்தில் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 114-ஐ, 12-ஆல் வகுக்கும் போது (114/12) 9.5 என்ற விடை கிடைக்கும். உங்கள் பணம் 3 மடங்காக உயர சுமார் 9 ஆண்டுகள், 6 மாதம் ஆகும் என்பதுதான் இதன் அர்த்தம்.
50:30:20 ஃபார்முலா: உங்கள் வருமானத்தை எதற்கெல்லாம் பிரித்து பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த ஃபார்முலாவை வைத்து தெரிந்து கொள்ளலாம். நீங்கள் மாத மாதம் ரூ.50,000 சம்பளம் பெறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதை மூன்று மடங்காக பிரிக்க வேண்டும். அத்தியாவசிய செலவுகள், பொழுதுபோக்கு செலவுகள் மற்றும் சேமிப்பு.
அத்தியாவசிய செலவுகளுக்காக 50 சதவீதத்தை ஒதுக்கலாம். ரூ.50,000 சம்பளத்தில் 50 சதவீதம் என்றால் ரூ.25,000. மீதமுள்ள 30 சதவீதத்தை பொழுதுபோக்கு செலவுகளுக்காக பயன்படுத்தலாம். பின்னர் 20 சதவீதத்தை சேமிப்பு அல்லது முதலீட்டுக்காக பயன்படுத்த வேண்டும்.
100 மைனஸ் ஏஜ் ரூல்: பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இந்த ஒரு ஃபார்முலாவைப் பயன்படுத்தலாம். 100 என்ற நம்பரிலிருந்து உங்களுடைய தற்போதைய வயதைக் கழிக்க வேண்டும். இதில் வரும் விடை தான் நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டிய சதவீதம். மீதமுள்ள தொகையை கண்டிப்பாக வேறு சில முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
உதாரணமாக உங்களுடைய வயது 30 என்று வைத்துக்கொள்வோம். 100 - 30 என்றால் 70 கிடைக்கும். நீங்கள் உங்கள் முதலீட்டில் 70% பங்கு சந்தையில் போடலாம். மீதமுள்ள 30 சதவீதத்தை பிற பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். வயது கூட கூட ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க இந்த ஒரு ஃபார்முலா உதவியாக இருக்கும்.
10 சதவீத முதலீடு: நிதி ஆலோசகர்களின் கருத்துப்படி உங்கள் வருமானத்தில் குறைந்தது 10 சதவீதமாவது முதலீடு செய்ய வேண்டும். அதைத் தான் 10% முதலீட்டு விதி என்று அழைக்கிறோம். அதே போல உங்கள் சம்பளம் உயரும்போதெல்லாம் முதலீட்டு தொகையையும் படிப்படியாக உயர்த்த வேண்டும்.
எமர்ஜென்சி ஃபண்ட்: அவசரகாலம் என்பது சொல்லிவிட்டு வராது. எனவே மருத்துவச் செலவுகள், வேலை இழப்பு, பிற நிதி நெருக்கடி ஏற்படும்போது யாரிடமும் கையேந்தாமல் இருக்க எமர்ஜென்சி ஃபண்டு மிகவும் முக்கியம். அதற்கு ஒருவர் குறைந்தது ஆறு மாத குடும்ப செலவிற்கான தொகையை எமர்ஜென்சி ஃபண்டாக வங்கி கணக்கில் வைத்திருக்க வேண்டும். நினைத்த நேரத்தில் எடுக்கக்கூடிய வகையில் அந்த பணம் இருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள ஏழு விதிகளையும் ஒருவர் பின்பற்றினால் எப்பேற்பட்ட பணவீக்க சூழலிலும் பொருளாதார ரீதியாக சிறப்பாக வாழலாம்.


Click it and Unblock the Notifications