சென்னை: 2025 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கிறது. இந்த புது ஆண்டில் பின் வரக்கூடிய 8 டிப்ஸ்களை பின்பற்றினால் எளிதாக நீங்கள் செல்வ வளத்தை பெருக்க முடியும்.
பட்ஜெட்: 50 – 30- 20 விதிமுறைப்படி உங்களுடைய வருமானத்தில் 50 சதவீத தொகையை அடிப்படை செலவினங்களுக்கும், 30 சதவீத தொகையை மற்ற செலவினங்களுக்கும், 20 சதவீத தொகையை சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கும் என பிரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரித்து பட்ஜெட் போட்டு செலவு செய்கின்ற பொழுது நீங்கள் தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். மேலும் பட்ஜெட் தொகைக்குள்ளேயே உங்களுடைய செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். இது நீண்ட கால நோக்கில் உங்களுடைய செல்வத்தை பெருமளவில் பெருக்குவதற்கு உதவும்.

முதலீடு: நீண்ட கால மற்றும் நீடித்த வருவாய் தரக்கூடிய முதலீட்டு கருவிகளை தேர்ந்தெடுத்து தொடர்ச்சியாக அதில் முதலீடு மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது என்பிஎஸ் போன்ற திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய தொடங்க வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர்.
அவசரகால நிதி: உங்களுடைய மாதாந்திர வருமான தொகையை ஆறால் பெருக்கி எவ்வளவு தொகை வருகிறதோ அந்த தொகையை அவசரகால தொகையாக சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இது நாள் வரை அதனை செய்யாதவர்கள் இந்த புத்தாண்டிலாவது அவசர கால நிதியை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இவ்வாறு அவசரகால நிதியை சேமித்து வைத்த பிறகு முதலீடு மற்றும் சேமிப்புகளை தொடங்கலாம் என்றும் கூறுகின்றனர்.
கடன் மேலாண்மை: 2025 ஆம் ஆண்டில் கடன் வைத்திருப்பவர்கள் தங்களுக்கு அதிக வட்டி போடக்கூடிய கடன்களை முதலில் அடைக்க தொடங்க வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர் . தற்போது என்னென்ன கடன்கள் எல்லாம் இருக்கின்றன அதற்கு எவ்வளவு வட்டி செலுத்துகிறோம் அதில் எது அதிகபட்ச வட்டியை பெறுகிறது என்பதை கணக்கு செய்து முதலில் அந்த கடனை அடைக்க வேண்டும் என்கின்றனர்.
நிதி சார்ந்த திட்டமிடல்: நிதி சார்ந்த திட்டமிடல் குறித்தும் முதலீடு சார்ந்த கருவிகள் குறித்தும் அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.
வரி திட்டமிடல் : வருமான வரி செலுத்தக்கூடிய நபராக இருந்தால் வருமான வரியை குறைப்பதற்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன அதற்கு என்னென்ன முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ப முதலீடுகளை மேற்கொள்ளலாம் என கூறுகின்றனர்.
காப்பீடு: டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ காப்பீடு ஆகிய இரண்டும் இதுவரை எடுக்காமல் இருந்தால் அதை கண்டிப்பாக 2025 ஆம் ஆண்டில் எடுத்து விட வேண்டும் என்கின்றனர்.
தேவையற்ற செலவினங்களை குறைத்தல்: பட்ஜெட் போடுவதன் மூலம் தேவையற்ற செலவினங்களை குறைத்து கொள்ள வேண்டும். அந்த தொகையை பணவீக்கத்துக்கு நிகரான லாபம் தரக்கூடிய கருவிகளை தேர்வு செய்து முதலீடு செய்யும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications