இன்றைய விலைவாசி உயர்வுக்கு மத்தியில் தங்கள் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் ஒரு சிலர் கிரெடிட் கார்டுகளைப் பெறுகின்றனர். கிரெடிட் கார்டின் நன்மை என்னவென்று உங்களுக்கே தெரியும். முதலில் செலவு செய்து கொண்டு பிறகு பணத்தை செலுத்தலாம். அதோடு இதற்கு கூடுதலாக வட்டி இல்லா காலமும் வழங்கப்படுகிறது. நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்து கொண்டு பிறகு வட்டி இல்லாமல் அதை அடைக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு நீங்கள் செலவு செய்தால் கண்டிப்பாக வட்டி விதிக்கப்படும்.
கிரெடிட் கார்டை வங்கிகள் ஒருவருடைய வருமானம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே வழங்குகின்றன. எனவே வருமானம் பற்றிய தகவல்களை கிரெடிட் கார்டு பெறும்போது கண்டிப்பாக வங்கிகளுக்கு வழங்க வேண்டும். இதை வைத்துதான் வங்கிகள் உங்களுக்கு எவ்வளவு கடன் தரலாம்? என்பதை மதிப்பீடு செய்யும். அனைவரிடமும் தங்கள் வருமானத்தை நிரூபிக்கும் அளவிற்கு பே ஸ்லிப், வருமானச் சான்றிதழ் இருக்காது. ஒருவர் எந்தவித வருமானம் சார்ந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் கிரெடிட் கார்டு பெற முடியுமா? என்ற விவரங்களைத் தான் இந்தப் பதிவில் பார்க்க போகிறோம்.
சம்பளம் வாங்குபவர்களுக்கு பே ஸ்லிப் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் சுயமாக தொழில் செய்பவர்கள், ஃப்ரீலான்சர்கள் போன்றோரிடம் வருமானச் சான்றிதழ் எதுவும் இருக்காது. இதுபோன்ற சூழலில் ஒருவர் கடன் கேட்டால் வங்கிகளுக்கு ரிஸ்க் சற்று அதிகம். ஏனெனில் நீங்கள் வாங்கிய கடனை எப்படி செலுத்துகிறீர்கள்? என்பதைத் தீர்மானிப்பதே உங்களுடைய வருமானம் தான். அப்படி இருக்கையில் நீங்கள் தக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் வங்கிகள் உங்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கத் தயங்கும். ஆனால் இதைத் தாண்டியும் கிரெடிட் கார்டைப் பெற முடியும். பே ஸ்லிப் இல்லாமல் கிரெடிட் கார்டு பெறும் 4 வழிகளைப் பார்ப்போம்.

பிக்சட் டெபாசிட் (FD): இன்றெல்லாம் ஒவ்வொருவரும் தங்களுக்கென சேமிப்பு திட்டங்களில் சேமித்து வைத்திருக்கின்றனர். அப்படி நீங்களும் பிக்சட் டெபாசிட் செய்திருந்தால் அந்தத் தொகைக்கு எதிராக நீங்கள் கடன் பெற முடியும். உதாரணமாக நீங்கள் ரூ.50,000 டெபாசிட் செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 80 முதல் 90 சதவீதம் வரை கடனாகப் பெறலாம். நீங்கள் கிரெடிட் கார்டு பெற்று, கடனை அடைக்கத் தவறினால் உங்களுடைய பிக்சட் டெபாசிட் தொகையிலிருந்து வங்கிகள் பணத்தை பறிமுதல் செய்யும். இதற்கு எந்தவித பே-சிலிப்பும் தேவையில்லை.
வங்கியுடனான பந்தம்: நம் வீட்டிற்கு அருகில் இருக்கும் அண்ணாச்சி கடையில் அடிக்கடி சென்று மளிகை சாமான்கள் வாங்கினால், அவர் 2 அல்லது 3 நாட்கள் கழித்து நம்மிடம் பணத்தைப் பெற்றுக் கொள்வார். இதே லாஜிக் தான் வங்கிகளுக்கும். நீங்கள் பல வருடங்களாக ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்கள்.. அதில் நல்ல ட்ரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியும் இருந்தால், வங்கிகள் உங்களை நம்பகமான வாடிக்கையாளராகக் கருதும். இப்படி வங்கியுடன் உங்களுக்கு நல்ல பந்தம் இருந்தால், எந்தவித பே-ஸ்லிப்பும் இன்றி நீங்கள் கடன் பெறலாம்.
இணை விண்ணப்பதாரர்: உங்களிடம் தான் பே சிலிப் இல்லை. ஆனால் உங்கள் குடும்பத்தில் யாரேனும் வருமானம் ஈடுபவராக இருந்தால், அவருடைய வருமானத்தை காண்பித்து கிரெடிட் கார்டு பெறலாம். இதற்கு உங்களுடைய வருமானம் பார்க்கப்பட மாட்டாது. நீங்கள் ஒரு விண்ணப்பதாரரை கூட்டி செல்கிறீர்கள் அல்லவா? அவருடைய வருமான ஆதாரம் இருந்தால் போதுமானது.
சிபில் ஸ்கோர்: இந்த ஒரு ஸ்கோர் தான் வங்கிகள் உங்களுக்கு கடன் தரலாமா? அல்லது வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும். கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 900 வரையில் இருக்கும். 800-க்கு மேல் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் இருந்தால் நீங்கள் நல்ல நிதி நடத்தை உடையவராக வங்கிகள் கருதும். கிரெடிட் ஸ்கோர் என்பது நீங்கள் ஏற்கனவே வாங்கிய கடனை எப்படி செலுத்தி இருக்கிறீர்கள்? ஏதேனும் தவணையை தவறவிட்டீர்களா? என்பதை எல்லாம் பொறுத்துதான் கணக்கிடப்படும். ஏற்கனவே நீங்கள் கடன் பெற்று அதை சரியாக செலுத்தியிருந்தால் பிரச்சனையே இல்லை. கிரெடிட் ஸ்கோர் கண்டிப்பாக அதிகமாக தான் இருக்கும்.இது போன்ற சூழலிலும் எந்த பிரச்சனையும் இன்றி கிரெடிட் கார்டு பெறலாம்.
சரி ஏதோ ஒரு வழிமுறையில் கிரெடிட் கார்டை பெற்று விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதன் பிறகு நீங்கள் செய்யும் செலவுதான் முக்கியம். கிரெடிட் கார்டை அவசர தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக தேவையின்றி செலவு செய்தால் பெரும் கடன் சுமையில் சிக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஏனெனில் ஒரு சில வங்கிகள் வருடத்திற்கு 42 சதவீதம் வரை கிரெடிட் கார்டு லோனுக்கு வட்டி வசூலிக்கின்றன. அப்படியானால் நினைத்து பாருங்கள்! எவ்வளவு கூடுதல் வட்டியை நீங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டும் என்று.. கிரெடிட் கார்டை பெறுவது எவ்வளவு முக்கியமோ? அதே அளவுக்கு நீங்கள் அதை சரிவர செலுத்துவதும் முக்கியம், என்பதை நினைவில் கொள்ளவும்.
வங்கிகள் கிரெடிட் கார்டுக்கு சில மறைமுக கட்டணங்களையும் வசூலிக்கும். ஆனால் இது பற்றிய விழிப்புணர்வு கிரெடிட் கார்டு பெறுபவர்களுக்கு இருக்காது. அதுவும் முதன்முதலாக கிரெடிட் கார்ட் பெற விண்ணப்பிப்பவராக இருந்தால் விதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக வங்கிகள் வட்டியில்லா காலத்தை வழங்கும் என்று முன்பே பார்த்தோம். கிரெடிட் கார்டை வாங்கிய பிறகு நீங்கள் அதை வைத்து ஏடிஎம்மில் பணம் எடுத்தால் வட்டியில்லா காலம் உடனே நிறுத்தப்படும். அதிலிருந்து வங்கிகள் வட்டி வசூலிக்க தொடங்கி விடும். இதை உங்களிடம் முன்பே சொல்லாது. எனவே கிரெடிட் கார்டை பெறும்போது நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை தெரிந்து கொண்டு பெறுங்கள்!


Click it and Unblock the Notifications