வேலை நிமித்தமாக வெளிநாடு சென்று இருப்பவர்கள் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் இந்தியாவிற்கே திரும்பி செட்டிலாக வேண்டும் என எண்ணுகின்றனர். அவ்வாறு இத்தனை ஆண்டு காலம் அமெரிக்காவில் வேலை செய்து சம்பாதித்து வந்த ஒரு நபர் மீண்டும் இந்தியா திரும்பும் போது தன்னிடம் இருக்கும் பணத்தை எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிசினஸ் டுடே தளத்தில் 33 வயதான அந்த நபர் "நான் அமெரிக்காவில் இருந்து மீண்டும் இந்தியாவிற்கே திரும்ப விரும்புகிறேன். என்னிடம் தற்போது 10 கோடி ரூபாய் நிதி தொகுப்பு இருக்கிறது. இதனை நான் எந்த முறையில் முதலீடு செய்ய வேண்டும். இந்தியா திரும்பியவுடன் நான் பணி ஓய்வு பெற வேண்டும் என விரும்புகிறேன். மாதம் தோறும் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வரக்கூடிய வகையில் முதலீடு செய்ய வேண்டும்" என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு 1பைனான்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரஜானி தந்தாலே விரிவான பதில் அளித்துள்ளார். அந்த நபர் தன்னிடம் இருக்கக்கூடிய பணத்தை ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல் பல்வேறு கருவிகளில் முதலீடு செய்ய வேண்டும் என யோசனை தெரிவித்து இருக்கிறார்.
ஈக்விட்டியில் 50% முதல் 60% பங்களிப்பு:
அவரிடம் இருக்கும் 10 கோடி ரூபாயில் 6 கோடி ரூபாயை சென்செக்ஸ் அல்லது நிஃப்டி 50 இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். நீண்ட கால அடிப்படையில் சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்பவும் பணவீக்கத்தை விட அதிகமான வருமானமும் இதில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
பத்திரங்களில் 35-40% முதலீடு:
கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்தால் அது நிலையான வருமான தரும் என யோசனை கூறுகிறார். குறிப்பாக அரசு வெளியிடும் பத்திரங்களில் முதலீடு செய்தால் வங்கிகள் வழங்கும் நிலையான வைப்பு தொகை திட்ட வட்டியை விட அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.
தங்கத்தில் 5% முதலீடு:
10 கோடி ரூபாயில் 5% தொகையை தங்க பத்திரங்கள் அல்லது கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்தால் சந்தை ஏற்ற இறக்க பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் 5% முதலீடு:
சர்வதேச சந்தைகளில் உள்ள பங்குகளில் 5% தொகையை மட்டும் முதலீடு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரியும் போது இது உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.
இவ்வாறு 10 கோடி ரூபாயை பிரித்து முதலீடு செய்தால் அவருடைய போர்ட்போலியோ ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வரை வருமானம் தரும் என தெரிவித்துள்ளார்.
இதில் மாதத்திற்கு 1 லட்சம் என 12 லட்சம் ரூபாயை எடுத்து செலவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளார். மீதமுள்ள பணத்தை எடுத்து அவசர நிதியாக வைத்து கொள்ளலாம் என கூறியுள்ளார். மேலும் இந்தியா வந்த உடன் மருத்துவ காப்பீடு எடுத்து வைத்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரையும் அவர் வழங்கியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications