இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கிவிட்டது ஆயுத பூஜை ,தீபாவளி ,கிறிஸ்மஸ் என அடுத்தடுத்து பண்டிகைகளை நாம் பார்க்க போகிறோம் . பண்டிகை காலம் என்றாலே இந்தியாவில் மக்களின் நுகர்வு போக்கு அதிகரிக்கும் அதாவது மக்கள் அதிகமான பொருட்களை வாங்குவார்கள் கையில் இருக்கும் பணத்தை செலவு செய்வார்கள் .
அடுத்த மூன்றிலிருந்து நான்கு மாதங்களுக்கு இந்தியாவில் எங்கு பார்த்தாலும் தள்ளுபடி தள்ளுபடி என்பதை தான் நாம் கேட்க முடியும் .தற்போது சமீப காலமாக மற்றொரு வார்த்தையும் சேர்ந்து விட்டது அதுதான் இஎம்ஐ ஆன்லைன் இ-காமர்ஸ் தளங்களில் தொடங்கி கடைகளில் நேரடியாக சென்று நாம் பொருட்கள் வாங்குவது வரை அனைத்து பொருட்களுக்குமே தற்போது நமக்கு இஎம்ஐ கிடைக்கிறது.

அதாவது அந்த பொருளுக்கு முழு தொகையும் நாம் செலுத்த வேண்டிய தேவையில்லை மாதம்தோறும் ஒரு கணிசமான தொகையை செலுத்தினால் போதும் . நேற்றைய தினம் தான் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தன . இந்தியாவில் ஐபோன் வாங்கக்கூடிய 70% பேர் அவற்றை இஎம்ஐ முறையில் தான் வாங்குகிறார்கள்.
அண்மையில் வெளியான ஒரு ஆய்வில் மாதம் 50 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் சம்பளம் பெறக்கூடிய 93 சதவீத இந்தியர்கள் கிரெடிட் கார்டை கொண்டு தான் தங்களின் அன்றாட செலவினங்களை மேற்கொள்கிறார்களாம் . இந்தியாவில் இந்த இஎம்ஐ மற்றும் தற்போது வாங்கிக் கொண்டு பின்னர் பணம் செலுத்தக்கூடிய கலாச்சாரம் எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.
இந்த பண்டிகை காலத்தில் இவ்வாறு கடன் வாங்கி பொருட்களை வாங்குவது இன்னும் அதிகரிக்கும். உலக முதலீட்டு ஜாம்பவானாக கருதப்படக் கூடிய வாரன் பஃபெட் இப்படி நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து இஎம்ஐ வாயிலாக ஐபோன் வாங்குவதை பார்த்திருந்தால் ஒரு விஷயத்தை நிச்சயமாக கூறி கூறி இருப்பார் . உங்களின் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்யுங்கள், தேவையில்லாமல் வட்டியில் உங்களுடைய வருமானத்தை இழக்காதீர்கள் , சேமிப்பில் இருந்து தான் நீங்கள் ஒரு பொருளை வாங்கும் முடிவை தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர கடன் வாங்கும் அடிப்படையில் தேர்ந்தெடுக்கக்கூடாது என நிச்சயமாக கூறியிருப்பார்.

இஎம்ஐ மூலம் வாங்கலாம் என்ற வசதி பலரையும் எளிதாக ஒரு பொருளை வாங்க தூண்டிவிடுகின்றன. ஆனால் அதற்காக நாம் மாதம் தோறும் நம்முடைய செலவுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இஎம்ஐ செலுத்த வேண்டியது இருக்கிறது. அந்த ஒரு நாள் சந்தோஷத்திற்காக நாம் பல மாதங்கள் கஷ்டப்பட வேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். குறிப்பாக கிரெடிட் கார்டுகளை பொருத்தவரை வட்டி விகிதங்களே பல மடங்கு நாம் செலுத்த வேண்டியது இருக்கிறது.
இஎம்ஐ, கிரெடிட் கார்டு என அனைத்துமே உங்களின் மாதாந்திர வருமானத்தை உங்களுக்கே தெரியாமல் குடித்துக் கொண்டிருக்கிறது என்பதை பலரும் அறிந்து கொள்ள வேண்டும். தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்து வரக்கூடிய சூழலில் இதுபோல இஎம்ஐ மூலம் பொருட்களை வாங்குபவர்கள் ஒரு முறைக்கு பலமுறை யோசிக்க வேண்டியது கட்டாயம்.
வாரன் பஃபெட் கடன் இல்லாத வாழ்க்கை வாழ பின் வரும் அறிவுரையை கூறுகிறார். இதனை நாம் அனைவரும் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஈட்டும் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்வதன் மூலம் நீங்கள் ஒருபோதும் பணக்காரனாகி விட முடியாது . இந்தியாவின் தற்போதைய இந்த கடன் கலாச்சாரத்திற்கு இந்த கூற்று மிக சரியாக பொருந்தும்.
அது தவிர உங்களுடைய வருமானத்தில் ஒரு தொகையை சேமித்து வைத்துவிட்டு மீதம் இருக்க பணத்தை மட்டும் செலவு செய்யுங்கள் என்பவே இவரின் பிரதான அறிவுரை. அது ஒரு சிறிய தொகையாக இருந்தால் கூட பின்னாளில் உங்களுக்கு பெரிய அளவில் லாபம் தரும் . கிரெடிட் கார்டுகள் என்பது உங்களுக்கு கிடைக்கக்கூடிய கூடுதல் பணம் கிடையாது அதை நீங்கள் பின்னால் திரும்ப செலுத்து தான் போகிறீர்கள். வேறு வழியே இல்லை எனக்கு தற்போது கட்டாயம் தேவைப்படுகிறது என்கிற சூழலில் மட்டும் கிரெடிட் கார்டை பயன்படுத்துங்கள் முடிந்தவரை பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அவருடைய அறிவுரையாக இருக்கிறது.
உங்களுடைய பணத்தை காம்பவுண்டிங் முறையில் வளர்வதற்கான வாய்ப்பை கொடுங்கள். அதாவது சரியான முதலீட்டு கருவிகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்கள் என்பது அவருடைய அறிவுரை. கடன் என்பது நம்மையே அறியாமல் நம்மை முழுவதுமாக முழுங்கி விடக் கூடிய ஒரு முதலைப் போன்றது அதில் சிக்கிக் கொண்டு வாழ்நாளை இழக்காதீர்கள் என்பதுதான் பலரும் முன் வைக்கும் அறிவுரை. நீங்கள் வாங்கிய ஐபோனோ அல்லது பொருளோ வாங்கிய உடனே பழசாகிவிடும் நீங்கள் வாங்கிய விலைக்கு அதனை திரும்ப விற்க முடியாது ஆனால் நீங்கள் வாங்கிய கடன் உங்கள் தலைமீது அப்படியே சுமையாக வந்து நிற்கும்.


Click it and Unblock the Notifications