பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, ஆண் குழந்தைகளுக்கு என அரசு துவங்கிய ஒர் திட்டம் தான் பொன்மகன் சேமிப்பு திட்டம்.
ஆண் குழந்தைகளை மனதில் கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தினை கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் தான் இது.
அரசின் இந்த சேமிப்பு திட்டத்திலும் செலுத்தப்படும் தொகைக்கு 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு. சரி வாருங்கள் பார்க்கலாம். இந்த திட்டத்தில் எப்படி இணைவது? என்னென்ன சலுகைகள் உள்ளன? வட்டி விகிதம் எவ்வளவு என்று.

எவ்வளவு வட்டி விகிதம்?
பொதுவாக இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் வருடத்திற்கு வருடம் மாறும். தற்போது வட்டி விகிதம் 7.8% ஆகும். இது மற்ற திட்டங்களோடு ஒப்பிடும்போது வட்டி விகிதம் சற்று அதிகம் தான். அதோடு இந்த திட்டத்தில் அஞ்சல் அலுவலகத்தில் அனைத்து பரிவர்த்தனையும் செய்து கொள்ள முடியும் என்பதால், கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வரிச் சலுகை
இந்த திட்டத்திற்கு வரி சலுகை உண்டா? என்றால் நிச்சயம் உண்டு. இந்த கணக்கில் போடப்படும் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. மேலும் நீங்கள் இந்த கணக்கு தொடங்கியதில் இருந்து 7வது ஆண்டில் இருந்து கணிசமான தொகையினை பெற்றும் கொள்ளும் வசதி உண்டு. அதே போல இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், அடுத்து 5 ஆண்டுகளுக்கு நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம்.

கடன் வசதி உண்டா?
பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கும் ஒரு விஷயம். நாம் முதலீடு செய்யும் தொகையை வைத்து கடன் பெற முடியுமா? என்பது. இந்த திட்டத்திலும் கடன் வசதி உண்டு. நீங்கள் முதலீடு செய்ய தொடங்கியதில் இருந்து மூன்றாவது நிதியாண்டில் இருந்து கடன் பெற்றுக் கொள்ள முடியும்.

பாதுகாப்பு உண்டு
இந்த திட்டம் இந்திய அரசின் தபால் துறை மூலம் இயக்கப்படுவதால் முதலீட்டு பாதுகாப்பு உண்டு. இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம். நம் முதலீட்டுக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்று தான். ஆக இது அரசின் திட்டம் என்பதால் பயப்படாமல் முதலீடு செய்யலாம். அதோடு இதில் கணிசமான லாபமும் உண்டு.
அப்புறம் வேறு என்ன தேவை.. கிளம்புங்க..