பல மோசடி சம்பவங்களில் மக்கள் ஏமாறுவதற்கான காரணம் என்ன தெரியுமா? அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள். அதிலும் குறிப்பாக உங்களுடைய பணம் உடனே டபுள் ஆகிவிடும் என்று கூறுகின்றனர். இதை நம்பும் மக்களோ லட்சங்களில் பணத்தை இழக்கின்றனர். உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க யாரென்றே தெரியாத நபர்களிடம் சிக்க வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு ஏராளமான நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ஒரு திட்டம் உண்மையிலேயே உங்கள் முதலீட்டை 2 மடங்காக மாற்றும்.
உதாரணமாக நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும். ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும். அது என்ன திட்டம்? அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
கிசான் விகாஸ் பத்ரா (KVP): போஸ்ட் ஆபீஸ்களில் KVP என்ற திட்டம் வழங்கப்படுகிறது. இது ஒரு பத்திரத் திட்டம் அவ்வளவுதான். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு உங்களுக்கு பத்திரமாக வழங்கி விடுவார்கள். இந்த திட்டத்தின் மூலம் குறைந்த தொகையை முதலீடு செய்து அப்படியே அதை டபுள் ஆக்க முடியும். பாதுகாப்பாக, அதேசமயம் நல்ல வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த திட்டத்தை கருத்தில் கொள்ளலாம்.

ரிஸ்கில்லாத திட்டமாக இருப்பதாலும், 100% உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதாலும் இன்றளவும் போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கை வாய்ந்ததாக இருக்கிறது. மேலும் பிரபல வங்கிகளில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை விட, கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் வட்டி விகிதம் சற்று அதிகம் தான்.
கிசான் விகாஸ் பத்ரா என்றால் என்ன?: அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் பிரபலமான திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை 115 மாதங்களில் டபுள் ஆகும். அதாவது 9 ஆண்டுகள் 7 மாதத்தில் அப்படியே இரட்டிப்பாக கிடைக்கும். KVP திட்டத்திற்கு தற்போது 7.50 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டம் என்றாலே மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது இந்த திட்டம்தான். இதில் நீங்கள் ரூ.5 லட்சம் செலுத்தினால் அதற்கான பத்திரத்தை வழங்குவார்கள். அதன் பிறகு 115 மாதங்கள் கழித்து ரூ.10 லட்சமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
எப்படி கணக்கு தொடங்குவது?: போஸ்ட் ஆபீஸ்-இல் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீடு செய்து கூட கணக்கு தொடங்கலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. இது ஒரு முறை முதலீடு செய்யும் திட்டம். எனவே பிக்சட் டெபாசிட் போல மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். அதன் பின் 115 மாதங்கள் கழித்து அதை இரட்டிப்பாக்கி பெற்றுக்கொள்ளலாம். KVP திட்டத்தில் தனி நபர்கள் கணக்கு தொடங்கலாம். விருப்பப்பட்டால் கூட்டுக் கணக்கும் தொடங்க முடியும். குழந்தைகளுக்கு கணக்கு தொடங்க நினைத்தால் அவர்களுக்கு 10 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அப்படியானால் அவர்களுடைய பெயரிலேயே கணக்கு தொடங்கலாம்.
இந்தப் பதிவு வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. எந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமானாலும் உங்களுடைய நிதி நலனை ஆராய்ந்து, நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் தொடங்குங்கள்!
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications