அனைவருக்குமே சேமிப்பு என்பது மிகவும் முக்கியமாகும். ஏனெனில் நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு ஏற்ப ஒரு சிறு தொகையை வைத்திருப்பது பிற்காலத்தில் உதவியானதாக இருக்கும். இன்றெல்லாம் யாருக்கு எப்போது மருத்துவ செலவுகள் ஏற்படுகிறது என்பதை யூகிக்கவே முடிவதில்லை. திடீரென செலவுகள் வருகிறது. அதை ஈடுகட்டும் பொருட்டு சேமித்து வைப்பது அவசியமாகும். அதற்காக அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது.
அவற்றுள் சில திட்டங்கள் போஸ்ட் ஆபீஸ்களிலும் கிடைக்கிறது. போஸ்ட் ஆபீஸ்-இல் வழங்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். உங்களுடைய பெரிய இலக்குகளுக்காக சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது முழுக்க முழுக்க அரசாங்கத் திட்டம் என்பதால் உங்களுடைய முதலீடுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. எஸ்ஐபி முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் போன்றவை சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

உங்களுடைய பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய நினைத்தால் PPF திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒரு நாளைக்கு 70 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், முதிர்வு காலத்தில் ரூ.6 லட்சம் வருமானம் பெற முடியும். அதற்கு எப்படி சேமிக்க வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம்.
பிபிஎஃப் திட்டத்தின் முதலீடு: PPF திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு 500 ரூபாய் ஆகும். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு 1.5 லட்சம் வரையில் முதலீடு செய்ய முடியும். இது வருடாந்திர முதலீட்டு திட்டம் ஆகும். PPF திட்டத்தின் லாக்கின் காலம் 15 ஆண்டுகள். 15 ஆண்டுகளுக்கு உங்களால் பணத்தை திரும்ப எடுக்க முடியாது. எனவே இந்தக் காலகட்டத்திற்குள் சரிவர சேமித்து வந்தால் வட்டி வருமானமும் சேர்த்து முதிர்வு காலத்தில் லாபகரமான வருமானத்தை பெற முடியும். தற்போது PPF திட்டத்திற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
தினமும் 70 ரூபாய் சேமித்தால் எவ்வளவு லாபம்?: அனைவராலும் மொத்தமாக முதலீடு செய்ய முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் தினமும் 70 ரூபாய் சேமித்து அதை வருடத்திற்கு ஒருமுறை வரவு வைக்கலாம். தினசரி 70 ரூபாயை சேமித்தால் ஒரு ஆண்டுக்கு 25,000 ரூபாய் பெறலாம். எனவே வருடா வருடம் 25,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 15 ஆண்டுகால முடிவில் மொத்தமாக 3,75,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டி வருமானமாக மூன்று லட்சத்து 3,03,035 ரூபாய் கிடைக்கும். இரண்டையும் சேர்த்து முதிர்வு தொகையாக 6,78,035 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
வருடத்திற்கு 25,000 என்பது பெரிதாக தோன்றலாம். எனவே தினமும் 70 ரூபாயை சேமித்தால் உங்கள் சேமிப்புக்கு கிட்டத்தட்ட சமமாக வட்டி வருமானம் கிடைக்கிறது. 3,75,000 ரூபாய் முதலீட்டுக்கு 3,03,035 ரூபாய் வட்டி வருமானம் பெற முடியும்.
பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டை நீங்கள் விரும்பினால், தபால் அலுவலக PPF திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். ஒரு நாளைக்கு ரூ. 70 மட்டும் சேமிப்பதன் மூலம், முதிர்ச்சியில் ரூ. 6.78 லட்சத்துடன் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கலாம்.


Click it and Unblock the Notifications