இன்றெல்லாம் முதலீடு தொடர்பான மோசடிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதில் சிக்கி மக்களும் லட்சங்களில் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே நம் முதலீட்டுக்கு மோசம் ஏற்படாத வகையில் எண்ணற்ற அரசு திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இது போன்ற திட்டங்கள் கண்டிப்பாக நம்முடைய அசலை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தப் பதிவில் தினமும் 100 ரூபாய் சேமித்து ரூ.5 லட்சம் வருமானம் தரும் ஒரு அரசு திட்டத்தைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.
மத்திய அரசு போஸ்ட் ஆபீஸ்களின் மூலம் பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. தேசிய சேமிப்பு சான்றிதழ், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் பத்ரா மற்றும் போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டம் என பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. அதில் சிறு தொகையை முதலீடு செய்து வருமானம் வழங்கக்கூடிய திட்டம் தான் போஸ்ட் ஆபீஸ் ஆர்டி திட்டம். அதாவது இதை ஆங்கிலத்தில் ரெக்கரிங் டெபாசிட் என்று கூறுவார்கள். இதில் நாம் செய்யும் முதலீட்டுக்கு எந்தவித பாதிப்பும் வராது. மியூச்சுவல் ஃபண்டுகளை போல ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.
ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். இதை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டும். ஒவ்வொரு திட்டத்திற்கும் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கும். அதே போல போஸ்ட் ஆபீஸ் ஆர்டி திட்டத்தின் முதலீட்டு காலம் 5 ஆண்டுகள். தற்போது 6.7 சதவீத வட்டி இதற்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தினமும் ரூ.100 சேமித்தால் மாதத்திற்கு 3000 ரூபாய். இந்த 3000 ரூபாயை அப்படியே RD திட்டத்தில் மாதா மாதம் டெபாசிட் செய்ய வேண்டும்.

இப்படி செய்து வந்தால் ஐந்து வருட கால முடிவில் ஒரு முதலீட்டாளர் 1,80,000 ரூபாயை முதலீடு செய்திருப்பார். இதற்கு வட்டி வருமானமாக 34,097 ரூபாய் கிடைக்கும். அசலையும், வட்டியையும் சேர்த்து 2,14,097 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு தேவைப்பட்டால் RD திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்.
அப்படி நீட்டித்தால் மொத்தம் 3,60,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டி வருமானமாக ரூ.1,52,565 கிடைக்கும். இதனால் வட்டி மற்றும் அசல் ஆகிய இரண்டையும் சேர்த்து 5,12,565 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.
சிறுக சிறுக சேமித்து ஒரு காலத்தில் நல்ல வருமானத்தை பெறுவதற்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும். எப்படி வாடகைக்கு பணம் எடுத்து வைக்கிறீர்களோ? அதே போல முதலீட்டுக்காக மாதம் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைக்க வேண்டும். இப்படியே செய்தால் சேமிப்பதே தெரியாமல் சேமித்து விடலாம். முதல் முறை கணக்கு தொடங்கும் போது தபால் அலுவலகத்திற்கு சென்று கணக்கு தொடங்க வேண்டும். அதன் பின்னர் போஸ்ட் ஆபீஸ் ஆப் மூலமாகவே வீட்டிலிருந்து முதலீடு செய்யலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications