வங்கிகளைக் காட்டிலும் போஸ்ட் ஆபீஸ்களில் சேமிக்கும் பழக்கத்தை இன்றளவும் பலர் கடைபிடித்து வருகின்றனர். நீண்ட காலமாக பழமைவாத முதலீட்டாளர்களும் மனநிறைவுடன் சேமிக்கும் இடம் என்றால் அது போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு தான். கூலித் தொழில் செய்பவர்கள் முதல் ஓய்வு பெற்ற முதியவர்கள் வரை பலர் போஸ்ட் ஆபீஸ்களில் கணக்கு வைத்துள்ளனர். தற்போது மத்திய அரசு போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. போஸ்ட் ஆபீஸ்களில் செய்யப்படும் பணப்பரிவர்த்தனையின் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்தப் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பான் கார்டு: 2026 ஆம் ஆண்டின் வருமான வரி விதிகளின்படி இந்திய தபால் நிலையங்களில் எங்கு கணக்கு வைத்திருந்தாலும் பான் கார்டு கட்டாயம் வழங்க வேண்டும். பலர் பான் கார்டு இல்லாமல் தொடர்ந்து பரிவர்த்தனை செய்து வந்தனர். இதனை தடுக்கும் பொருட்டு பான் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனி போஸ்ட் ஆபீஸ்களில் கணக்கு தொடங்குவது முதல் பணம் டெபாசிட் செய்வது வரை அனைத்திற்கும் பான் கார்டு அவசியம். வரி ஏய்ப்பு நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காகவும், பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனை நடக்கிறதா? என்பதைக் கண்காணிப்பதற்காகவும் இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் வருமான வரி விதிகளின் கீழ் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் தொடங்கி நகரங்கள் வரை லட்சக்கணக்கான மக்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். ஆதார் எப்படி முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கிறதோ? அதேபோல அக்கவுண்டில் செய்யப்படும் பணப் பரிவர்த்தனையை டிராக் செய்வதற்கு பான் கார்டு முக்கிய ஆவணமாக இருக்கிறது.
பான் கார்டு இல்லை என்றால் என்ன செய்வது?: ஒருவேளை பான் கார்டு இல்லாத தனிநபராக இருந்தால், படிவம் 97-ஐ சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு முன்னர் படிவம் 60-ஐ பான் கார்டு இல்லாதவர்கள் சமர்ப்பித்து வந்தனர். நீங்கள் படிவம் 97-ஐ சமர்ப்பிக்கும் போது உங்களுடைய அடையாள விவரங்கள், முகவரி, பரிவர்த்தனை விவரங்கள், நீங்கள் டெபாசிட் செய்ய போகும் தொகை மற்றும் கேட்கப்படும் கூடுதல் ஆவணங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
டிடிஎஸ் விலக்கு: இதற்கு முன்னர் போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்டுக்கு கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு டிடிஎஸ் விலக்கு பெற 2 படிவத்தை சமர்ப்பித்து வந்தனர். ஒன்று படிவம் 15ஜி மற்றொன்று படிவம் 15H. இந்த இரண்டையும் சேர்த்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது மத்திய அரசு இந்த இரண்டு படிவங்களையும் ஒன்றாக இணைத்துள்ளது. இதற்கு பதிலாக படிவம் 121-ஐ சமர்ப்பிக்கலாம். இனி வயது வித்தியாசம் எதுவும் இன்றி படிவம் 121-ஐ சமர்ப்பிக்கலாம்.
அதேபோல இந்த புதிய மாற்றங்கள் உடனே அமலுக்கு வந்திருந்தாலும் தபால் நிலையங்களில் சிஸ்டம் அப்டேட் ஆகும் வரை பழைய படிவங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் சேமிக்க தொடங்கியவர்கள் பான் கார்டு வழங்கி இருந்தால் பிரச்சனை இல்லை. அப்படி வழங்கவில்லை என்றால் உடனே உங்கள் அக்கவுண்ட் உடன் பான் கார்டை இணைத்துக் கொள்ளுங்கள்!


Click it and Unblock the Notifications