முதலீடுகள் என வரும்போது பெரும்பாலானவர்கள் ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள். முதலுக்கு மோசம் போகாத அதே வேளையில் கணிசமான ஒரு லாபத்தை அளிக்க கூடிய முதலீட்டு திட்டங்கள் தான் சாமானிய மக்களின் விருப்பம். அந்த வகையில் ரிஸ்க் இல்லாத உத்தரவாதமான வருமான தரக்கூடிய போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்து தான் நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
வங்கிகளில் கிடைக்கும் ஃபிக்ஸடு டெபாசிட் போன்றது தான் அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கும் டைம் டெபாசிட் திட்டங்கள் (Post office time deposit). இந்த திட்டத்தில் நீங்கள் 1 ஆண்டுக்கு டெபாசிட் செய்தால் ஆண்டுக்கு 6.9% வட்டி கிடைக்கும், 2 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் 7.0%, 3 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் 7.1%, 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் 7.5% என வட்டி வழங்கப்படுகிறது.

இதில் நாம் தேர்வு செய்யும் டெபாசிட் காலத்திற்கு ஏற்ப முதிர்வு காலம் அமையும். வங்கிகளை விட கூடுதல் வட்டி கிடைப்பது தான் இதன் தனி சிறப்பு. இந்த திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து அதனை 15 லட்சம் ரூபாய் என திரும்ப பெறுவது எப்படி என தெரிந்து கொள்ளலாம். 5 ஆண்டு கால டைம் டெபாசிட்டுக்கு கிடைக்கும் ஆண்டு 7.5% ஆகும்.
முதலில் 5 லட்சம் ரூபாயை இந்த திட்டத்தில் 5 ஆண்டு கால டைம் டெபாசிட்டில் முதலீடு செய்ய வேண்டும். இதில் லாக் இன் காலம் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு 5 லட்சம் முதலீட்டு தொகையுடன் வட்டியும் சேர்த்து 7,24,974 ரூபாய் திரும்ப கிடைக்கும்.
5 ஆண்டுகள் முடிந்த பின்னர், இந்த பணத்தை எடுக்காமல் மேலும் 5 ஆண்டுகளுக்கு மீண்டும் இதே திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். எனவே இது முதிர்வு அடையும் போது மொத்தம் 10 ஆண்டுகள் ஆகி இருக்கும். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் மொத்த தொகை, 10,51,175 ரூபாய் ஆகும்.
இந்த முறையும் பணத்தை எடுக்காமல் அதனை திரும்ப ஐந்து ஆண்டு காலத்திற்கு இதே டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். எனவே மொத்தமாக 15 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு வட்டியாக மட்டுமே 10,24,149 ரூபாய் கிடைக்கும், அதாவது திட்டத்தின் முதிர்வின்போது உங்களுக்கு கிடைக்கும் தொகை 15 லட்சம் ரூபாயாக இருக்கும்.
எனவே எந்த ஒரு சிரமமும் இல்லாமல் எளிதாக உங்களுடைய 5 லட்சம் ரூபாயை போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து விட்டு 15 ஆண்டுகளில் அதனை 15 லட்சம் ரூபாயாக பெற முடியும். போஸ்ட் ஆபீஸ் திட்டம் என்பதால் இதில் ரிஸ்க் மிகவும் குறைவு உங்களது பணமும் பாதுகாப்பாக இருக்கும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications