நம்மில் பலருக்கு ரூ.1 கோடி சேமிக்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. இந்தக் கனவை நினைவாக்க எண்ணற்ற அரசு திட்டங்கள் இருக்கிறது. ரிஸ்க் எடுக்க பயப்படும் முதலீட்டாளர்களும் இது போன்ற திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ரூ.1 கோடி சேமிப்பு என்பது கேட்பதற்கு கடினமாகத் தோன்றினாலும் நிலையான முதலீடு மற்றும் நீண்ட கால முதலீட்டின் மூலம் சாத்தியமே. இந்த பதிவில் ஒருவர் ரூ.1 கோடி சேமிக்க எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
மத்திய அரசின் அஞ்சல் அலுவலக திட்டத்தின் மூலமாக, பாதுகாப்பான முறையில் ரூ.1 கோடி வருமானம் ஈட்டலாம். சாமானியர்களின் நலனுக்காக இங்கு எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்படுகிறது. ஆனால் ரூ.1 கோடி இலக்கை எட்ட நாம் 2 திட்டங்களை எடுத்துக் கொள்வோம். ஒன்று போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் மற்றொன்று போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட்.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்: பிக்சட் டெபாசிட் திட்டமும், டைம் டெபாசிட் திட்டமும் ஒன்றுதான். தற்போது போஸ்ட் ஆபீஸ் 5 ஆண்டு டைம் டெபாசிட் திட்டத்திற்கு 7.5 சதவீத வட்டி வழங்குகிறது.

ஒரு கோடி ஈட்ட ஒருவர் 5 ஆண்டு போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும். பின்னர் 5 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் ரூ.14,49,948 கிடைக்கும். போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் இருக்கும் நன்மை என்ன தெரியுமா? நீங்கள் தேவைப்பட்டால் மீண்டும் உங்களுடைய முதலீட்டை நீட்டித்துக் கொள்ளலாம்.
தொடர்ந்து மீண்டும் 15 ஆண்டுகளுக்கு உங்களுடைய முதலீட்டை நீட்டிக்க வேண்டும். அதாவது மொத்த முதலீட்டு காலம் 20 ஆண்டுகள். 20 ஆண்டுகள் கழித்து உங்களுடைய 10 லட்சம் முதலீடு, 44,19,877 ரூபாயாக மாறி இருக்கும். இந்த கால்குலேஷன் புரியவில்லை என்றால் ஆன்லைன் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள். அதில் முதலீட்டு தொகை, முதலீட்டு காலம், வட்டி விகிதம் போன்றவற்றை வழங்கினால் சிஸ்டம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பதை காண்பித்துவிடும்.
போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD): அதே 20 ஆண்டு காலத்திற்கும் போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். தற்போது RD திட்டத்திற்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 என்ற வீதத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகள் முதலீடு செய்தால், உங்களுடைய வருமானம் 67,31,607 ரூபாயாக இருக்கும்.
மேலே கூறப்பட்டுள்ள உதாரணத்தில் முதலீட்டு காலம் முழுவதும் வட்டி மாறாமல் இருப்பதாக வைத்துக் கொண்டோம். ஒருவேளை அரசு வட்டியில் மாற்றம் செய்தால் உங்கள் வருமானத்திலும் சிறு மாற்றம் இருக்கலாம். தற்போது FD திட்டம் மற்றும் RD திட்டம் ஆகியவற்றில் கிடைத்த வருமானத்தை கூட்டிப் பாருங்கள். ரூ.1 கோடிக்கும் மேல் வருமானம் கிடைக்கும்.
நாளுக்கு நாள் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 100 ரூபாய்க்கு வாங்கிய பொருட்களில், இன்று பாதி பொருட்கள் கூட வாங்க முடிவதில்லை. அந்த அளவுக்கு பணவீக்கம் விண்ணை எட்டி வருகிறது. இது போன்ற சூழலில் ரூ.1 கோடி சேமித்தாலும் இன்னும் 10 ஆண்டுகளில் அதன் மதிப்பு இன்னும் குறையத்தான் போகிறது. முன்கூட்டியே திட்டமிட்டு இதுபோன்ற அரசாங்கத் திட்டங்களில் பணத்தை போட்டால் பிற்காலத்தில் கண்டிப்பாக உதவியாக இருக்கும்.
மேலே கூறப்பட்டுள்ள பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. ஒருவேளை முதலீடு செய்ய நினைத்தால் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி, ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.


Click it and Unblock the Notifications