சமீபத்திய நாட்களில் முதலீடு தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் உங்களுடைய பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறோம், எங்களிடம் டிரேடிங் செய்தால் நீங்கள் தான் பணக்காரர் என்றெல்லாம் கூறி மக்களிடம் ஆசை வார்த்தை காட்டி பணத்தை அபகரித்து வருகின்றனர். இதுபோன்ற மோசடியில் சிக்காமல் அரசு தரும் திட்டங்களில் முதலீடு செய்தாலே பாதுகாப்பான வருமானத்தை பெற முடியும். அதுவும் மத்திய அரசு தபால் நிலையங்களில் எண்ணற்ற திட்டங்களை வழங்குகிறது. அப்படி வழங்கப்படும் திட்டங்களுக்கு நல்ல வட்டியும் கிடைக்கிறது.
அப்படித்தானே அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கும் டைம் டெபாசிட் திட்டம் ஒரு பிரபலமான முதலீட்டு திட்டமாக இருந்து வருகிறது. எப்படி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்கிறோமோ? அதே போலவே இந்த டேர்ம் டெபாசிட் என்று சொல்லப்படுகிற டைம் டெபாசிட் திட்டத்திலும் முதலீடு செய்யலாம். அதாவது இது மொத்தமாக முதலீடு செய்யப்படும் திட்டம். இந்தத் திட்டத்தில் உங்கள் பணத்திற்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். அதோடு உத்தரவாதமான வருமானமும் வழங்கப்படும்.
டைம் டெபாசிட் என்றால் என்ன?: டைம் டெபாசிட் என்பது அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் ஒரு முதலீட்டு திட்டம். இதில் நீங்கள் குறிப்பிட்ட காலத்தை தேர்ந்தெடுத்து ஒரே தவணையாக முதலீடு செய்ய வேண்டும். முதிர்வு தேதியின் போது உங்களுடைய முதலீடு மற்றும் வட்டியை சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். தற்போது இந்த டைம் டெபாசிட் திட்டத்தை 4 கால அளவுகளில் அஞ்சல் அலுவலகங்கள் வழங்கி வருகின்றன.

ஓராண்டு டைம் டெபாசிட், 2 ஆண்டு டைம், 3 ஆண்டு டைம் டெபாசிட் மற்றும் 5 ஆண்டு டைம் டெபாசிட் என்ற 4 கால அளவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து மொத்தமாக பணத்தை முதலீடு செய்யலாம்.
வட்டி விகிதங்கள்: தற்போது 1 ஆண்டு டைம் டெபாசிட் திட்டத்திற்கு 6.9% வட்டி வழங்கப்படுகிறது, 2 ஆண்டு டைம் டெபாசிட்டுக்கு 7.0 சதவீதம், 3 ஆண்டு டைம் டெபாசிட்டுக்கு 7.1% மற்றும் 5 ஆண்டு டைம் டெபாசிட் திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் 5 ஆண்டு டைம் டெபாசிட் திட்டம் தான் இருப்பதிலேயே அதிக அளவில் வட்டி வருமானம் வழங்குகிறது.
ஒருவர் ரூ.2 லட்சத்தை 3 ஆண்டுகள் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்று பார்ப்போம். ஒருவர் பிக்சட் டெபாசிட் போல ரூ.2 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. எனவே 3 ஆண்டுகள் கழித்து மொத்தமாக ரூ.2,47,015 பெற்றுக் கொள்ளலாம். இதில் வட்டி மட்டும் 47,015 ரூபாயாக இருக்கும்.
ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் இது போன்ற நம்பகமான வழியை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம். டைம் டெபாசிட் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் என்ன தெரியுமா? முதலீடு செய்பவர் எந்த வயதினராக இருந்தாலும், ஒரே வட்டி தான் வழங்கப்படும். ஆனால் வங்கியில் அப்படி இல்லை. வங்கியில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட வட்டியும், மூத்த குடிமக்களாக இருந்தால் அதற்கு சற்று கூடுதலான வட்டியும் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications