இன்றைய விலைவாசி உயர்வு பலரையும் சேமிப்பை நோக்கி நகர வைத்துள்ளது. இன்றே 500 ரூபாய்க்கு மதிப்பில்லை. இனி வரவிருக்கும் நாட்களை யோசித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது அல்லவா? இதை தடுப்பதற்கு ஒவ்வொருவருக்கும் சேமிப்பு முக்கியம். மாத சம்பளக்காரர்களுக்கு தங்களுடைய சம்பளம், செலவுக்கே சரியாக இருக்கும் சூழலில்... எப்படி சேமிக்க முடியும்? என்று தானே யோசிக்கிறீர்கள்! அதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது.
மொத்தமாக முதலீடு செய்யும் போது கடினமாகத் தோன்றும். ஆனால் சிறுக சிறுக சேமித்தால் எந்தப் பிரச்சனையும் வராது. இந்த உளவியல் யுக்தியைப் பயன்படுத்துவது பிற்கால தேவைக்கு பெரிதும் உதவும். ஒரு நாளைக்கு 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமிக்க தொடங்கினால் மாதத்திற்கு 3000 ரூபாய் கிடைக்கும். இந்த 3,000 ரூபாயை நிலையாக முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களால் ரூ.7 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் பெற முடியும். இந்த பதிவில் இரண்டு திட்டங்கள் குறித்து பார்க்கப் போகிறோம்.
ஒன்று பிரபலமாக இருக்கும் PPF. மற்றொன்று SIP என்று சொல்லப்படுகிற மியூச்சுவல் ஃபண்ட் திட்டம். பொது வருங்கால வைப்பு நிதியைப் பற்றி மக்களுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை. காரணம் இது அரசு திட்டம் என்பதால் உங்களுடைய வருமானம் பாதுகாப்பாக இருக்கும் என்பது உறுதி. மற்றொரு திட்டம் எஸ்ஐபி. இதை சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்று கூறுவார்கள். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 2 முறையில் முதலீடு செய்யலாம். ஒன்று மொத்த முதலீடு மற்றொன்று எஸ்ஐபி என்று சொல்லப்படுகிற தவணை முறையிலான முதலீடு.

பிபிஎஃப்: PPF திட்டத்தை அரசே நிர்வகிக்கிறது. முழுமையான வரி விலக்குகளும் இந்த திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. இதனால் நீங்கள் முதலீடு செய்யும் தொகை மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் எந்த வரியும் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். PPF திட்டத்தின் லாக்கின் பீரியட் 15 ஆண்டுகள். இந்த லாக்கின் காலத்தில் உங்களால் முதலீடு செய்த தொகையை எடுக்க முடியாது. ஆனால் ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பகுதி அளவு பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
தற்போது கிடைக்கக்கூடிய முதலீட்டு திட்டங்களில் மிகவும் பாதுகாப்பான திட்டம் என்றால் அது பிபிஎஃப் தான். இதற்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒருவர் தினசரி 100 ரூபாய் சேமித்து மாதத்தின் கடைசியில் ரூ.3,000-த்தை பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். லாக்கின் காலம் முடிந்த பிறகு மீண்டும் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தினை நீட்டிக்க வேண்டும். ஆக 20 ஆண்டுகள் முதலீடு செய்தால், ஒருவர் ரூ.7.2 லட்சத்தை முதலீடு செய்திருப்பார். இதற்கு 7.1% என்ற வட்டி கிடைக்கும் பட்சத்தில் மொத்தமாக ரூ.8.29 லட்சம் வருமானம் கிடைக்கும். இதனால் முதிர்வில் உங்களுடைய முதலீடு ரூ.15.49 லட்சமாக இருக்கும். உங்கள் முதலீடு அப்படியே டபுள் ஆகும்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்: எஸ்ஐபி என்பது ஒரு வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டம். மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே சந்தை அபாயங்கள் இருக்கத்தான் செய்யும். எனவே ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பொறுத்தவரையில் ஒருவரை ஏற்றிவிட்டாலும் நினைத்துப் பார்க்க முடியாத வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில் சந்தை இறக்கங்கள் ஏற்படும் போது நஷ்டம் ஏற்படும் அபாயமும் உண்டு.
ஆனால் நீண்ட காலமாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை வழங்கியுள்ளன. ஒருவர் SIP திட்டங்களில் ரூ.3000 என்ற தொகையை மாதா மாதம் முதலீடு செய்து செய்கிறார். இதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு செய்யும்போது அதே ரூ.7.2 லட்சத்தை முதலீடு செய்திருப்பார். இங்கு PPF திட்டத்தை விட வட்டி சற்று அதிகம். முதலீடு செய்யும் தொகைக்கு 12 சதவீத வருடாந்திர வருமானம் கிடைத்தால் 20 ஆண்டுகளில் ரூ.20.4 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் கிடைத்திருக்கும். இதனால் முதிர்வில் ரூ.27.6 லட்சத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த 2 திட்டங்களிலும் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்த்துள்ளோம். இது வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. ஒரு வேலை முதலீடு செய்ய விருப்பமிருந்தால் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி, ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யுங்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications