இந்திய ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஒரு புதிய விதிமுறையை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. தற்போது வரை வங்கிகளில் வழங்கப்படும் கடனுக்கான வட்டி 2 விதமாக வசூலிக்கப்படுகிறது. ஒன்று ஃபிக்சட் வட்டி முறை. மற்றொன்று ஃப்ளோட்டிங் வட்டி முறை. ஃபிக்சட் வட்டி என்பது கடன் பெறும்போது எந்த வட்டி விகிதம் வழங்கப்படுகிறதோ அதே வட்டி விகிதம் கடன் கால முடியும் வரை விதிக்கப்படும்.
அதுவே ஃப்ளோட்டிங் விகிதம் என்றால் வங்கி விதிமுறைகளுக்கு ஏற்ப அவ்வப்போது வட்டி விகிதம் மாற்றப்படும். தற்போது ஆர்பிஐ வட்டி விகிதத்தை வங்கிகள் வெளிப்படையாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக புதிய விதிமுறைகளை கொண்டு வரத் தயாராகி வருகிறது. இதன் மூலம் கடன் பெறுபவர்கள் தெளிவாக எவ்வளவு வட்டி வசூலிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஏன் இந்த முன்மொழிவு?: முக்கியமாக கடன் பெறும் நபர்களுக்கு எவ்வளவு வட்டி செலுத்துகிறோம் என்ற விவரங்களை வங்கிகள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதேபோல வங்கிகளும் அவர்களுக்கு ஏற்றார் போல் வட்டி விகிதத்தை உயர்த்தாமல் ஆர்பிஐ-யின் விதிமுறைகளின் கீழ் வட்டி வசூலிக்க வேண்டும். எப்போதெல்லாம் ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படுகிறதோ? அப்போதெல்லாம் அதன் பலன் உடனடியாக கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கையை ஆர்பிஐ எடுக்க உள்ளது.
இன்றெல்லாம் சிறு தொழில் செய்பவர்கள் முதல் விவசாயிகள் வரை ஒரு கடனாவது வாங்கிவிட்டு EMI செலுத்தி வருகின்றனர். எனவே இவ்வளவுதான் செலுத்தப் போகும் வட்டி என்ற விபரங்களை கடன் பெற்றவர்களுக்கு தெரிவித்துவிட்டால் அவர்களும் அதற்கு ஏற்றார் போல் கடனை முன்கூட்டியே முடிக்கலாமா? அல்லது தொடர்ந்து செலுத்தலாமா? என்பதை தேர்வு செய்து கொள்வார்கள்.
வங்கிகள் என்ன செய்ய வேண்டும்?: ஆர்பிஐ-இன் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு வங்கியும் வட்டி தொடர்பான ஒரு பாலிசியை உருவாக்கி அந்தந்த நிர்வாகக் குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதேபோல ஒவ்வொரு ஆண்டும் இந்த வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்து மீண்டும் ஒப்புதல் பெற வேண்டும். ஃபிக்சட் வட்டி அல்லது ஃப்ளோட்டிங் வட்டி என ஏதுவாக இருந்தாலும் சரி நிர்ணயிக்கப்பட்ட பென்ச்மார்க் விகிதத்திற்கு கீழ் எந்த வாடிக்கையாளர்களுக்கும் கடன் வழங்கக் கூடாது. அதேபோல கடன் நிலுவை தொகைக்கு ஏற்ப வட்டி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட வேண்டும்.
ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் கடன் பெறுபவர்களுக்கு வட்டி விகிதம் எப்போது மாற்றப்படுகிறது என்ற விவரங்கள், வட்டி மாற்றப்படும் தேதி ஆகியவற்றை தெளிவாக கொடுக்க வேண்டும்.
சிறு குறு விவசாயிகளுக்கு கடன் வழங்கும்போது அந்த கடனுக்கான வட்டி மற்றும் பிற சார்ஜ் எதுவும் கடன் தொகையை விட அதிகமாக இருக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்த முன்மொழிவு எப்போது அமலுக்கு வரும்?: ரிசர்வ் வங்கி இந்த முன்மொழிவை பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்காக செப்டம்பர் 11 வரை வைத்துள்ளது. 2027 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் வாய்ப்புள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இனி வரும் நாட்களில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications
