இந்தியாவில் பணத்தை முதலீடு செய்வது என்றாலே பெரும்பாலும் தங்கம் வாங்குவோம் இல்லை என்றால் நிலத்தில் முதலீடு செய்வோம். காலம் காலமாக தங்கம் மற்றும் நிலத்தில் மாறி மாறி முதலீடு செய்து வந்த இந்தியர்களுக்கு அண்மை காலமாக பல்வேறு நிபுணர்களும் மாற்று முதலீட்டு கருவிகள் குறித்து பரிந்துரை செய்த வண்ணம் இருக்கின்றனர்.
பங்குச்சந்தைகள் , மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், அரசு வழங்கக்கூடிய முதலீட்டு பத்திரங்கள் என பல வகையான முதலீட்டு வாய்ப்புகள் தற்போது நமக்கு மிகப் பரவலாக கிடைக்கின்றன. இருந்தாலும் இன்னும் கூட பலரும் முதலில் நிலத்தில் முதலீடு செய்வதற்கு தான் முன்னுரிமை தருகிறார்கள். இது தொடர்பாக பிரபல முதலீட்டு ஆலோசகரான நிதின் கவுசிக் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விரிவான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

ரியல் எஸ்டேட் முதலீடு என்பது ஒரு மாயை என குறிப்பிட்டு இருக்கும் நிதின் கவுசிக் அதனை ஒரு உதாரணத்துடன் விளக்கி இருக்கிறார். 1990களில் என்னுடைய பெற்றோர் 10 -12 லட்சம் ரூபாய் மதிப்புக்கு ஒரு வீட்டினை வாங்கினார்கள் . தற்போது அதன் மதிப்பு 1 கோடி ரூபாய் . 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சொத்து 1 கோடி ரூபாய் ஆகி இருக்கிறது பெரிய ஜாக்பாட் என உங்களுக்கு தோன்றலாம் ஆனால் உண்மை அது கிடையாது எனக் கூறியிருக்கிறார்.
ஆண்டுக்கு 10% என்ற காம்பவுண்டிங் விகிதத்தில் இந்த வீட்டின் மதிப்பு வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது, ஆனால் வீட்டில் பராமரிப்பு செலவு, வீட்டுக்கான வரி, சீரமைப்பு செலவு என ஆண்டுக்கு 1 முதல் 2 சதவீதம் தொகையை நாம் செலவு செய்திருப்போம் . மேலும் இந்த சொத்தினை விற்று அடுத்த நாளே நம்மால் பணமாக்கி விடவும் முடியாது.
ஆனால் ஈக்விட்டி சந்தை இதே 1990 களில் இருந்து தற்போது வரையிலான காலகட்டத்தில் சென்செக்ஸ் ஆண்டுக்கு 13 முதல் 14 சதவீதம் என்ற காம்பவுண்டிங் விதத்தில் வளர்ந்திருக்கிறது என கூறுகிறார். 1995 ஆம் ஆண்டில் 1 லட்சம் ரூபாயை இதில் முதலீடு செய்து இருந்தால் அதன் தற்போதைய மதிப்பு 22 லட்சம் ரூபாய் , 10 லட்சம் ரூபாயை முதலீடு செய்து இருந்தால் 2.2 கோடி ரூபாய் . அதாவது வீடை வாங்குவதற்கு பதிலாக என்னுடைய பெற்றோர் ஈக்விட்டியில் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது 2.2 கோடி ரூபாய் என கூறியிருக்கிறார்.
ரியல் எஸ்டேட் முதலீடுகள் நமக்கு நினைவுகளை உண்டாக்கும் , ஆனால் ஈக்விட்டி முதலீடுகள் தான் நம்முடைய சொத்தை வளர்க்கும் எனக் கூறியிருக்கிறார். அதுதான் உங்களுக்கு உண்மையில் செல்வத்தை பெற்று தரும் என சுட்டி காட்டி இருக்கும் அவர் , முதலீடு செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள் ரியல் எஸ்டேட்டுக்கும் மாற்றாக இருக்கக்கூடிய மற்ற முதலீடுகளையும் சிந்தித்துப் பார்க்கலாம் என அறிவுரை வழங்கியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications