வயது கூட கூட கவலையும் கூடத்தான் செய்கிறது. காரணம் முதுமையில் குழந்தைகளுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது.. தங்களுடைய செலவை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். அதற்கு ஏதுவாக சிலர் 40 வயதிற்கு முன்பே முதலீடு செய்யவும் தொடங்கி விட்டனர். வயதான காலத்தில் யாரிடமும் கையேந்தாமல் வாழ வேண்டும் என்று நினைக்கும் நபர்களுக்காக அரசு வழங்கும் பொன்னான திட்டம் தான் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (SCSS) என்று சொல்லப்படுகிற மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் மூலம் மாதா மாதம் ரூ.20,000 வருமானம் பெறுவது எப்படி? என்பதைத் தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.
SCSS திட்டம் இன்றளவும் ஓய்வூதிய நிதியை சேமிக்க விரும்பும் நபர்களுக்கு உற்ற தோழனாய் இருந்து வருகிறது. அரசு SCSS திட்டத்தின் வட்டி விகிதத்தை காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கும். அதாவது இதில் முதலீடு செய்கிறார் என்றால்.. அரசு மாற்றும் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் வட்டி வருமானத்தைப் பெறுவார். ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டிற்கான வட்டி விகிதம் 8.2 சதவீதமாக இருக்கிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ரிஸ்க் எடுக்காமல் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த அரசு திட்டம் உண்மையிலேயே சிறந்த தேர்வு.
எவ்வளவு முதலீடு?: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது மொத்த முதலீட்டு திட்டம். அதாவது நீங்கள் மாத மாதம் முதலீடு செய்ய முடியாது. மொத்தமாக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். குறைந்தபட்சமாக நீங்கள் 1,000 ரூபாய் கூட முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம்.

வட்டி எப்போது வழங்கப்படும்?: SCSS திட்டத்திற்கான வட்டி காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் முதலீட்டாளர்களின் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் வட்டி மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய நான்கு காலாண்டிற்கும் கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 60 வயதான அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இணையலாம். 60 வயதுக்கு முன்னதாகவே விருப்ப ஓய்வு பெற்றவர்களும் சேர முடியும்.
மாதம் ரூ.20,000 வருமானம் பெறுவது எப்படி?: ஒரு நபர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் அப்போது அவரிடம் பிஎஃப் தொகை சுமார் ரூ.30 லட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் அல்லது வேறு எந்த சேமிப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த தொகையை அப்படியே SCSS திட்டத்தில் முதலீடு செய்தால், ஒரு காலாண்டுக்கு தற்போது வழங்கப்படும் 8.2 சதவீத வட்டி அடிப்படையில ரூ.61,500 கிடைக்கும். அதாவது மாதம் ரூ.20,500 கிடைக்கும் வருமானம் கிடைக்கும். இந்த வட்டி தொகை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு கிடைக்கும். இடையில் துரதிஷ்டவசமாக முதலீடு செய்தவர் இறந்துவிட்டால் உடனே முதலீட்டு தொகை அவர் கூறியிருக்கும் நாமினிக்கு வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் வேண்டுமானால் இந்த திட்டத்தின் நன்மையை நீட்டித்துக் கொள்ளலாம்.
கணக்கு திறக்க ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி, பாஸ்போர்ட், பான் கார்டு, டெலிபோன் எலக்ட்ரிசிட்டி பில், பர்த் செர்டிபிகேட் போன்றவற்றை எடுத்துச் செல்லலாம். பல முன்னணி வங்கிகள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை வழங்குகின்றன. அதோடு நீங்கள் போஸ்ட் ஆபீஸ்களிலும் கணக்கு தொடங்க முடியும். இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற முன்னணி வங்கிகளில் கணக்கு தொடங்கலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 வரை வரிவிலக்கு வழங்கப்படுகிறது. உங்கள் ஆண்டு வருமானம் வரி வரம்பிற்குள் வரவில்லை என்றால் படிவம் 15H-ஐ சமர்ப்பித்து டிடிஎஸ் பிடிப்பதிலிருந்து விலக்கு பெறலாம்.
வயதான பிறகு ஏற்படும் மருத்துவச் செலவுகள், திடீர் செலவுகள் போன்றவற்றை எதிர்கொள்ள மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஓய்வு பெற்ற பிறகு வருமானம் நின்று விட்டதை நினைத்து கவலைப்பட தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் தொகையை வைத்துக்கொண்டு உங்கள் மாத செலவுகளை ஈடுசெய்யலாம்.


Click it and Unblock the Notifications