சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பின் "Salary Credited" என்ற மெசேஜ் தரும் மகிழ்ச்சியை வேறு எதுவுமே தராது. மாதச் சம்பளக்காரர்களுக்கு இது நன்றாகப் புரியும். மெசேஜ் வந்த உடனே வாடகை, மளிகை சாமான், கரண்ட் பில் என அனைத்திற்கும் தனித்தனியாக பணத்தை ஒதுக்கி விட்டு மீதமிருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு வெளியில் செல்லலாமா? என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றும்.

ஆனால் ஏதோ ஒரு மூலையில் நாம் வாங்கும் சம்பளத்தை சரியாகத்தான் சேமிக்கிறோமா? அல்லது சரியாகத்தான் செலவு செய்கிறோமா? என்ற எண்ணங்களும் சேர்ந்து வரும். இன்றைய இளையத் தலைமுறையினர் மனதில் ஓடும் இந்த கேள்விக்கான விடையை தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.
இந்தப் பதிவின் மூலம் 50,000 ரூபாய் சம்பளம் பெறும் ஒருவர் தங்களுடைய பணத்தை எப்படி சேமிக்க வேண்டும்? எப்படி செலவு செய்ய வேண்டும்? மற்றும் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான விடை கிடைக்கும்.
ரூ. 50,000 சம்பளத்திற்கு பட்ஜெட் போடுவது எப்படி?: சேமிப்பு, செலவு மற்றும் முதலீடு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நிதி வல்லுநர்கள் பல விதிகளை வகுத்துள்ளனர். அந்த வகையில் வரி நிபுணரான CA நிஷாந்த் சங்கர் ஒரு எளிமையான விஷயத்தை கூறியுள்ளார். ஒருவர் வாங்கும் சம்பளத்தில் சுமார் 60 முதல் 65 சதவீதத்தை தங்கள் வாழ்க்கைச் செலவுகளுக்காக பயன்படுத்த வேண்டுமாம். 20 முதல் 25 சதவீதம் வரையிலான தொகையை சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு ஒதுக்க வேண்டும். மீதம் இருக்கும் 10 முதல் 15 சதவீதத்தை காப்பீடு மற்றும் அவசர கால நிதியாக ஒதுக்க வேண்டும் என்கிறார்.
இதில் சிலர் 50-30-20 என்ற விதியையும் பயன்படுத்துகின்றனர். இந்த விதி உலக அளவில் பிரபலமான விதி என்றே கூறலாம். அதாவது இந்த விதியில் உள்ள 50% என்பது தேவையைக் குறிக்கிறது. 30 சதவீதம் என்பது விருப்பத்தைக் குறிக்கிறது, 20% என்பது சேமிப்பைக் குறிக்கிறது. நீங்கள் சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் இருக்கும்போது இது போன்ற விதிகள் எல்லா சமயங்களிலும் கை கொடுக்காது. நகரங்களில் பொதுவாகவே வாழ்க்கைச் செலவுகள் அதிகமாக இருக்கும். தொடக்கத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கே பணம் அதிகம் செலவாகலாம். எனவே திட்டமிடுவதை விட தொடர்ந்து அதை செயல்படுத்தி சேமிப்பதே முக்கியம் என்கிறார் பேங்க் பஜார் சிஇஓ அதில் செட்டி.
சேமிப்பா? அல்லது முதலீடா? எது ஃபர்ஸ்ட்?: இதற்கு வரி நிபுணர்களின் பதில் என்ன தெரியுமா? இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்பதுதான்.
சேமிப்பு: ரூ.50,000 சம்பளம் பெறும் ஒருவர் அவசரகால நிதியாக 3 முதல் 6 மாதம் வரையிலான செலவிற்கு பணத்தை முன்னரே சேமித்து வைக்க வேண்டும். அதாவது சுமார் 1 முதல் 2 லட்ச ரூபாயை சேமித்தாக வேண்டும். அதே நேரம் முதலீட்டையும் சிறு சிறு தொகையாக தொடங்கி விட வேண்டும். எதிர்பாராமல் வரும் செலவுகளை கையாளவும் அதே நேரத்தில் பணத்தை அதிகரிக்கவும் இது உதவும்.
செலவுகளைக் கட்டுப்படுத்தத் தொடங்குங்கள்: உங்கள் வருமானத்தில் 40 முதல் 50 சதவீதத்திற்கும் மேல் செலவுகள் இருக்கக் கூடாது. எனவே தேவையில்லாத சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் சேமிக்கத் தொடங்கிய உடனேயே பெரிய கடன்களில் சிக்குவது போன்றவற்றை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
ஆசைகளுக்கு செலவு செய்யலாமா?: பட்ஜெட் போட்டு வாழ வேண்டும் என்றால் அதற்காக கஞ்சத்தனமாக வாழ வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை. மாறாக உங்களுடைய ஆசைகளுக்கும் வருமானத்தை செலவு செய்து கொள்ளலாம். ஆனால் இந்த செலவு உங்களுடைய தேவை மற்றும் விருப்பத்தை உணர்ந்து தான் இருக்க வேண்டும். இரண்டுக்குமே வித்தியாசம் உள்ளது.
தேவை என்பது அவசியத் தேவையைக் குறிக்கிறது. உதாரணமாக நீங்கள் சாப்பிடும் உணவு, வாடகை, மருத்துவம், நீங்கள் வாங்கும் ஆடைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். விருப்பம் என்பது உடனே ரிலீஸான லேட்டஸ்ட் ஐபோனை வாங்க வேண்டும் என்று நினைப்பது. எனவே இப்படிப்பட்ட விருப்பங்களை சற்று தள்ளி வைத்து உங்கள் பட்ஜெட்டில் 10 முதல் 15 சதவீதத்தை தேவைக்காக அதிகம் பயன்படுத்தத் தொடங்குங்கள். பொழுதுபோக்கிற்கு பயன்படுத்துவதற்கு ஒரு தனி வங்கி கணக்கை வைத்துக்கொண்டு அவ்வப்போது நீங்கள் நினைக்கும் தொகையை அதில் போட்டு வரலாம். அந்தப் பணம் தீர்ந்து விட்டால் அடுத்த மாதம் சம்பளம் வரும் வரை காத்திருப்பது உங்களுடைய நிதி நலனை மேம்படுத்த உதவும்.
முதலீடு: சிலர் சம்பள உயர்வு கொடுக்கட்டும் அதன் பிறகு சேமித்துக் கொள்ளலாம் என்று நினைக்கத் தொடங்குவார்கள். இது முற்றிலும் தவறு. கிடைக்கும் சம்பளத்தில் ஒரு சிறு தொகையாவது முதலீடு செய்ய வேண்டும். அதற்காக ஒரே நாளில் பணம் இரட்டிப்பாகும், ஒரே மாதத்தில் பணம் இருட்டிப்பாகும் என்று கூறும் ரிஸ்க்கான திட்டங்களில் பணத்தை போட வேண்டாம். குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க நினைப்பது மொத்த முதலீட்டையும் சீர்குலைத்து விடும் என்பதுதான் நிதி நிபுணர்களின் எச்சரிக்கை. எனவே பாதுகாப்பான வருமானம் வழங்கும் திட்டங்கள் குறித்து பரிசீலிக்கலாம்.
ரூ.50,000 சம்பளத்தை எப்படி தான் நிர்வாகம் செய்ய வேண்டும்? என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. இதற்கு எந்த ஒரு வரைமுறையும் கிடையாது. முதலில் உங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். பிறகு எதிர்காலத்தில் வரும் அவசர தேவைகளுக்காக ஒரு நிதியை உருவாக்குங்கள்.
முதலீட்டை எவ்வளவு சீக்கிரம் தொடங்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்கிக் கொள்ளலாம். செலவுகளை எப்போதும் உங்கள் பட்ஜெட்டுக்குள் வைத்திருங்கள். பட்ஜெட் போடும்போது அதன்படி 100 சதவீதம் நடந்தே ஆக வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. ஆனால் அதை தொடர்ந்து கன்சிஸ்டெண்டாக செய்ய முயற்சித்தால் உங்கள் நிதி நலனைப் பாதுகாக்க முடியும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பது இங்கு முக்கியமே இல்லை. சம்பாதித்த பணத்தை எவ்வளவு புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம்.


Click it and Unblock the Notifications