சொந்த வீடு என்பது நம்மில் பலரின் வாழ்நாள் கனவு. ஆனால் அந்தக் கனவை நனவாக்க நாம் வாங்கும் வீட்டுக் கடன் ஆனது, பல நேரங்களில் பெரும் சுமையாக மாறிவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாங்கிய அசலை விட, அதிக வட்டி செலுத்துவது தான்.
கஷ்டப்பட்டு உழைக்கும் பணமெல்லாம் வட்டிக்கே பெரும்பகுதி போகிறதே என்று கவலைப்படுபவரா நீங்கள்? கவலையே வேண்டாம். ஒரு சிறு நிதி திட்டமிடல் மூலம், உங்கள் வீட்டுக் கடன் சுமையை குறைக்க முடியும். நிபுணர்கள் குறிப்பிடும் அந்த மேஜிக் வழிமுறைகள் என்ன, எப்படி 50 லட்சம் ரூபாய் கடனில் 12 - 18 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த முடியும். அது எப்படி சாத்தியமாகும்? உங்கள் கடனை சீக்கிரம் முடிப்பதோடு, லட்சக்கணக்கில் பணத்தை சேமிக்க உதவும் அந்த ரகசிய யுக்திகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

கடன் சுமை!
சொந்த வீடு என்பது அவசியமானதாக இருந்தாலும், மாத தவணைகளை கட்டித் தீர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. இந்த சுமை எப்போது தான் குறையும் என்ற கவலையே வேண்டாம். இது குறித்து சிஏ நிதின் கௌஷிக், பேட்டி ஒன்றில் 50 - 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடனில், சுமார் 12 - 18 லட்சம் ரூபாய் வரையில் எப்படி மிச்சப்படுத்தலாம் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அதற்கு உங்களிடம் கூடுதல் வருமானம் தேவையில்லை. கடினமான நடைமுறைகளும் இல்லை. நீங்கள் உங்கள் மாத தவணையில் செய்யும் சிறிய மாற்றம், லட்சக்கணக்கில் வட்டியை மிச்சப்படுத்த உதவும்.
சவால்கள் என்ன?
பொதுவாக வீட்டுக் கடன் என்றாலே நீண்ட கால கடன்களாக உள்ளது. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு 50 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனாக வாங்கி இருக்கிறீர்கள் என்றால், அதை திருப்பி செலுத்தி முடிக்கும்போது கிட்டத்தட்ட 1 கோடி ரூபாயை நெருங்கியிருக்கும். கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தின் பெரும்பகுதி இப்படி வட்டிக்கே சென்று விடும். ஆனால் இதையும் சாமர்த்தியமாய் திட்டமிட்டால் மாற்ற முடியும்.
அது என்ன மேஜிக்?
வழக்கமாக மாதம் ஒரு முறை தவணை என ஆண்டுக்கு 12 தவணைகளை செலுத்துவோம். அதற்கு பதிலாக உங்கள் உங்கள் ஒரு மாத தவணை தொகையை இரண்டாகப் பிரித்து 15 நாட்களுக்கு ஒருமுறை செலுத்துங்கள். அவ்வாறு 15 நாட்களுக்கு ஒரு முறை தவணை தொகையை செலுத்தும் போது, ஒரு வருடத்தில் மொத்தம் 26 அரை தவணைகளை செலுத்தியிருப்பீர்கள். இது மொத்தம் 13 மாத தவணைகளுக்கு சமமாகும். அதாவது உங்களுக்கு தெரியாமலேயே ஆண்டுக்கு ஒரு மாத தவணை கூடுதலாக செலுத்துகிறீர்கள். இந்த கூடுதலாக தவணை தொகையானது, உங்கள் கடனின் அசல் தொகையில் கழியும். இதனால் அசலும் வேகமாக குறையும். அதன் மேல் விதிக்கப்படும் வட்டியும் குறையத் தொடங்கும்.
எவ்வளவு மிச்சம்?
உங்கள் வீட்டுக் கடன் 50 - 60 லட்சம் ரூபாயாக இருந்து, வட்டி விகிதம் 8 - 9% என வைத்துக் கொள்வோம். உங்கள் கடனுக்கான காலம் 5- 7 ஆண்டுகள் முன்னதாகவே முடிவடையும். வட்டித் தொகையிலும் 12 - 18 லட்சம் வரை மிச்சப்படுத்தலாம். இருப்பினும் இந்த முறையை நீங்கள் கடன் வாங்கியிருக்கும் வங்கி ஏற்றுக் கொள்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications